Advertisment

ஆர்.கே நகர் பணப் பட்டுவாடா: முதலமைச்சர் பதவி விலகி சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும்: மு.க ஸ்டாலின்

தமிழக காவல்துறை எடப்பாடி பழனிசாமி மீதோ, மற்ற அமைச்சர்கள் மீதே நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin, CM Edappadi Palanisamy, MK Stalin, RK Nagar By-Poll, DMK, AIADMK,

ஆர்.கே நகர் விவகாரத்தில் தமிழக காவல்துறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதோ, மற்ற அமைச்சர்கள் மீதோ நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தானாக பதவியில் இருந்து விலகி, சுதந்திரமான விசாரணைக்கு வழி விடவேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் கொடுத்த புகார் பற்றி விசாரிக்க வேண்டிய பொறுப்பு சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு இருக்கிறது' என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருப்பதிலிருந்து, தலைமைத் தேர்தல் அதிகாரி தன் அரசியல் சட்ட கடமையிலிருந்து விலகிச் செல்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

Advertisment

தேர்தல் ஆணையமே இப்படியொரு பதிலை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தபிறகு, தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குளங்களுக்குச் சென்று புனித நீராடி, அந்தக் குளங்களுக்கு இருக்கும் புனிதத்தையும் கெடுத்து வருகிறார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ரூ.4,000 வீதம் பணம் விநியோகிக்கும், ரூ. 89 கோடி மதிப்பிலான பட்டியலைக் கைப்பற்றியது வருமான வரித்துறை. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து, 7.4.2017 அன்று நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டில் பறிமுதல் செய்தது. திமுகவு-க்கு இருந்த வெற்றி வாய்ப்பை தடுப்பதற்காக, இந்தப் பட்டியலை வைத்துத்தான் திடீரென்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதுமட்டுமின்றி, 'இன்றுவரை அந்தத் தேர்தலை நடத்த முடியாத சூழல் இருப்பதாக' தேர்தல் ஆணையமே கருதுகிறது. அவ்வளவு மோசமாக அதிமுகவின் ஊழல் பணம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஊர்வலம் வந்தது.

வருமான வரித்துறை ரெய்டுக்கு பிறகு, 34 பக்கம் கொண்ட அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில், அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 18.4.2017 அன்று தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டது. அந்த ரூ.89 கோடி பணப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய கதாநாயகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனை வெற்றிபெற வைப்பதற்காக, முதலமைச்சரே 33,193 வாக்காளர்களுக்கு ரூ.13.27 கோடி பணம் விநியோகித்தற்கான ஆதாரம் அந்தப் பட்டியலில் சிக்கியது.

இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு முதலமைச்சரே வாக்காளருக்குப் பணம் கொடுத்த புகார் ஆர்.கே.நகரில்தான் எழுந்தது. ஆனால், இன்றுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. வருமான வரித்துறையின் அறிக்கை தலைமைச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டது. அவரும் முதலமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், யார் பெயரும் இல்லாத முதல் தகவல் அறிக்கை ஒன்றினை, 27.4.2017 அன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதிவு செய்திருக்கிறார். அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் இல்லை. சுகாதாரத்துறை அமைச்சருக்கு வேண்டியவரிடம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்த ரூ.5 கோடி பற்றியும் இதுவரை எந்த நடவடிக்கையையும் இல்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு சொந்தமான இந்த ஊழல் பணம் குறித்து லஞ்ச ஊழல் தடுப்புத் துறை கூட விசாரிக்கவில்லை.

ரூ.89 கோடி வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றமே, சென்னை மாநகர இணை போலீஸ் கமிஷனரை நியமித்தது. ஆகஸ்ட் 23-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவி்ட்டது. அந்த போலீஸ் விசாரணையும் என்ன ஆயிற்று என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில்தான், 'தேர்தல் ஆணையம் அளித்த புகார் குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறார். காவல்துறைத் தலைவராக இருக்கும் டி.கே.ராஜேந்திரனோ 'எடப்பாடியின் அமைதிப்படையாக' இருக்கிறார். இவர்கள் முதல்வர் பழனிசாமி மீதோ, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதோ வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய தலைமைத் தேர்தல் அதிகாரியோ தன் பொறுப்பை கை கழுவியது மட்டுமல்லாமல், ஐந்து மாதங்களாக போலீஸின் அலட்சியத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆகவே, தமிழக காவல்துறை எடப்பாடி பழனிசாமி மீதோ, மற்ற அமைச்சர்கள் மீதே நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்பதால், ஒன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தானாக பதவியில் இருந்து விலகி, சுதந்திரமான விசாரணைக்கு வழி விடவேண்டும்.

இல்லையென்றால், '89 கோடி ரூபாய் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுங்கள்' என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியே தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஊழல் பணத்திலிருந்து வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கொடுத்த புகாரில், இந்திய தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டினால், அரசியல் சட்டம் உறுதியளித்துள்ளபடி, 'நேர்மையான மற்றும் சுதந்திரமான' தேர்தலுக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டு, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடிந்துவிடும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment