Advertisment

அதிமுக புதிய செய்தி தொடர்பாளர்கள் யார், யார்? பட்டியல் வரும்... ஆனா?

அதிமுக செய்தி தொடர்பாளர்களுக்கு தடை விதித்து இரு வாரங்கள் கடந்த நிலையில் புதிய பட்டியல் வராததால் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK, Office Bearers, District Secretaries, Meeting

அதிமுக செய்தி தொடர்பாளர்களுக்கு டி.வி விவாதத்தில் பங்கேற்க தடை விதித்து இரு வாரங்கள் கடந்த நிலையில் புதிய பட்டியல் வராததால் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisment

அதிமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களின் பட்டியலை கடந்த ஆண்டு ஜூனில் ஜெயலலிதா வெளியிட்டார். 14 பேர் அடங்கிய அப்போதைய அதிமுக செய்தி தொடர்பாளர்கள் பட்டியல் வருமாறு :

1. பொன்னையன் (முன்னாள் அமைச்சர்), 2. பண்ருட்டி.ராமச்சந்திரன் (முன்னாள் அமைச்சர்), 3. ஆர்.வைத்திலிங்கம் (கழக அமைப்புச் செயலாளர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்), 4. பா.வளர்மதி (கழக இலக்கிய அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர்), 5. நாஞ்சில் சம்பத் (தலைமைக் கழகப் பேச்சாளர்), 6. டாக்டர் கோ.சமரசம் ( தலைமைக் கழகப் பேச்சாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), 7. எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் (முன்னாள் மத்திய அமைச்சர்), 8. டாக்டர் வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர்), 9. சி.ஆர். சரஸ்வதி (கழக மகளிர் அணி துணைச் செயலாளர்), 10. பேராசிரியர் தீரன் (தலைமைக் கழகப் பேச்சாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), 11. கௌரிசங்கர் (சிவகங்கை மாவட்டம்), 12. பாண்டியராஜன் (ஆவடி சட்டமன்றத் தொகுதி), 13.கோவை செல்வராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), 14. நிர்மலா பெரியசாமி (தலைமைக் கழகப் பேச்சாளர்)

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்தப் பட்டியலில் இருந்த பொன்னையன், மாஃபாய் பாண்டியராஜன், நிர்மலா பெரியசாமி ஆகிய மூவர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றார்கள். இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு, நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் டி.டி.வி.தினகரன் அணியில் உள்ளனர்.

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் 14 பேரில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் சமீப நாட்களாக எந்த அணியிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. எனவே 11 பேர் இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுக.வில் தொடர்வது உறுதியாக தெரிகிறது.

ஆனால் மேற்படி 11 பேரில் பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், வளர்மதி, அமைச்சர் பாண்டியராஜன், நிர்மலா பெரியசாமி ஆகியோர் ரெகுலராக விவாதங்களில் பங்கேற்பதில்லை. எனவே வைகை செல்வன், சமரசம், கோவை செல்வராஜ், தீரன், கவுரி சங்கர் ஆகிய 5 பேர்களை மட்டுமே டி.வி. விவாதங்களுக்கு அழைக்க வேண்டிய நெருக்கடி சேனல்களுக்கு ஏற்பட்டது.

இதில் இன்னொரு நெருக்கடி, மேற்படி 5 பேருமே நிரந்தரமாக சென்னையில் வசிப்பவர்கள் இல்லை. இவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால், அதிமுக சார்பில் ‘டிபேட்’களுக்கு ஆள் கிடைக்காமல் சேனல்கள் தவிக்க வேண்டியிருக்கிறது. இதையடுத்தே அதிமுக.வின் கூட்டணி என கூறிக்கொள்ளும் ஓரிரு இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள், அதிமுக.வில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஓரிரு பிரமுகர்களை அந்தக் கட்சி சார்பில் பேச தொலைக்காட்சிகளில் அனுமதித்தனர்.

அண்மையில் ஓகி புயல் பாதிப்புகள் மற்றும் அதைத் தொடர்ந்து அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அவர்கள் தொலைக்காட்சிகளில் சரியான விவாதத்தை முன்வைக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 28-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘அதிமுக சார்பில் புதிதாக செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அதுவரை கட்சி சார்பில் டி.வி. விவாதங்களுக்கு யாரும் அனுப்பப்பட மாட்டார்கள்’ என கூறப்பட்டது.

ஆனால் அதன்பிறகும் அதிமுக ஆதரவாளர்கள் என்ற பெயரில் ஜவஹர் அலி உள்ளிட்ட சிலர் தொலைக்காட்சிகளில் தோன்றினார்கள். இதனால் இவர்களது கருத்தே, அதிமுக.வின் கருத்து என்பதாக ஒரு தோற்றம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் நேற்று (15-ம் தேதி) இபிஎஸ்.ஸும், ஓபிஎஸ்.ஸும் மீண்டும் ஒரு கூட்டறிக்கை விட்டனர். அந்த அறிக்கையில், ‘கூட்டணியினர் அல்லது ஆதரவாளர்கள் என டி.வி.க்களில் பேசுவோரின் கருத்து, அதிமுக.வின் அதிகாரபூர்வ கருத்தல்ல’ என தெளிவு படுத்தினார்கள்.

ஆக, அதிமுக சார்பில் தொலைக்காட்சிகளில் இப்போதைக்கு யாரும் பங்கேற்க வேண்டாம் என்கிற தொனியே முதல்வர் மற்றும் துணை முதல்வரின் அறிக்கைகளில் தெரிகிறது. இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து இரட்டை இலை சின்னத்தை பெற்ற பிறகும் அதிமுக நிர்வாகிகளில் யாரையும் மாற்றும் நடவடிக்கையை இதுவரை தொடங்கவில்லை.

அதிமுக ஆட்சிமன்றக் குழுவில் கூட ஏற்கனவே ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளுடன் கூடுதலாக மட்டுமே சிலரை நியமித்தனர். டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக வெளிப்படையாக இயங்கும் நிர்வாகிகளைக்கூட இன்னும் நீக்காமலேயே இருக்கிறார்கள். எனவே ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட செய்தி தொடர்பாளர்களில் நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி ஆகிய இருவரையும் விடுவித்துவிட்டு எஞ்சியவர்களை மீண்டும் செய்தி தொடர்பாளர்களாக இடம்பெறச் செய்வார்கள். கூடுதலாக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளில் இருந்தும் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

குறிப்பாக ஓபிஎஸ் அணியில் மைத்ரேயன், வழக்கறிஞர்கள் பாபு முருகவேல், தூத்துக்குடி செல்வம், டாக்டர் அழகு தமிழ்செல்வி ஆகியோரும், இபிஎஸ் அணியில் கோகுல இந்திரா உள்ளிட்ட சிலரும் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இடம்பெற ஆர்வமாக உள்ளனர். இரு அணிகளையும் பேலன்ஸ் செய்கிற விதமாக புதிய பட்டியலை வெளியிடுவது இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு அவ்வளவு சுலபமான பணி இல்லை.

இரு வாரங்களாக அதிமுக.வுக்கு அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்கள் யாரும் இல்லாத நிலையில், புதிய செய்தி தொடர்பாளர்கள் துரிதமாக நியமிக்கப்படுவதற்கான அறிகுறிகளும் இல்லை. ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தருணத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க செய்தி தொடர்பாளர்கள் இல்லாதது, கட்சிக்கு இடைத்தேர்தலில் பின்னடைவை உருவாக்கும்’ என நிர்வாகிகள் சிலர் ஆதங்கப்படுகின்றனர்.

ஆனால் வேறு சிலரோ, ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் டி.வி. விவாதங்களில் பெரும்பாலும் பண வினியோகம் தொடர்பாகவே ‘டிபேட்’கள் நடக்கும் வாய்ப்பு உண்டு. அந்த நேரத்தில் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்கள் ஏதாவது உளறிக் கொட்டினால், தேர்தல் ஆணையத்தில் அது புதுப் பிரச்னைகளை உருவாக்கும். அதற்காகவே செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும் வரை செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்படும் வாய்ப்பு குறைவே!’ என்கிறார்கள் அவர்கள்.

 

Ttv Dhinakaran Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment