Advertisment

ஓபிஎஸ்.ஸுக்கு ‘ஒய்’ பிரிவு... இபிஎஸ்.ஸுக்கு ‘இசட் பிளஸ்’? அடடே ‘பாதுகாப்பு’ அரசியல்!

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதைப் போல, இபிஎஸ்-ஸுக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்புக்கு முயற்சி நடப்பதாக தெரிய வந்திருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
deputy cm o.panneerselvam, cm edappadi palaniswami, mk stalin, jeyalalitha, dr ramadoss

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதைப் போல, இபிஎஸ்-ஸுக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்புக்கு முயற்சி நடப்பதாக தெரிய வந்திருக்கிறது. இந்த ‘பாதுகாப்பு’ அரசியல் இப்போது விவாதம் ஆகிவிட்டது.

Advertisment

ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா அணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது முதல், டெல்லியின் செல்லப்பிள்ளை ஆனார். அப்போது தேனி உள்ளிட்ட சில இடங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, கட்சியினர் சிலர் தகராறு செய்ததாக புகார்கள் கிளம்பின. அதைத் தொடர்ந்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது அணியினர் மத்திய அரசுக்கு புகார் அனுப்பினர்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு அந்தப் புகாரின் அடிப்படையில் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இதன்படி 11 வீரர்கள் அடங்கிய மத்திய ரிசர்வ் படையினர், 24 மணி நேரமும் ஷிப்ட் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆகிவிட்டார். இப்போது மாநில போலீஸும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. ஆனாலும் மத்திய அரசு கொடுத்த ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட வில்லை.

இந்தச் சூழலில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு தேவை என மத்திய அரசுக்கு தமிழக உளவுப்பிரிவு போலீஸார் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. துணை முதல்வரான ஓபிஎஸ் மத்திய பாதுகாப்புடன் வலம் வரும்போது, முதல்வரான இபிஎஸ் சாதாரண போலீஸ் பாதுகாப்பில் சுற்றி வருவது சரியல்ல என மாநில அரசு உயர் அதிகாரிகள் கருதுவதாக கூறப்படுகிறது.

தவிர, முதல்வரும் துணை முதல்வரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற வேளைகளில் இந்தப் பாதுகாப்பு வேறுபாடு முதல்வரை விட துணை முதல்வருக்கு அதிக முக்கியத்துவத்தை உருவாக்குவதுபோல இருப்பதாக சொல்கிறார்கள். இந்த அடிப்படையிலேயே துணை முதல்வருக்கு வழங்கப்பட்டிருப்பதைவிட கூடுதல் பாதுகாப்பான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை உளவுப்பிரிவு அதிகாரிகள் பரிந்துரை செய்வதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்புதான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு என்றால், 35-க்கும் அதிகமான மத்திய படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள். அவர்களில் 10 பேர் வரை கமாண்டோ பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவருக்கும், கருணாநிதி ஆக்டிவாக இல்லாததால் அவருக்கும் இப்போது அந்தப் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுவிட்டது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு முந்தைய திமுக ஆட்சியில் மதுரையில் நடந்த தாக்குதல் முயற்சிக்கு பிறகு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே பனிப்போர் தொடர்வதாக கூறப்படும் நிலையில், ஓபிஎஸ்-ஸை விட அதிகமாக இபிஎஸ்-ஸுக்கு மத்திய பாதுகாப்பு கேட்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு கண்டனங்களும் குவிகின்றன.

பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு இசட் பிளஸ் எனப்படும் கருப்புப்பூனைப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் இன்றைய நிலையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 17 பேருக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவர்களின் உயிருக்கான அச்சுறுத்தல் அளவிட முடியாது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. தேசப்பாதுகாப்பு, மாநிலப் பாதுகாப்பு சார்ந்த ஏதேனும் அதிராடியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. டெங்கு கொசுக்களைக் கூட ஒழிக்காத பழனிச்சாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறினால் குழந்தைகள் கூட சிரிக்கும்.

சசிகலா மற்றும் தினகரன் ஆதரவுடன் தமிழக முதலமைச்சர் பதவியை ஏலத்தில் எடுத்து அமர்ந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, தம்மை ஓர் ஆண் ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொண்டு அவரைப் போலவே செயல்பட்டு வருகிறார். எங்கு சென்றாலும் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான காவலர்களை நிறுத்தி, அதன்காரணமாக தமது தகுதி உயர்ந்துவிட்டதாக நினைத்து புளங்காகிதம் அடைந்து கொள்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு 22 பேர் கொண்ட இசட் பிரிவு பாதுகாப்பும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 பேர் கொண்ட ஒய் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்படுவதால் அவர்களைவிட அதிகமாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இணையான இசட் பிளஸ் பாதுகாப்பு கிடைத்தால் பந்தாவாக இருக்கும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு பரிந்துரையை தமது கட்டுப்பாட்டில் செயல்படும் உளப்பிரிவின் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பச் செய்திருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி எந்த தியாகத்தையும் செய்துவிடவில்லை.... ஊழல் மட்டும் தான் செய்து வருகிறார். அவருக்கு கறுப்புப்பூனைப்படை பாதுகாப்பு வழங்குவது அப்படைக்கு செய்யும் அவமரியாதை ஆகும். எனவே, பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் காவல் கோரப்பட்டால் அதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.’ என கூறியிருக்கிறார் ராமதாஸ்.

 

Mk Stalin Dr Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment