Advertisment

‘டி.டி.வி.தினகரனின் ஊதுகுழல் திருமாவளவன்’ : தமிழிசை ஆவேசம்

டி.டி.வி.தினகரனின் ஊதுகுழலாக திருமாவளவன் செயல்படுவதாக தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்திருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TTV Dhinakaran, Tamilisai Soundararajan, Thol.Thirumavalavan, RK Nagar

TTV Dhinakaran, Tamilisai Soundararajan, Thol.Thirumavalavan, RK Nagar

டி.டி.வி.தினகரனின் ஊதுகுழலாக திருமாவளவன் செயல்படுவதாக தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்திருக்கிறார்.

Advertisment

டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கருத்து கூறியிருந்தார். அதில், ‘உண்மையான அதிமுக எது? என்ற கேள்வியை முன்வைத்ததாக ஆர்கே நகர் தேர்தல் களம் மாறியதே முடிவு இப்படி அமைவதற்கு முதன்மையான காரணமாகும். அதாவது, ஜெயலலிதா அம்மையாருக்கு அடுத்து தினகரன் தரப்பா? எடப்பாடி பழனிசாமி தரப்பா? என்பதை மனதில் வைத்தே அந்தத் தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். அந்தப் போட்டியில் தினகரன் வென்றிருக்கிறார்.’ என்றார்.

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக அதிமுக.வினர் டிடிவி தினகரனை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார். இது குறித்து வெளியான செய்தி ஒன்றை ‘டேக்’ செய்து ட்விட்டரில் கருத்து கூறிய தமிழிசை சவுந்தரராஜன், ‘தினகரனுக்கு வாரிசு பத்திரம் வழங்கி ஊதுகுழலான திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்? வருமானவரி சோதனை மதிப்பை உயர்த்துமாம்?’ என கூறியிருக்கிறார்.

அதாவது, மத்திய அரசு வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி நடத்திய ரெய்டுகள் டிடிவி தினகரனின் மதிப்பை உயர்த்திவிட்டதாக திருமாவளவன் கூறியதை விமர்சித்திருக்கிறார் தமிழிசை. ஏற்கனவே மெர்சல் படப் பிரச்னையில் பாஜக-விடுதலை சிறுத்தைகள் இடையே மோதல் களை கட்டியது. அந்த விவகாரத்தில் திருமாவளவனை, ‘கட்டப் பஞ்சாயத்து செய்பவராக’ தமிழிசை விமர்சனம் செய்தது, பலத்த கண்டனத்திற்கு உள்ளானது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரவு ஒரு மணி வரை போனில் தொடர்புகொண்டு அநாகரீகமாக நடந்து கொண்டதாக தமிழிசை குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று அது தொடர்பான ஒரு விழாவில், ‘இந்துக் கோவில்களை இடித்துவிட்டு அதில் புத்த விஹார்களை கட்டலாமா?’ என ‘வாதத்திற்காக’ திருமாவளவன் முன்வைத்த கேள்வியை பாஜக.வினர் விமர்சித்தனர். திருமாவளவனின் தலைக்கு விலை வைத்து இந்து அமைப்பு நிர்வாகி ஒருவர் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. ‘விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக.வுக்கு ஆர்.கே.நகர் மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ என ஹெச்.ராஜா கூறினார்.

அந்தப் பரபரப்புகள் அடங்கி ஓய்ந்திருக்கும் நிலையில், மறுபடியும் டிடிவி தினகரன் விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் காரமான விமர்சனத்தை திருமாவளவனை நோக்கி வீசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tamilisai Soundararajan Ttv Dhinakaran Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment