Advertisment

"தமிழ்நாடு" கிடைத்து இன்றுடன் 50 ஆண்டுகள்: உயிர் கொடுத்து பேர் கொடுத்த தியாகி!

"நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
"தமிழ்நாடு" கிடைத்து இன்றுடன் 50 ஆண்டுகள்: உயிர் கொடுத்து பேர் கொடுத்த தியாகி!

"மதராஸ் மாகாணம்" தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகியுள்ளது.

Advertisment

தமிழகத்தின் நில எல்லையை ''வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்'' என்ற தொல்காப்பிய வாசகத்திலும்; தமிழ்நாட்டின் பெயரை ''இமிழ்கடல் வேலியை தமிழ்நாடாக்கின'' என்ற இளங்கோவடிகளின் வாசகத்திலும் "தமிழ்நாடு" என்ற பெயர்காரணத்தை சங்ககாலம் தொட்டே அறிய இயலும்.

சுதந்தர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 1956 ஆம் ஆண்டு ஜூலை 27 இல் "மெட்ராஸ் ஸ்டேட்" என அழைக்கப்பட்ட நிலப்பரப்பை "தமிழ்நாடு" என மாற்றக்கோரி விருதுநகரில் உண்ணாவிரதத்தை தொடங்கினார் சங்கரலிங்கனார். தனது 78 வயதிலும் தொடர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்திய சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கி 76வது நாளான 1956 அக்டோபர் 13இல் உயிர்நீத்தார்.

கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. உலகில் அதிக நாட்கள் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்தவர்.

ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். விருதுநகரில் ஒரு ஆசிரமத்தை அமைத்து தங்கியிருந்த போதுதான் ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 ஜூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார். தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும். சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டவேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப்போல் வாழவேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு, அரசு ஊழியர்கள் கதர் அணியவேண்டும் என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன் ஜூலை 27ந்தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.

அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால் பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின்பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. ம.பொ.சிவஞானம்., அண்ணாத்துரை, காமராசர், ஜீவானந்தம் உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர். இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை. நாளாக நாளாக சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது.

விருதுநகருக்குச் சென்ற அண்ணா அவரைச் சந்தித்துப் பேசிய போது, "உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டார்களே" என்றார். "நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார். அதற்கு பிறகு மூன்று கடிதங்களை எழுதினார் சங்கரலிங்கனார். “பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாக தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத் திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்” என்று எழுதினர்.

அக்டோபர் 10-ஆம் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். 13.10.1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது. அப்போது சென்னை மாகாணத்தில் இந்தச் செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையிலிருந்த சங்கரலிங்கனாரின் உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டபோது பல கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின், தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது. தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின.

இதன்பிறகு, 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு தியாகி சுந்தரலிங்கனாரின் தியாகத்தை நிறைவேற்றும் வகையில் 1968 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றி பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment