ஓ.பன்னீர்செல்வம் - பிரதமர் மோடி 1 மணி நேரம் சந்திப்பு : அமைச்சர் தங்கமணியை தவிர்த்து சென்றதால் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம் தனியாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சியில் தனது அதிருப்திகளை பட்டியல் இட்டதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் 1 மணி நேரம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லாத அதிருப்திகளை பட்டியல் இட்டதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தவர். கட்சியிலும் ஆட்சியிலும் ஜெயலலிதா தனக்கு அடுத்தபடியாக ஒருவரை அடையாளம் காட்டினார் என்றால், அது ஓபிஎஸ்-தான்! அதிமுக-வில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதாலும் இவரது மாஸ் எகிறியது. இதனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இவர் டெல்லியின் செல்லப்பிள்ளை ஆனார்.

ஆனால் ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற டெல்லி அவருக்காக உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை. அவரால் அதிமுக-வில் மெஜாரிட்டி நிர்வாகிகளின் ஆதரவை பெற முடியவில்லை. எனவே ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அனுசரணையாக டெல்லி மாறியது.

ஓ.பன்னீர்செல்வமும் அரசியல் ரீதியான சில நெருக்கடிகளால், எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதே தவிர, அரசு நிர்வாகத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. நேற்றைய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் வரை ஜெயலலிதா பாணியில், ‘நான் உத்தரவிட்டேன்’ என்றுதான் எடப்பாடி பழனிசாமியின் அதிகார பூர்வ அறிக்கைகள் வருகின்றன.

அதாவது, ஆட்சி ரீதியான முடிவுகளை முதல்வர் என்ற அடிப்படையில் துணை முதல்வரின் கலந்தாலோசனை கூட இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எடுக்க முடிகிறது. ஆனால் கட்சி ரீதியாக இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் அனுமதி இல்லாமல், ஒரு கிளைச் செயலாளரைக்கூட ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்-ஸால் நீக்க முடியாது.

ஆக, அணிகள் இணைப்பு என்ற பெயரில் இபிஎஸ் விரித்த வலைக்குள் ஓபிஎஸ் சிக்கிக் கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் குமுறியபடியே இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் கடந்த 6-ம் தேதி இரட்டை இலை சின்னம் வழக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் டெல்லியில் முகாமிட்டார். ஆனால் அன்று அவர் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு செல்லவில்லை.

அன்றே பிரதமர் மோடியை சந்திக்கும் திட்டத்துடன் அவர் டெல்லி சென்றிருந்ததாகவும், ஆனால் மோடி பிஸியாக இருந்ததால் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே மீண்டும் 13-ம் தேதி இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற இருந்ததையொட்டி, பிரதமரிடம் ஓபிஎஸ் தரப்பில் ‘அப்பாய்ன்மென்ட்’ கேட்கப்பட்டது.

இந்த முறை பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’, இன்று (12-ம் தேதி) காலை 11 மணிக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையே இரட்டை இலை சின்னம் வழக்கை 16-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது. ஆனாலும் அதைவிட முக்கியமாக பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’டை கருதும் ஓபிஎஸ் தரப்பு, நேற்று (11-ம் தேதி) இரவு 7.45 மணிக்கு விமானம் மூலமாக டெல்லி சென்றனர்.

ஓபிஎஸ்.ஸுடன் அவரது மாஜி அணி தளபதிகளான கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் ஆகியோரும் டெல்லி சென்றனர். டெல்லி பயண நோக்கம் குறித்து ஓபிஎஸ்.ஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘பிரதமரை சந்தித்துவிட்டு சொல்கிறேன்’ என சஸ்பென்ஸ் வைத்தார்.

இதற்கிடையே மின் துறை அமைச்சர் தங்கமணியும் நேற்று இரவு டெல்லி சென்றார். இபிஎஸ் தரப்பில் அண்மைகாலமாக டெல்லி ‘லாபி’யை கவனித்துக் கொள்பவர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அமைச்சர் தங்கமணியும், ஓபிஎஸ்.ஸுடன் இணைந்து பிரதமரை சந்திப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இன்று பகல் 11 மணிக்கு பிரதமரை அவரது இல்லத்தில் ஓபிஎஸ் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்கான நிலக்கரி தேவை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரிலான ஒரு கடிதத்தை பிரதமரிடன் அவர் சமர்ப்பித்தார். மின் துறை சம்பந்தமான ஒரு சந்திப்புக்கு டெல்லியில் இருந்த மின் துறை அமைச்சரை தவிர்த்துவிட்டு, ஓபிஎஸ் சென்றது பலத்த விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

அதேசமயம் பிரதமரை சந்திக்க சென்றபோது, ஓபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி உடன் சென்றார். பிரதமர் மோடியும், ஓபிஎஸ்-ஸும் அரசியல் ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு அம்சங்களை விவாதித்ததாக தெரிகிறது. குறிப்பாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம், குட்கா ஊழல் மற்றும் ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்குகளால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, சசிகலா பரோலில் வந்ததையொட்டிய நிகழ்வுகள் குறித்து ஓபிஎஸ் விவரித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ஆட்சி ரீதியாக முக்கிய முடிவுகளில் தனது பங்களிப்பு இல்லாத நிலை நீடிப்பதாகவும், இதனால் தன்னை நம்பிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் மோடியிடம் ஓபிஎஸ் சுட்டிக்காட்டியதாக சொல்கிறார்கள். துணை முதல்வராக பதவியேற்றபிறகு, பிரதமரை ஓபிஎஸ் சந்தித்தது இதுதான் முதல் முறை! எனவே அதற்கான வாழ்த்து பெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பாகவும் தமிழக அரசு வட்டாரங்களில் இதை குறிப்பிடுகிறார்கள்.

அரசியல் வட்டாரமோ, ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும்தான் என்றால், முதல்வரும் துணை முதல்வருமே கைகோர்த்தபடி டெல்லிக்கு போயிருப்பார்கள். ஏனென்றால், பிரதமரை சந்திப்பதைவிட, எடப்பாடிக்கும் வேறு பெரிய வேலைகள் இல்லை. ஆட்சி ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் தான் புறக்கணிக்கப்படுவதை பட்டியலிடவே இந்தப் பயணத்தை ஓபிஎஸ் பயன்படுத்திக் கொண்டார்’ என்கிறார்கள் அவர்கள்.

எனினும் பிரதமருடன் சுமார் 1 மணி நேர சந்திப்பை முடித்துவிட்டு வந்த ஓபிஎஸ், ‘மின் துறை அமைச்சர் தங்கமணியும் நானும் பிற்பகலில் இதே கோரிக்கையுடன் மத்திய மின் துறை அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். அதனால்தான் அவர் வரவில்லை. தமிழக நலன்கள் தொடர்பாக முதல்வரின் கடிதத்தை கொடுக்க வந்தேனே தவிர, இதில் அரசியல் இல்லை. எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை’ என விளக்கம் அளித்தார்.

அதிமுக ஆட்சிக்கு இருக்கும் ஆயிரம் பிரச்னைகளில் இபிஎஸ்-ஓபிஎஸ் லடாயும் இணைந்து கொண்டிருக்கிறது.

 

×Close
×Close