டெங்கு நிலவரம்: ஆய்வு செய்ய மத்திய அரசின் மருத்துவ குழுவினர் தமிழகம் வருகை

தமிழகத்தில் நிலவும் டெங்கு பாதிப்பின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, 5 பேர் கொண்ட மத்திய அரசின் மருத்துவ குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் டெங்கு பாதிப்பின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, 5 பேர் கொண்ட மத்திய அரசின் மருத்துவ குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 12,000 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், சுமார் 1,150 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளிலும், சுகாதார நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்காக சுகாதார துறை உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் வியாழக்கிழமை பிரதமர் மோடியை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் நிலவும் டெங்கு சூழல் குறித்து பிரதமரிடம் எடுத்துக்கூறியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், ”தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நோய் பரிசோதனை கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் டெங்கு குறித்து விழிப்புணர்வு எடுக்கப்பட்டு வருகிறது.”, என கூறினார்.

அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் மருத்துவ குழுவை தமிழகத்துக்கு அனுப்பவும், தேவைகள் குறித்து அறியவும் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்ததாக, ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

அதன்படி, மத்திய அரசின் 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வெள்ளிக்கிழமை சென்னை வந்தனர். இந்த குழுவில், அசுதோஷ் பிஷ்வாஸ் (எய்ம்ஸ் மருத்துவர்), சுவாதி துப்லிஸ் (குழந்தைகள் நல மருத்துவர்), கவுஷல் குமார் (பூச்சியினால் பரவும் நோய் கட்டுப்பாட்டு மையம்), கல்பனா பர்வா (இணை இயக்குநர், பூச்சியினால் பரவும் நோய் கட்டுப்பாட்டு மையம்), வினய் கர்க் ( துணை இயக்குனர், பூச்சியினால் பரவும் நோய் கட்டுப்பாட்டு மையம்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

“இன்று நடைபெற கூடிய அரசு செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடுவு எடுக்கப்படும். முதலில் எந்த மருத்துவமனை சென்று ஆய்வு செய்வது எத்தனை நாட்கள் தங்கி ஆய்வு செய்வது என்ற முடிவு எடுக்கப்படும். அதன்பின் ஆய்வு குறித்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும்.”, என குழுவை சேர்ந்த கல்பனா பர்வா தெரிவித்தார். இக்குழுவினர் இன்று காலையில் தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு, அக்குழுவினர் கள ஆய்வுக்கு செல்லவுள்ளனர்.

சென்னை குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

டெங்கு ஒழிப்புக்காக மத்திய அரசு தமிழகத்துக்கு ஏற்கனவே ரூ.14 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆய்வுக்கு பிறகு கூடுதல் நிதி வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

×Close
×Close