Advertisment

சேலம் மாடர்ன் தியேட்டர் சொத்தை ஆக்கிரமித்து கருணாநிதிக்கு சிலை? அண்ணாமலை காட்டம்

'தி.மு.க தலைவர்களுக்கு சிலை வைப்பதில் காட்டும் கவனத்தை மக்கள் பணிகளுக்கு எப்போது காட்டும். முதலில் நிர்வாகத்தை கவனிக்கட்டும்.' என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TN BJP Annamalai on DMK MK Stalin land occupation salem modern theaters Tamil News

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை.

Annamalai | bjp | cm-mk-stalin | dmk: 'பிறருக்குச் சொந்தமான இடத்தில் தனது தந்தையின் சிலையை அமைக்க முயற்சிப்பது, எக்காலத்திலும் அவரது தந்தைக்கோ, அவரது சிலைக்கோ எந்த வித மரியாதையையும் பெற்றுத் தராது என்பதை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உணர்வது நலம்' என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Advertisment

இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:- 

தமிழகத்தின் புகழ்வற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் அமரர் எம்.ஜி.ஆர், கருணாநிதி, திருமதி. ஜானகி அம்மாள், செல்வி. ஜெயலலிதா, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் அமரர் என்.டி.ராமராவ் மற்றும் கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் புகழ்பெறக் காரணமாக இருந்த நிறுவனம். தமிழ், சிங்களம் உட்பட ஏழு மொழிகளில் நூறு திரைப்படங்களுக்கும் அதிகமாக இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனரான அமரர் டி.ஆர்.சுந்தரம் முதலியார் அவர்கள், திரையுலகின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்த் திரையுலகின் முதல் இரட்டை வேடக் கதாபாத்திரம், மலையாள மொழியின் முதல் பேசும் படம், தமிழ் மற்றும் மலையாளத்தின் முதல் வண்ணத் திரைப்படங்கள், தமிழகத்தில் படமாக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம் என திரைப்படங்களில் பல புதுமைகளைக் கொண்டு வந்தவர். மேற்சொன்ன தமிழகத் தலைவர்கள் அனைவராலும் முதலாளி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.

பாரம்பரியமிக்க இந்த மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் நினைவாக, சேலம் ஏற்காடு சாலையில், நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்த நினைவு வளைவு முன் நின்று புகைப்படமும் எடுத்தது, சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

ஆனால், அத்தனை பெருமை வாய்ந்த, பல தலைவர்களை உருவாக்கிய நிறுவனத்தின் நினைவு வளைவு அமைந்திருக்கும் இடத்தில், தனது தந்தையின் சிலையை அமைக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆசைப்படுவார் என்பது யாரும் எதிர்பாராதது.

மாடர்ன் தியேட்டர் நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அமைக்க, முதலமைச்சர் விரும்புவதாகக் கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர், நினைவு வளைவு அமைந்திருக்கும் இடத்தைக் கொடுக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், அமரர் டி.ஆர்.சுந்தரம் முதலியார் அவர்களது குடும்பத்தினர் அதனை ஏற்றுக்கொள்ளாததால், நினைவு வளைவு அமைந்திருக்கும் இடம் நெடுஞ்சாலைக்குச் சொந்தமானது என்று கூறி தமிழக அரசு ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது.

மேலும் அந்தக் குடும்பத்தினருக்குச் சொந்தமான மற்றொரு பட்டா நிலத்தில், அந்தக் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளையும் தடுத்து, எந்தவித முன்னறிவிப்போ அனுமதியோ இல்லாமல், 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து கட்டுமானங்களை இடித்துள்ளதாகத் தெரிகிறது. தி.மு.க தலைவர் கருணாநிதி பணிபுரிந்த இடங்களில் எல்லாம் அவரது சிலையை வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்? பாரம்பரியமிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை உருவாக்கி, தி.மு.க தலைவர் மறைந்த கருணாநிதி அவர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கி வாழ்வளித்த அமரர் டி.ஆர்.சுந்தரம் முதலியார் அவர்கள் இடத்தையே ஆக்கிரமித்து, தனது சிலை வைப்பதை, கருணாநிதி அவர்களே ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகமே.

வேண்டுமென்றால், அறிவாலயத்திலோ, திமுகவினர் நடத்தும் பல்லாயிரக் கணக்கான நிறுவன வளாகங்களிலோ, ஆசை தீர தன் தந்தையின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் வைத்துக் கொள்ளலாமே? யார் அதைக் கேள்வி கேட்கப் போகிறார்கள்? பாரம்பரியமிக்க குடும்பத்தின் சொத்தை ஆக்கிரமித்துத்தான், முதலமைச்சர் ஸ்டாலின் தன் தந்தையின் சிலையை வைக்க வேண்டுமா? நாளை, மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தை உருவாக்கியவர் கருணாநிதி என்று நிறுவ முயற்சியா? நில ஆக்கிரமிப்பு என்பது திமுகவின் பாரம்பரியமாக இருக்கலாம். ஆனால், இனியும் அது செல்லுபடியாகாது என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்க வேண்டும்.

தமிழகமெங்கும் பெருகி வரும் குற்றச் செயல்கள், சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு, தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாததால் ஏற்பட்ட பேரிடர் கால அவலங்கள், தேர்தல் வாக்குறுதிகள், மக்கள் நலன் என எதைப் பற்றியும் சிந்தனை இல்லாமல், சிலை வைப்பது, பெயர் வைப்பது என்று வழக்கமான வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் மட்டுமே, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது திமுக அரசு. அமைச்சர்களின் ஊழல்களையோ, குடும்பத்தினரின் தலையீடுகளையோ கட்டுப்படுத்த முடியாமல், நிர்வாகத்தில் ஒட்டுமொத்தமாகச் செயலிழந்து, தோல்வியடைந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முதலில் நிர்வாகத்தை கவனிக்கட்டும். பிறகு சிலையையும் பெயரையும் வைக்கலாம்.

உண்மையாகவே தனது தந்தைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விரும்பினால், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவு அமைந்திருக்கும் இடத்தில், தங்கள் குடும்பத்துக்கே வாழ்வளித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் அமரர் டி.ஆர்.சுந்தரம் முதலியார் அவர்களது சிலையை நிறுவுவதுதான் முறையாக இருக்கும்.

அதை விட்டுவிட்டு, பிறருக்குச் சொந்தமான இடத்தில் தனது தந்தையின் சிலையை அமைக்க முயற்சிப்பது, எக்காலத்திலும் அவரது தந்தைக்கோ, அவரது சிலைக்கோ எந்த வித மரியாதையையும் பெற்றுத் தராது என்பதை முதலமைச்சர் உணர்வது நலம். பொதுமக்கள் எல்லா நேரங்களிலும் ஆட்சியாளர்களின் தவறுகளுக்குப் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bjp Dmk Cm Mk Stalin Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment