Advertisment

கேரள தேவசம்போர்டு கோவில்களில் அர்ச்சகர்களாக தலித்கள் நியமனம் : ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு

கேரள அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
kerala, CPM, kerala left front government, tamilnadu, communist party of india (marxist), g.ramakrishnan, social justice, dalits as priests

கேரள அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி நியமிக்கப்பட்ட 62 பேரில் 6 பேர் தலித்துகள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 பேர்.

சமூக நீதியை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளில் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. பாராட்டுகிறது.

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் சமூக நீதியை உத்தரவாதப்படுத்துவதில் தொடர்ச்சியாக முனைப்பு காட்டி வருவது பாராட்டிற்குரியது. கேரள அரசின் முன்முயற்சியால் கொச்சி மெட்ரோ ரயிலில் 26 திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் பணி வழங்கப்பட்டது.

பழங்குடியின மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளும், பணி முடித்து இரவு நேரத்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள (பிங்க் பேட்ரோல்) பெண் காவலர்களின் ரோந்து ஆகியவை இத்திசை வழியில் மிக முக்கியமான முன்னெடுப்புகளாகும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று முன்பு இருந்த மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி அரசு பெண்களை அனுமதிக்கலாம் என்று தன்னுடைய நிலைபாட்டை நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் சமூகரீதியிலும் சட்ட ரீதியிலும் நீண்ட ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

 

Kerala Government G Ramakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment