Advertisment

மோடி அரசால் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க வேண்டி இருக்கும் - வைகோ எச்சரிக்கை!

நாட்டின் எதிர்கால நெருக்கடிகள் குறித்தும் பல்வேறு தரப்புகளில் இருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கி இருப்பதை மோடி அரசு அலட்சியப்படுத்தி வருகின்றது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மோடி அரசால் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க வேண்டி இருக்கும் - வைகோ எச்சரிக்கை!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சியின் 40 மாத கால ஆட்சியில், நாடு அனைத்துத் துறைகளிலும் படு தோல்வி அடைந்து இருக்கின்றது. இந்துத்துவ சக்திகள் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கும், ஜனநாயகத்துக்கும் விடுத்துள்ள அறைகூவல்களால் கொந்தளிப்பான சூழல் நிலவுவது ஒரு புறம்; மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி எழுப்பி வந்த “வளர்ச்சி முழக்கம்” வெற்றுக் கூப்பாடு என்பதும் வெட்ட வெளிச்சம் ஆகி வருகின்றது.இந்தியப் பொருளாதாரம் அதல பாதாள வீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கின்றது.

Advertisment

2015 ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடாக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 7.1 விழுக்காடாக சரிந்தது. நடப்பு ஆண்டில், முதல் காலாண்டில் 5.7 விழுக்காடாகப் பெரும் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது. பன்னாட்டுச் செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவை இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டி இருக்கின்றன. அதில் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்றவை பொருளாதார சரிவிற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் பிரதமர் மோடி கடந்த மாதம் 26 ஆம் தேதி நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் தலைமையில் பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்தார். இக்குழுவில் நிதி ஆயோக் தலைமை ஆலோசகர் ரத்தன் வாட்டால், பொருளாதார வல்லுநர்கள் சுர்ஜித் பல்லா, ரத்தின்ராய், ஆஷிமா கோயல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் புது தில்லியில் நேற்று அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியமும் கலந்துகொண்டார். இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிபேக் தேப்ராய், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்று கூறி இருக்கின்றார்.

ஜனநாயக நாட்டில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை என்பது முதன்மையானது. நாடாளுமன்றத்தையும் துச்சமாக கருதுகின்ற பா.ஜ.க. ஆட்சியாளர்களிடம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்க்க முடியாததுதான். ஆனால், இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி பற்றியும், நாட்டின் எதிர்கால நெருக்கடிகள் குறித்தும் பல்வேறு தரப்புகளில் இருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கி இருப்பதை மோடி அரசு அலட்சியப்படுத்தி வருகின்றது.

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் அரசில் இந்தியாவின் நிதித்துறை மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றிய யஷ்வந்த் சின்கா, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பிரதமரிடம் கலந்துரையாட விருப்பம் தெரிவத்தபோது அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் யஷ்வந்த் சின்கா தனது கருத்துக்களை பத்திரிகையில் கட்டுரையாக வெளியிட்டார்.

தொழில்துறை, உற்பத்தித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் சேவைத் துறைகள் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றன. ஒட்டுமொத்த வேலை வாய்ப்பு சுருங்கிவிட்டது என்று பொருளாதார வீழ்ச்சி பற்றி கருத்துக் கூறிய யஷ்வந்த் சின்கா அவர்களை மத்திய அமைச்சர்கள் சிறுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பத்திரிகையாளருமான அருண்ஷோரி, இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூட்டணி நாட்டுக்கு கேடு செய்து வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். எதிர்க்கட்சிகளை விட பா.ஜ.க. தலைவர்களே மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களை முன் வைக்கின்றார்கள்.

இவற்றை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் நடத்துவதும், அனைத்துக் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடுவதும் தான் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான பாதையாகும். அதைவிடுத்து ஏதேச்சாதிகார மனப்பான்மையுடன் ஆட்சி நிர்வாகம் செயல்படுமானால் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment