Advertisment

டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்க: ராமதாஸ்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
ramadoss

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தின் உறுப்பினர்கள் பதவிகள் நேர்மையான முறையில் நிரப்பப்படவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்து விட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியும், சமூக நீதிக்கு மதிப்பளித்தும் புதிய உறுப்பினர்களை நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 11 உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. அடுத்த சில வாரங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட இருந்ததால், அவசர, அவசரமாக 31.01.2016 அன்று 11 புதிய உறுப்பினர்களையும் நியமனம் செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள இந்த பதவிகளை நிரப்புவதில் எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பதால் இந்த நியமனங்களை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் 22.12.2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அதில், 11 உறுப்பினர் நியமனங்களும் முறைகேடாக செய்யப்பட்டிருப்பதாகக் கூறி ரத்து செய்தது. இதனையடுத்து, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் பின்னர், மீதமிருந்த 3 உறுப்பினர்களும் ஓய்வு பெற்ற நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைவர் மட்டுமே இருந்தார். உறுப்பினர்கள் எவரும் இல்லை. தலைவரையும், உறுப்பினர்களையும் உள்ளடக்கியது தான் பணியாளர் தேர்வாணையம் என்பதால், தலைவர் மட்டும் தன்னிச்சையாக இயங்க முடியாது. எனவே, புதிய உறுப்பினர்களை விதிமுறைகளின்படி நியமிக்க வேண்டும் என்று பா.ம.க. சார்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவசர, அவசரமாக நேற்றிரவு 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஐந்து பேரும் கடந்தமுறை நியமிக்கப்பட்டு நீதிமன்றங்களால் நீக்கம் செய்யப்பட்டவர்கள் என்பது ஆவர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கடந்த ஆண்டு செய்யப்பட்ட நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில்,‘‘தேர்தல் அறிவிக்கை விரைவில் வரவிருந்த நிலையில், திடீரென இந்த காலியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. இதில் எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. யாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. வழக்கமாக விண்ணப்பித்தவர்களின் தகுதிகளை ஒப்பீடு செய்து அவர்களில் சிறந்தவர்களைத் தான் நியமிக்க வேண்டும். ஆனால், உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களிடமிருந்து மட்டும் தான் விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்பதால் தகுதிகள் மதிப்பீடு செய்யப்படவில்லை. இது மிகப்பெரிய தவறு’’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய உறுப்பினர்களை நியமிக்கும் போது வெளிப்படையான முறையில் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும்; விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்பது தான் இதன் பொருளாகும்.

ஆனால், இம்முறையும் வெளிப்படையான விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. நீதிமன்றங்களிடமிருந்து தப்புவதற்காக அவ்வாறு கோரப்பட்டது போன்ற தோற்றத்தை தமிழக அரசு உருவாக்கி வைத்திருக்கலாம். ஒருவேளை அவ்வாறு புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், அவர்களில் ஒருவர் கூடவா புதிய உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான தகுதி பெற்றவராக இருந்திருக்க மாட்டார்கள்? கடந்த முறை நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர்களில் 7 பேர் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அனைத்து சமுதாயத்தினருக்கும் பரவலாக இடம் வழங்கப்படவில்லை என்பதும் அவர்களின் நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்படுவதற்கான காரணங்களாகும். ஆனால், இம்முறையும் அதே தவறு நடந்திருக்கிறது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 உறுப்பினர்களில் மூவர் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. அச்சமுதாயங்களைச் சேர்ந்த ஒருவர் கூடவா இப்பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை? இதிலிருந்தே அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை; தகுதிக்கு மதிப்பளிக்கப்படவில்லை; முறைகேடுகளுக்கும், விதிமீறல்களுக்கும் மட்டும் தான் இடமளிக்கப் பட்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். புதிய உறுப்பினர்கள் ஐவரும் அவர்களின் தகுதியால் நியமிக்கப்படவில்லை. கடந்த முறை நியமனம் செய்யப்பட்டபோது அவர்களிடமிருந்து ஆட்சியாளர்கள் பெற்றதை ஈடுசெய்வதற்காகவே இந்த நியமனங்கள் நடந்துள்ளன என்பதே உண்மை.

அரசியலமைப்புச் சட்டத்தின் 319(டி) பிரிவின்படி ஒரு மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக இருந்த ஒருவர், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராகவோ/தலைவராகவோ அல்லது பிற மாநிலங்களின் தேர்வாணையத் தலைவராகவோ மட்டுமே நியமிக்கப்படலாமே தவிர, ஏற்கனவே பதவி வகித்த மாநிலத்தில் தேர்வாணைய உறுப்பினர் உட்பட எந்த ஒரு மத்திய, மாநில அரசு பணியும் வகிக்க முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்களும் ஏற்கனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பதவி வகித்துள்ள நிலையில், இப்போது செய்யப்பட்டுள்ள நியமனங்கள் அரசியல் சட்டப்படி செல்லாதவையாகும்.

பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழகத்தின் அரசு நிர்வாகத்திற்கு தேவையான எழுத்தர்கள் முதல் மாவட்ட துணை ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் வரையிலான அனைத்து பணிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்யும் முக்கிய அமைப்பாகும். இந்த பணிக்கு விருப்பு, வெறுப்பு இல்லாத, நெருப்புக்கு நிகரான நேர்மை கொண்டவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். ஆனால், தங்களுக்கு துதி பாடுவோருக்கு பதவி வழங்குவதற்கான அமைப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தை மாற்றி அதன் பெருமையை அதிமுகவும், திமுகவும் சீரழித்து விட்டன. இப்போது செய்யப்பட்டுள்ள நியமனங்களும் இத்தகைய இலக்கணத்திற்கு உட்பட்டவை தான்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 உறுப்பினர்களும் அப்பழுக்கற்ற கடந்தகாலத்தைக் கொண்டவர்கள் அல்ல. அதிலும் குறிப்பாக புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இராஜாராமுக்கு 26.02.2018 அன்று 62 வயது நிறைவடைகிறது. இன்னும் 10 மாதம் மட்டுமே உள்ள ஒருவரை தேர்வாணைய உறுப்பினராக நியமிக்க வேண்டிய தேவை என்ன? இவர்களை வைத்துக் கொண்டு தேர்வாணையம் நேர்மையாக செயல்பட முடியாது. எனவே, 5 உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்து விட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியும், சமூக நீதிக்கு மதிப்பளித்தும் புதிய உறுப்பினர்களை நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tnpsc Tamil News High Court Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment