Advertisment

குட்கா விற்பனை ஊழலில் சிபிஐ விசாரணை தேவை: வைகோ அறிக்கை!

குட்கா விவகாரத்தில் இவ்வளவு உண்மைகள் இருக்கும்போது, “தமிழக அரசிடம் இது தொடர்பாக ஆவணங்கள் எதுவும் இல்லை” என்று மனு தாக்கல் செய்திருப்பது ஏன்?

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
குட்கா விற்பனை ஊழலில் சிபிஐ விசாரணை தேவை: வைகோ அறிக்கை!

குட்கா விற்பனை ஊழல் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றிய டி.கே.இராஜேந்திரன், ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெறும் நாளில், இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

டி.ஜி.பி., டி.கே.இராஜேந்திரன் பணி நீட்டிப்பு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், “சென்னையில் 2016 இல் வருமான வரித்துறை நடத்திய சோதனைகளின் போது தடை செய்யப்பட்ட குட்கா உற்பத்தி நிறுவனங்களிடம் சில ஆவணங்களைப் பறிமுதல் செய்தது. அவற்றில் மாநில அமைச்சர் மற்றும் சில காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் சிக்கின. அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த டி.கே.இராஜேந்திரன் மீதும் புகார் எழுந்தது. தமிழக முதல்வர் “இந்த விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உள்ளது ” என்றார்.

இந்நிலையில், புகாருக்கு உள்ளானவர் காவல்துறை தலைமை இயக்குநராக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதற்கு தடை விதிக்க வேண்டும். குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையிடமிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஜூலை 17 இல் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் வழக்கறிஞர், “தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனைக்கு அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சம் வழங்கப்பட்டதாக தமிழக அரசுக்கு மத்திய வருமான வரித்துறை கடந்த 2016 ஜூலை 9 இல் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், டி.கே.இராஜேந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

ஆனால் தமிழக அரசின் வழக்கறிஞர் “வருமான வரித்துறையிடமிருந்து தமிழக அரசுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை” என்று தெரிவித்தார்.

இவ்வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜூலை 20 இல் தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், “வருமான வரித்துறையினரிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை” என்று தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் அது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில ஏடு ஜூலை 21 இல் வெளியிட்டுள்ள புலனாய்வுச் செய்தியில் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறது.

வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு முதன்மை இயக்குநர் பி.ஆர்.பாலகிருஷ்ணன், அப்போதைய தலைமைச் செயலாளர் பி.ராமமோகனராவை ஆகஸ்டு 12, 2016 அன்று நேரடியாகச் சந்தித்துள்ளளார். அப்போது குட்கா உற்பத்தியாளர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அளித்துள்ளார். தமிழக காவல்துறை தலைவர் அசோக்குமாரிடமும் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையில், “39.91 கோடி ரூபாய் அமைச்சர் மற்றும் இரண்டு காவல்துறை உயர்அதிகாரிகளுக்கு கையூட்டு அளிக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வருமான வரித்துறையின் சார்பில் அனுப்பட்ட ஆவணங்கைள 16.8.2016 அன்று தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் உள்ள மூத்த நிர்வாக அலுவலர் டி.பாபு என்பவர் ஒப்புகை அளித்து, பெற்றுள்ளார்.

மேலும் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை இயக்குநர் எம்.என்.மஞ்சுநாத், குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை அளிக்குமாறு வருமான வரித்துறைக்கு அனுப்பிய கடிதத்திற்கு, குட்கா தொடர்பான விரிவான அறிக்கை தமிழக அரசு தலைமைச் செயலாளரிடமும், காவல்துறை தலைமை இயக்குநரிடமும் ஏற்கனவே அளிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குட்கா விவகாரத்தில் இவ்வளவு உண்மைகள் இருக்கும்போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனைத்தையும் மறைத்துவிட்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் , “தமிழக அரசிடம் இது தொடர்பாக ஆவணங்கள் எதுவும் இல்லை” என்று மனு தாக்கல் செய்திருப்பது ஏன்? நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கருதப்படும் கிரிஜா வைத்தியநாதன், இப்படி உண்மைக்கு மாறான தகவலை நீதிமன்றத்தில் கூறியுள்ளது பல ஐயங்களை எழுப்புகிறது.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளுக்கு உள்ளான ராமமோகன்ராவ் தன்னிடம் வழங்கப்பட்ட கோப்புகளை அழித்துவிட்டாரா? காவல்துறை தலைவர் பொறுப்பேற்றபின் அறிக்கை மறைக்கப்பட்டுவிட்டதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

புகாருக்கு உள்ளான டி.கே.இராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு அளித்திருப்பது காவல்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி மக்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்? காவல்துறை தலைமை இயக்குநர் பதவியில் இருப்பவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டடவராக இருக்க வேண்டும் என்கிற அடிப்படை விதிகள்கூட கடைப்பிடிக்கப் படாதது கண்டனத்துக்கு உரியது ஆகும்.

தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து வருமான வரித்துறை ஆவணங்கள் அடிப்படையில் மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் உண்மைகள் வெட்ட வெளிச்சமாகும். குற்றம் புரிந்தோர் யாராக இருந்தாலும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.

Vaiko
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment