Advertisment

பழைய விதிகளின்படிதான் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும்: தமிழக அரசு பதில் மனு!

ஏற்கனவே உள்ள விதிகளின் படிதான் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பழைய விதிகளின்படிதான் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும்: தமிழக அரசு பதில் மனு!

ஏற்கனவே உள்ள விதிகளின் படிதான் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் எனவும், விபத்துகளை குறைக்கும் வகையில் தான் இதனை செயல்படுத்துவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisment

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அசல் ஒட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு விதிகளுக்கு எதிரானது. இந்த உத்தரவு போக்குவரத்து துறையில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும், இது தொடர்பாக தமிழக அரசு முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் அதிகாரிகள் அதிகாரத்தை துஷ்பரோயகம் செய்ய வாய்ப்புள்ளது, மேலும் இந்த உத்தரவு மோட்டார் வாகன விதியில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி தமிழக போக்குவரத்து துறை முதன்மை செயலாளரும், போக்குவரத்து துறை ஆணையருமான தயானந்த் கட்டாரியா பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்,

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற அரசு உத்தரவு புதிதாக உருவாக்கப்பட்டது இல்லை. ஏற்கனவே மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள 130 (1) விதிகளின் படியே, வாகன ஓட்டிகள் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று உள்ளது. உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றாலே அது அசல் உரிமத்தைதான் குறிக்கும். மனுதாரர்கள் குறிப்பிடுவது போல அசல் உரிமம் என தனியாக விதியில் குறிப்பிட வேண்டியதில்லை.

போக்குவரத்து விதிகளை மீறுவதை தடுக்கவும், அதிகரித்து வரும் விபத்துகளை தவிர்க்கவுமே இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு 65,873 சாலை விபத்துகளில் 74,245 பேர் காயமடைந்தனர் 15,422 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.

2012 ஆம் ஆண்டு 67,757 சாலை விபத்தில் 78,384 பேர் கயாமும், 16,175 பேர் மரணமும் அடைந்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற 66,238 சாலைவிபத்துகளில் 75, 681 நபர்கள காயம் அடைந்தனர், 15,563 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு 67,250 சாலை விபத்தில் 15,190 பேர் மரணம் அடைந்துள்ளனர் 77,725 பேர் காயமடைந்தனர்.

2015 ஆம் ஆண்டு 69,059 சாலைவிபத்தில் 79,701காயமடைந்தனர் 15,642 உயிரிழந்துள்ளனர்.

இதே பேல் கடந்த ஆண்டு 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலைவிபத்துகள் எண்ணிக்கை 71,431 ஆக உயர்ந்ததாகவும், இதில் 17,218 பேர் மரணம் அடைந்துள்ளனர். 82,163 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதத்தில் மட்டும் 39 ஆயிரத்து 82 விபத்துகளில் 44 ஆயிரத்து 429 பேர் காயமடைந்தனர். 9 ஆயிரத்து 881 பேர் மரணம் அடைந்தார்.

2011 ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 3,80,452 விபத்துகள் நடைபெற்றுள்ளது. அவற்றில் 1,05,091 பேர் பலியாகியும், 5,12,292 பேர் காயமடைந்தும் உள்ளனர். 2017-18 நிதியாண்டில் மட்டும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 60 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளில் 21 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட 52.66 சதவிகிதம் பேர் மரணம் அடைந்து வருவதாகவும் புள்ளி விபரங்களில் தெரிகின்றது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 1,79,230 வழக்குகள் உட்பட போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 5,83,210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காததால் உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு அறிவுரைகளின்படி உரிமத்தை நிரந்தர ரத்தோ அல்லது தற்காலிக ரத்தோ செய்ய முடியவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்புக்காக 65 கோடி ரூபாயும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக 2 கோடி ரூபாயும் செலவழிக்கப்படுகிறது.

விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் சில சிரமங்களை பொதுமக்கள் ஏற்றிக்கொண்டுதான் ஆக வேண்டும். அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், டூப்ளிகேட் என சொல்லக்கூடிய உரிமங்களை பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. அசல் உரிமம் தொலைந்துபோகும் பட்சத்தில், www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

எனவே விபத்ததுகளை குறைக்கும் நோக்கில் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுதாரர்களின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்று தான் பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது, எனவே இது குறித்து தங்கள் தரப்பு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதனை அடுத்து வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chennai High Court Traffic Ramasamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment