Advertisment

பரவும் சூடு!

அடக்கி வைத்திருக்கிற நெருப்பு கங்குகளுக்குள் மக்கள் வாழ்வதைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் சடுகுடு ஆட்டங்கள் வெயிலின் சூட்டைப் போலவே அரசியல் அரங்கில் பரவிக் கொண்டிருப்பது நல்லதல்ல.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பரவும் சூடு!

தமிழகத்தில் அரசியல் சூடு பரவுகிறது. நான் உண்மையில் இன்னொரு வெப்பத்தின் பாதிப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். தமிழக வறட்சி நிலங்களைப் பார்த்து முடித்து விட்டு கர்நாடகா, மஹாராஷ்டிரா நிலங்களில் கொஞ்சம் சுற்றினேன். உண்மையைச் சொல்லவேண்டுமெனில் அங்கும் தண்ணீரில்லை.

Advertisment

அந்தக் காலத்தில் அம்மை நோய்களுக்கு மனிதர்கள் கொத்துக் கொத்தாய்ச் செத்துப் போன செய்திகளைப் படித்திருப்பீர்கள். இப்போது தமிழக எலுமிச்சை, தென்னை, கொய்யா செடிகளுக்கு வந்திருப்பதும் அம்மை நோய்தான். நீரில்லாத நிலையில் வரும் நோய். நோயல்ல அது. உயிர் வாழத் தண்ணீர் இல்லாத நிலையில் கொத்துக் கொத்தாய் சாகின்றன.

திண்டுக்கல் பகுதிகளில் இப்படி ஆயிரக்கணக்கான செடிகள் கருகியிருக்கின்றன. ஏப்ரல் மாதத் துவக்கத்தில் வந்த எட்டு நாளில் நடந்த மிகை வறட்சி இது. அதற்கு முன் செழிப்பாக வானம் பார்த்த செடிகள் அந்த எட்டு நாள்களுக்குள் கருகி விட்டன. ஒரு பிரளயம் வந்து கடந்து போன பிறகு எப்படி இருக்குமோ அப்படி காய்ந்த செடிகள் இன்னமும் ஒட்டி வைத்திருக்கிற உயிர்ச் சக்தியோடு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மழையும் இல்லை. கோடை மழை என்று சொல்லிப் பெய்தது எல்லாம் அரை உழவு மழைகூட இல்லை. இரண்டு நாள் தாங்கும் அவ்வளவுதான். இன்னும் அறுபது நாட்களை ஓட்டியாக வேண்டும். கொத்துக் கொத்தாய் மரித்த செடிகளைத் தவிர மற்றவைகளையும் காப்பாற்ற வேண்டும். விவசாயிகளின் பாடு திண்டாட்டம்தான்.

ஊர்கள் தோறும் மழை வேண்டி உள்ளூர் தெய்வங்களைக் குளிர்வித்துக் கொண்டிருக்கின்றனர் மக்கள். அவர்களாலும் வேறு என்னதான் செய்ய முடியும் பாவம். வெறும் கெடாவை மட்டும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு மழை தராமல் ஏமாற்றுகின்றனர் உள்ளூர் தெய்வங்கள். அவர்கள் நம்பும் தெய்வங்களும் சேர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் நம்பாத அரசியல் தெய்வங்கள் ஆற்றுகிற கடமையைப் பார்க்கிறீர்கள்தானே? உள்ளூரில் மூணு ரௌடிகள் அடித்து குத்திக் கொண்டிருந்தால் ஏட்டையா கிளம்பிப் போகவே மாட்டார். ஸ்டேஷனுக்கு எதிரில் இருக்கிற சண்முகையா அண்ணன் கடையில் ஆமை வடை வாங்கி கடித்துக் கொண்டே " விடுங்க சார். அடிச்சிக்கிட்டு சாகட்டும். ரோடு க்ளியர் ஆகுதுல்ல" என்பார்.

அதே மாதிரி பைபிளில் சொல்கிற மாதிரி சொந்தச் சகோதரர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வார்கள். சாதி சாதியாய்ப் பிரிந்து குத்திக்கொள்வார்கள். இது மக்களுக்கும் தெரிந்தே இருக்கிறது. அதனால்தான் கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கலவரங்களுக்குப் பிறகு வரும் அமைதி போல, புயலுக்குப் பின்னால் வருகிற அமைதி போல தமிழகத்திலும் காலம் ஒருநாள் விடியும் என நம்பிக்கையோடு மக்கள் துடியான உள்ளூர் அம்மன்களுக்குக் கூழ் ஊற்றிக் கொண்டிருக்கின்றனர். அடக்கி வைத்திருக்கிற நெருப்பு கங்குகளுக்குள் மக்கள் வாழ்வதைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் சடுகுடு ஆட்டங்கள் வெயிலின் சூட்டைப் போலவே அரசியல் அரங்கில் பரவிக் கொண்டிருப்பது நல்லதல்ல.

எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய நேரம் என்பது புரியாமல் செயல்படும் ஆட்சியாளர்கள் அகற்றப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே மக்கள் கருதுகிறார்கள். ஆனால் செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக சமோசா சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகவே விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

இவர்களை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி பிஜேபிதான் என்று சொல்வதற்கு பி எச் டி படித்திருக்கத் தேவையில்லை. அவர்கள் எழுதிய ஸ்க்ரிப்ட்டை இவர்கள் நடித்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். தப்பில்லை. காலம் அதுவாக இருக்கும்போது காட்சிகளும் அதுவாகத்தான் இருக்கும். என்னுடைய வேண்டுகோள் எல்லாம், காலத்தின் கோலமான இந்த படத்தில் விவசாயிகளின் வாழ்க்கை குறித்தும் ஒரு சில சீன்களாவது வைத்து விடுங்கள். முழுநீள காமெடி படம் வரலாற்றிற்கு நல்லதல்ல. இதையெல்லாம் கணக்கில் எடுத்துச் செயல்படாமல் போவீர்களானால், வரும் தேர்தலில் சம்பந்தப்பட்டவர்களையும் காமெடியன்கள் போலத்தான் மக்கள் நடத்துவார்கள்.

Tamilnadu Politics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment