இலங்கையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புதிய மசோதாவை திரும்பப் பெற மாட்டோம் என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், மீனவர்களின் பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

இதனிடையே, இலங்கை மீன்வளத்துறையின் அனுமதி பெறாமல் ஆழ்கடலில் மீன்பிடித் தொழில் நடத்தும் இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு மதிப்புப்படி ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதேபோல், எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை கட்டுபடுத்தும் வகையில், ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதா ஒன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கலான புதிய மசோதாவை ஏற்க முடியாது என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மசோதாவை திரும்பப் பெறக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், புதிய மசோதாவை திரும்பப் பெற மாட்டோம் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர திட்டவட்டம் தெரிவித்துள்ளார். “புதிய மசோதாவை திரும்பப் பெறுவது அல்லது மாற்றம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது இந்திய மீனவர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து மீனவர்களுக்குமானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.