Advertisment

துணைப் பொதுச்செயலாளராக தினகரன் தொடர இயலாது: முதல்வர் தலைமையில் தீர்மானம்!

அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
துணைப் பொதுச்செயலாளராக தினகரன் தொடர இயலாது: முதல்வர் தலைமையில் தீர்மானம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அம்மா அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இறுதியாக தினகரனின் நியமனம் சட்டவிரோதமானது என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

மேலும் இந்த தீர்மானத்தில், "டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதா அவர்களால் அவரது வாழ்க்கையையே அர்ப்பணித்து, வளர்க்கப்பட்டு இன்று இந்திய திருநாட்டின் மூன்றாவது பேரியக்கமாக உருவெடுத்துள்ள அஇஅதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

ஜெயலலிதா அவர்கள் நம் அனைவரையும் மீளா துயரில் விட்டுவிட்டு 5.12.2016 தேதியில் மண்ணுலகை விட்டு மறைந்ததை இன்றும் ஏற்க இயலாத மன நிலையில் நாம் அனைவரும் உள்ளோம். நாம் ஒவ்வொருவரும் அவரது ஆன்மா சாந்தி அடைய அவரது நோக்கங்களை, லட்சியங்களை, கொள்கைகளை நிறைவேற்ற ஒன்று கூடி உறுதிமொழி எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்ற பொன்மொழிக்கேற்ப நாம் ஒன்று கூடி ஜெயலலிதா அவர்களின் லட்சியங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். நமது கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக கழகப் பணியாற்றிய ஜெயலலிதா அவர்களின் இடத்தில் வேறு எவரையும் நமது கழகத் தொண்டர்கள் அமர்த்தி அழகு பார்க்க விரும்பமாட்டார்கள்.

ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னர் சசிகலா அவர்களை பொதுச் செயலாளராக கழக, சட்ட திட்டங்களின் படி, புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் வரை நியமிக்கப்பட்டாலும், அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அவரால் செயல்படா நிலை ஏற்பட்டுள்ளதாலும் மற்றும் பல்வேறு நபர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாலும், நமது கழகத்தின் சட்டதிட்ட விதி 20 (V) படி, நமது கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்று கூடி, ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதலின் படி, கழகத்தையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறோம்.

இந்நிலையில், ஜெயலலிதா அவர்களால் 2011 பிப்.19-ல் நீக்கப்பட்ட தினகரனை, 2017 பிப்.14-ல் கட்சியில் சேர்த்து, அதிமுக துணை பொதுச் செயலாளராக நியமித்தது நமது கழகத்தின் சட்டதிட்ட விதி 30(V)-ற்கு விரோதமானது. அவர் தொடர்ந்து ஐந்து ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால், அவரால் கழகத்தின் எப்பொறுப்பையும் கழக சட்டதிட்ட விதிகளின்படி வகிக்க இயலாது. தினகரன் கழக துணைப் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தை, 3.3.2017 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் பதில் கடிதத்தில்,  'ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலில் தினகரனின் பெயர் இடம்பெறவில்லை' என்று கூறி அந்த கடிதத்தை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டது.

மேலும், தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்த பொதுச் செயலாளரின் நியமனமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு விசாரணையில் உள்ளது. இவைகளுக்கு மாறாக தினகரன் தன்னிச்சையாக கடந்த 4.8.2017 தேதியில் நமது கழகத்திற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நமது கழகத்தை அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, ஜெயலலிதா அவர்களால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்று கூடி வழிநடத்தி வரும் நிலையில், நமது கழகத்தில் வீண் குழப்பங்கள் ஏற்படுத்த அவரால் வழங்கப்படும் அறிவிப்புகள் அஇஅதிமுக தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத்தாது. அவரது அறிவிப்புகள் மூலம் நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள், கழக சட்டதிட்ட விதிகள்படி செல்லக்கூடியவை அல்ல. கழகத் தொண்டர்கள் அதனை நிராகரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஜெயலலிதா அவர்களின் உயரிய லட்சியமான 'ஒவ்வொரு கழக தொண்டனுக்கும் வாய்ப்பு' 'உழைப்பால் ஒவ்வொருவரும் எல்லா நிலையையும் அடைய வேண்டும்' என்பதை நிறைவேற்ற, நாம் அனைவரும் ஒன்று கூடி கழகத்தையும் அதன் ஆட்சியையும் வழிநடத்துவோம் என உறுதி ஏற்போம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட மொத்தம் 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆனால், சசிகலாவால் நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்கள் செங்கோட்டையனும், திண்டுக்கல் சீனிவாசனும் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment