Advertisment

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரலாறு: தேதிவாரியாக அலசலாம் வாங்க!

தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு தொகுதியின் வாக்காளர்கள் 4 ஆண்டுகளில் நான்கு தேர்தலில் வெவ்வேறு வேட்பாளர்களை சந்தித்தார்கள் என்றால் அது ஆர்.கே.நகர் தான்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரலாறு: தேதிவாரியாக அலசலாம் வாங்க!

தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு தொகுதியின் வாக்காளர்கள் 4 ஆண்டுகளில் நான்கு தேர்தலில் வெவ்வேறு வேட்பாளர்களை சந்தித்தார்கள் என்றால் அது ஆர்.கே.நகர் தொகுதியாகத் தான் இருக்கும். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. மற்றும் முதல்வர் பதவி பறிபோனது. பின் 2015, மே 11ஆம் தேதி ரிலீசான ஜெயலலிதா, அதே மாதம், 23ஆம் தேதி தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றார். ஜெயலலிதா எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதற்காக சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் 2015, மே மாதம் 17ஆம் தேதி ராஜினாமா செய்தார். அதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜுன் 27ஆம் தேதியே இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Advertisment

பின்னர், 2016ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானார். இந்நிலையில், ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிச.5ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தல் வரும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆர்.கே.நகர் தொகுதி காலியானதை தொடர்ந்து கடந்த மே மாதம் இறுதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதனிடையே, ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து, சசிகலா குடும்பம் என்னை வற்புறுத்தி, முதல்வர் பதவியில் இருந்து விலக வைத்தனர் என்று மவுனம் கலைக்க, 'ஓவர் நைட்டில் ஒபாமாவானார்' ஓ.பி.எஸ். இதையடுத்து,  அதிமுக அணி இரண்டாக பிளவுபட்டதால், சசிகலா அணியில் தினகரன் தொப்பிச் சின்னத்திலும், ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் இரட்டை விளக்கு சின்னத்திலும் நின்றனர். திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிட்டார், தீபாவும் போட்டியிட்டார், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிக அளவில் இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சுமார் எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் டிசம்பர் 21-ஆம் தேதியன்று ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தல், 2015-ல் ஜெயலலிதா நிற்பதற்காக இடைதேர்தல், 2016-ல் சட்டப்பேரவை தேர்தல், 2017-ல் இடைதேர்தல் அது ரத்துசெய்யப்பட்ட நிலையில், தற்போது 2017 டிச-21 இடைத்தேர்தல் என குறுகிய காலத்தில் அதிக அளவில், ஆண்டுக்கொரு தேர்தலை சந்தித்த மக்கள் ஆர்.கே நகர் தொகுதி வாக்காளர்களாக மட்டும் தான் இருப்பார்கள்.

ஜெயலலிதா இறந்த பிறகு, ஆர்.கே.நகரில் இதுவரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தேதி வாரியாக இங்கே அலசலாம்.

டிசம்பர் 5 2016 - ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அவரது ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 29 - அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிப்ரவரி 5 2017 - அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

பிப்ரவரி 7 - தமிழகத்தின் முதல்வர் பதவியில் இருந்த விலகிய ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்த பின், சசிகலா குடும்பத்தை பற்றி புகார் வாசித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

பிப்ரவரி 14 - மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. அன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.

பிப்ரவரி 16 - சசிகலா சிறை தண்டனை பெற்றதால் அவரது அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது.

பிப்ரவரி 16 - "கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதும், துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டதும் செல்லாது. அதிமுகவில் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவி என்பது இல்லை. சசிகலாவுக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருப்பதும் கட்சிக்கு விரோதமானது" என்று ஒ.பி.எஸ். ஆதரவு எம்.பி.க்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் புகார் அளித்தனர்.

மார்ச் 9 - சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது. மார்ச் 23-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்செய்யலாம். ஏப்ரல் 15-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

இதில் திமுக சார்பில் மருது கணேஷ், ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன், சசிகலா சார்பில் டிடிவி தினகரன், தேமுதிக சார்பில் மதிவாணன், பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் ஆகியோர் போட்டியிட்டனர். பாமக, தமாக, மதிமுக ஆகிய கட்சிகள் ஆர்.கே நகர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.

மார்ச் 22 - எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 2-வது முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக என்ற பெயரை இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மார்ச் 23 - சசிகலா அணியினர் கட்சிக்கு 'அதிமுக அம்மா' என்ற பெயரையும், ஓபிஎஸ் அணியினரின் கட்சிக்கு 'அதிமுக புரட்சித்தலைவி அம்மா' என்ற பெயரையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

ஏப்ரல் 7 - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

விஜயபாஸ்கரின் நெருங்கிய கூட்டாளிகளிடம் இருந்து ரூ. 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும், கட்சி நிர்வாகிகள் மூலம் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காக ரூ. 89 கோடி வினியோகம் செய்யப்பட்டதற்கான ஆதார ஆவணங்கள் சிக்கியுள்ளன என்றும் வருமான வரித்துறை தெரிவித்தது

ஏப்ரல் 10 - பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, டில்லியில் நடந்த விரிவான ஆலோசனைக்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆர்.கே.நகரில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் தற்போது இல்லை. தொகுதியில் அதிகமான பணப்பட்டுவாடா நடந்தது வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.

ஏப்ரல் 18 - டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தடாலடியாக அறிவித்தார். தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு எள்ளளவும் அவர்களின் தலையீடு இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்துவோம் என்றார்.

மே 1 - தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து தீர்ப்பளித்தது டெல்லி மாவட்ட நீதிமன்றம்.

ஆகஸ்ட் 21 - பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைந்தன. கட்சி அலுவலகத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அணிகள் இணைப்பை உறுதி செய்தனர். இருவரும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

ஆகஸ்ட் 21 - அ.தி.மு.க. அணிகள் இணைப்பின் ஒரு பகுதியாக டி.டி.வி.தினகரன் ஓரங்கட்டப்பட்டார்.  துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதமானது. அவர் நியமித்த நிர்வாகிகள் செல்லாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நவம்பர் 23 - இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

நவம்பர் 24 - டிசம்பர் 21ம் தேதியன்று மீண்டும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்குகள் டிச. 24 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 26 - ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பல புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்தது. காலை 9 முதல் மாலை 5 மணி வரை மட்டும் வீடுவீடாக பிரச்சாரம் செய்ய வேண்டும். தெருக்களில் தேர்தல் பணிமனைகள் அமைக்கக் கூடாது, வெளி வாகனங்கள் தொகுதிக்குள் நுழையக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

நவம்பர் 27 - ஆர்.கே.நகரில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.

நவம்பர் 30 - மிக நீண்ட இழுபறிக்குப் பிறகு மதுசூதனன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில் மீண்டும் மருது கணேஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. நாம் தமிழர்கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் மீண்டும் நிற்கிறார். தேமுதிக தேர்தலை புறக்கணித்து விட்டனர். இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக திமுகவுக்கு ஆதரவை தெரிவித்துவிட்டன.

டிசம்பர்  4 - வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டு 73 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னர் வேட்பு மனு பரிசீலனையில் 13 பேர் திரும்பப் பெற்றனர். இதனால் தற்போது ஆர்.கே.நகரில் மொத்தம் 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

டிசம்பர் 4 - சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்க நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

டிசம்பர் 5 - விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். பின்னர், விஷால் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வற்புறுத்தியதை அடுத்து, அவரது வேட்புமனுவை ஏற்பதாக வேலுச்சாமி அறிவித்தார். ஆனால் நள்ளிரவில் மீண்டும் விஷாலின் வேட்புமனுவை தள்ளுபடி செய்து எழுத்துப்பூர்வமாக வேலுச்சாமி அறிவித்தார்.

டிசம்பர் 7 - இந்த விஷயத்தில் வேலுச்சாமி தவறு செய்திருந்ததாக புகார் கூறப்பட்டது. மேலும் அவரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. அதுதொடர்பாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதினார்.

டிசம்பர் 8 - பதில் கடிதம் அனுப்பிய இந்திய தேர்தல் ஆணையம், வேலுச்சாமியை மாற்றி, ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரவீன்நாயரை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது.

டிசம்பர் 16 - ஆர்.கே.நகர் தண்டையார் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒரு வாக்குக்கு ரூ.6 ஆயிரம் பணம் வழங்கிக்கொண்டிருந்ததாக ஒரு நபரை திமுகவினர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணம் பிடிபட்டது. இதே போல் வ.உ.சி மார்க்கெட் பகுதியிலும் ஒருவர் பிடிபட்டார்.

டிசம்பர் 18 - ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள காவல் துறை அதிகாரிகளையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் படி ஐபிஎஸ் அதிகாரியான சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் சுதாகரை இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம், அவருக்கு பதிலாக சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையரான பிரேமானந்த சின்ஹாவை நியமித்து உத்தரவிட்டது.

டிசம்பர் 19 - ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரம் மாலை 5 மணியோடு நிறைவடைந்தது.

டிசம்பர் 19 - ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்தாக உள்ளது என செய்திகளை சமூக தளங்களில் திடீரென பரவத் தொடங்கின. ஆனால், இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம், அத்தகவலில் உண்மையில்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்தார். இதன் பின்னரே, அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

டிசம்பர் 20 - தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்ற போது எடுத்தது என்று கூறி, ஜெயலலிதா பழச்சாறு அருந்துவது போன்ற 20 நொடிகள் ஓடக் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

ஆர்.கே.நகை இடைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்னதாக, இந்த வீடியோவை வெளியிட்டு மக்களை ஏமாற்ற தினகரன் முயல்வதாக அதிமுக அமைச்சர்கள் குற்றம் சாட்டினர்.

டிசம்பர் 20  - இடைத் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் போது, பிரச்சாரம் முடிந்த பின்னர், இந்த வீடியோவை வெளியிட்டிருப்பது விதிமீறல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

டிசம்பர் 20 - ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் வெற்றிவேல் மீது வழக்குப் பதிவு.

டிசம்பர் 20 - சசிகலாவின் உறவினர் கிருஷ்ணப்பிரியா செய்தியாளர்களை சந்தித்து, "வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். இந்நேரம் தினகரன் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" என்றார்.

டிசம்பர் 21 - ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment