சசிகலாவின் பரோல் டைரி : குழப்பம், கோபம், ஆனாலும் அசையாத மன உறுதி

வி.கே.சசிகலாவின் பரோல் வருகையும், இந்த தருணத்தில் அவர் காட்டிய மன தைரியமும் அவரது உறவினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

வி.கே.சசிகலாவின் பரோல் வருகையும், இந்த தருணத்தில் அவர் காட்டிய மன தைரியமும் அவரது உறவினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

வி.கே.சசிகலா 5 நாள் பரோலை முடித்துக்கொண்டு, அக்டோபர் 12-ம் தேதி மாலை 4.30 மணிக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை மெயின் கேட் வழியாக உள்ளே நுழைந்தார். சிறை நிர்வாகம் அவருக்கு வழங்கிய அவகாசத்தில் அரை மணி நேரம் முன்பாகவே அவர் சிறைக்குள் சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

சசிகலா மீண்டும் சிறைக்குள் அடியெடுத்து வைத்தபோது, அவர் தனது முகத்தில் சோகம், வருத்தம், அதிர்ச்சி என எந்த உணர்வையும் வெளிப்படுத்த வில்லை. முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் அவரது பின்னால் எப்படி எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல், நடை போட்டாரோ அதே முகபாவத்தைத்தான் சசிகலாவிடம் காண முடிந்தது.

சசிகலா தனது 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையில் 8 மாதங்களை கடந்திருக்கிறார். இன்னமும் மூன்றே கால் ஆண்டுகளை அவர் சிறையில் கடக்க வேண்டும். 60 வயதைக் கடந்த ஒரு பெண்மணியாக, இந்த தண்டனையை அவர் எதிர்கொண்டு சமாளிப்பாரா? என்கிற கலக்கம் அவரது சகோதரர் திவாகரன் மற்றும் குடும்பத்தினருக்கு அதிகமாகவே இருந்ததாம்!

அதேபோல அவருக்கு 5 நாள் பரோல் கிடைத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட, மீண்டும் அவரை சிறைக்கு அனுப்பும்போது மனதளவில் அவரை அது பாதிக்க வாய்ப்பிருப்பதாக உறவினர்கள் நினைத்திருந்தார்களாம். ஆனால் பரோலில் சென்னையில் தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் காட்டிய நிதானமும், அழுத்தமும் உறவினர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதாம்!

சசிகலா குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது கிடைத்த தகவல்கள் இவை : சிறையில் அவ்வப்போது சசிகலாவை நெருங்கிய உறவினர்கள் சந்தித்தபோதும், நலம் விசாரிப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக பேசவில்லை. அப்படி பேசுகிற மனநிலையில் உறவினர்கள் இல்லை. பரோலில் சசிகலா சென்னைக்கு வந்து சேர்ந்த 6-ம் தேதி இரவும் சற்று இறுக்கமான சூழல் இருந்தது.

ஆனால் 7-ம் தேதி காலையில் இருந்து தெளிவாக குடும்பம் சம்பந்தப்பட்ட பல விவகாரங்களையும் விவாதிக்க ஆரம்பித்தார். குறிப்பாக கொடநாடு, சிறுதாவூர் என விரிந்து கிடக்கும் சொத்து சாம்ராஜ்யங்களின் நிர்வாகங்கள் குறித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அரசியல் விவகாரங்களில் டிடிவி.தினகரன் எடுக்கும் முடிவுகளில் வேறு யாரும் குறுக்கிடுவது இல்லை என்றும் உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டதாம்!

அதிமுக சீனியர் நிர்வாகிகள் பலரும் டிடிவி தினகரனின் தேவையற்ற சில நடவடிக்கைகள் காரணமாகவே சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு நீக்க நேர்ந்ததாக தங்களிடம் வருத்தப்பட்டு கூறியதையும் உறவினர்கள் சிலர் சசிகலாவிடம் பகிர்ந்திருக்கிறார்கள். ‘அமைச்சர்கள் சிலர் இப்போதும் பேட்டிகளில் உங்களை சின்னம்மா என மரியாதையாகவே அழைக்கிறார்கள். நீங்கள் எப்போது வெளியே வந்தாலும், உங்கள் பின்னால் அணி வகுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்’ என திவாகரன் தரப்பில் சசிகலாவிடம் கூறப்பட்டிருக்கிறது.

சசிகலா அதை ஏற்கிற விதமாகவோ, மறுக்கிற விதமாகவோ ரீயாக்‌ஷன் காட்டவில்லை. குறிப்பாக, ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரோ ஒரு தொண்டரை நிறுத்தியிருக்க வேண்டும். டிடிவி செய்த பெரிய முட்டாள்தனம் அதுதான்’ என சொல்லப்பட்டபோது, ‘நான் எவ்வளவோ சொன்னேன்!’ என ரீயாக்‌ஷன் காட்டியிருக்கிறார் சசிகலா.

டிடிவி தினகரன் மீதான அவரது கோபம் மட்டும் இந்த பரோல் காலகட்டத்தில் எகிறியிருக்கிறது. அக்டோபர் 6-ம் தேதி பெங்களூருவில் இருந்து சசிகலாவை அழைத்துக் கொண்டு அவரது காரில் முன் இருக்கையில் அமர்ந்தபடியே வந்தார் சசிகலா. அப்போதே டிடிவி.தினகரனுடன் அவர் சுமூகமாக இல்லை. 7-ம் தேதி மாலையில் நெடுநேரம் சசிகலாவை சந்தித்து, தனது அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவரித்து சசிகலாவை சமாதானப்படுத்த டிடிவி முயன்றார்.

ஆனல் டிடிவி சொன்ன விளக்கங்களில் சசிகலா திருப்தி ஆகவில்லை. ‘கட்சியில் நிர்வாகிகளாக இருப்பவர்களில் 75 சதவிகிதம் பேர் எனது விசுவாசிகள். அவர்களையே என்னை தூக்கியெறியும்படி செய்துவிட்டாயே!’என சசிகலா கோபப்பட்டிருக்கிறார். ‘கட்சிப்பணி காரணமாக என் மீது எத்தனை வழக்குகள்! நானும் திகாரில் இருந்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால், எந்த நிமிடமும் பொறுப்பில் இருந்து நான் விலகிக் கொள்வேன்’ என டிடிவி சொன்னதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால் இது அதற்கான சூழல் இல்லை என்பதை சசிகலாவும், டிடிவி தினகரனுமே அறிந்திருக்கிறார்கள். எனவே டிடிவி-யின் கட்சிப் பணிக்கு சசிகலா பெரிதாக தடை எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் டிடிவி மீதான அதிருப்தியை சசிகலா கொஞ்சமும் மறைக்கவில்லை. அதனாலேயே 6 முறை நடராஜனை பார்க்க, பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைக்கு சசிகலா சென்றபோதும், டிடிவி-யை அழைத்துச் செல்லவில்லை.

அதெல்லாம் போக, 12-ம் தேதி காலையில் சசிகலா பெங்களூருவுக்கு கிளம்பிய போது டிடிவி தினகரன் வழியனுப்ப வராததுதான் இருவருக்கும் இடையிலான பூசல் எந்த அளவுக்கு வலிமையாக வேர் விட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது. ஆனாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அழைத்து, ‘நீங்கள் சென்று வழியனுப்பி வையுங்கள்’ என கூறினாராம் டிடிவி. அதனால்தான் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெறும் ஏழுமலை தவிர, 17 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களும் வழியனுப்ப வந்தார்கள்.

திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், வெங்கடேஷ் உள்ளிட்டோர் பெங்களூரு வரை சென்று சசிகலாவை அனுப்பி வைத்துவிட்டு வந்திருக்கிறார்கள். சசிகலா-டிடிவி தினகரன் ஊடல் அதிகமாகியிருப்பதால், பழையபடி ஆக்டிவாக தினகரன் கட்சிப் பணியில் இறங்குவாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி, இத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும் சசிகலா வெளிப்படுத்திய அழுத்தமான மனநிலையும், முகத்தில் உணர்வே காட்டாமல் அவர் சிறைக்கு மீண்டும் கிளம்பிய விதமும் அவரது உறவினர்களுக்கே ஆச்சர்யம்!

 

×Close
×Close