Advertisment

திருச்சி அமைச்சர்களின் சொந்த நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய "சாராயக்கடை சந்து"

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 20-ல் சாராயக்கடை சந்து என்ற பெயர் பலகை அரசு பதிவேட்டிலும் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sarayakadai Sandhu street name created sensation, Lalkudi, Lalgudi municipality, Lalkudi municipality, Anbil Mahesh, KN Nehru, திருச்சி அமைச்சர்களின் சொந்த நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய சாராயக்கடை சந்து, Sarayakadai Sandhu street name, the Trichy ministers' own municipality have Sarayakadai Sandhu of a street name,

திருச்சி அமைச்சர்களின் சொந்த நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய "சாராயக்கடை சந்து"

தமிழகத்தில் கள்ளச்சாராயம், விசச்சாராயம், 24 மணி நேர சாராய விற்பனை போன்ற செய்திகள் ஆளும் கட்சியினரை அதிர வைத்திருக்கின்றன. இந்த நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 20-ல் சாராயக்கடை சந்து என்ற பெயர் பலகை அரசு பதிவேட்டிலும் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த விபரம் வருமாறு;

Advertisment

தமிழகத்தில் விழுப்புரம், மரக்காணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் நடந்த கள்ளச்சாராய மரணம் தற்போது பரபரப்பாக்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் மேலும் பரபரப்பாக உள்ளது. எதிர்கட்சிகள் மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளே குழப்பதில் ஆழ்ந்து கிடக்கிறது. இரண்டாண்டை சாதனை என்பதா? வேதனை என்பதா? தலைவர் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி தடபுடலாக கொண்டாடுவதா? மக்களை எப்படி சந்திப்பது? என மில்லியன் டாலர் கேள்விகள் மந்திரிகளின் மண்டையைப் பிளந்து கொண்டிருக்க இந்த விஷயம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 20-ல் சாராயக்கடை சந்து என்ற பெயரில் தெருவே உள்ளது. இந்தப் பெயர் பதிவு அரசு பதிவேட்டில் இருப்பது தான் வேதனையான விஷயம். தற்போதைய சூழ்நிலையில் கள்ளச்சாராயம் மற்றும் அரசு மதுபானம் குறித்த பரபரப்பான சூழ்நிலையில் சாராயக்கடை சந்து என்ற பெயர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதை அறிந்த நகராட்சி நிர்வாகம் இந்த பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்தக் காலத்தில் தோப்பாக இருந்த பொழுது அங்கே சாராயக்கடை இருந்ததாகவும், அதனால் அந்த தெருவிற்கு அப்படி ஒரு பெயரை வைத்து அழைத்ததாகவும் சொல்கிறார்கள் உள்ளூர்வாசிகள். ஆனால் இப்பொழுது தெருவில் அப்படி எதுவும் ஏன், டாஸ்மாக் கடைகள் கூட இல்லாத குடியிருப்பு பகுதியாக இருக்கின்றது.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக சாராயக்கடை சந்து என்ற பெயரில் அஞ்சல் அட்டைகள், கூரியர்கள் வந்தவண்ணமும், ரேசன் அட்டை, ஆதார் அட்டையிலும் சாராயக்கடை சந்து எனக்குறியிட்டு விலாசங்கள் விபரமாகவே பதிவிட்டபோதும் பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள் கண்களில் இது தென்படவில்லை.

கள்ளச்சாராய விவகாரம் சூடு பிடித்திருக்கும் இந்தசூழலில் லால்குடியில் உள்ள சாராயக்கடை சந்து வைரலாகியிருக்கின்றது. இந்த தெருவின் பெயரை மாற்றக்கோரி பல்வேறு முறை சமூக ஆர்வலர்கள் மனு கொடுத்தும் அது பதிவேட்டிலும் இருப்பதால் மாற்றுவது சிரமம் எனக்கூறி நகராட்சி நிர்வாகம் கடந்துச்சென்றிருக்கின்றது.

லால்குடி காணக்கிளிய நல்லூர் பகுதியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊருக்கு செல்லும்போது பல்வேறு தருணங்களில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும் அவர் கண்டுகொள்ளவில்லையாம். மேலும், அமைச்சர் அன்பில் மகேஷ்க்கும் இந்தப்பகுதி சொந்த ஊரை கொண்டதாகவே இருக்கின்றது. இரு அமைச்சர்கள் பிறந்த ஊரான லால்குடி நகராட்சியில் இப்படி சாராயக்கடை சந்து சங்கடங்களைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றது என்று புலம்புகிறார்கள் உள்ளூர்வாசிகள்.

இந்த தெருவுக்கு லால்குடியில் பிறந்த பல்வேறு பிரபலங்களின் பெயர்களை வைக்கலாமே! என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.

செய்தி: க. சண்முகவடிவேல்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy Tiruchi District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment