Advertisment

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவு பொதுத்தேர்வு தற்காலிக ரத்து: ராமதாஸ் வரவேற்பு

சி.பி.எஸ்.இ.க்கு இணையாக மாநிலப் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும் வரையிலும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ramadoss, TTV Dinakaran, AIADMK,18 MLA's disqualification, CM Edappadi Palanisamy, Speaker Dhanapal, Ramadoss, PMK

பொறியியல் படிப்புக்கு காட்டும் சலுகையை மருத்துவப் படிப்புக்கு காட்ட மத்திய அரசு மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு போன்று பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு தற்காலிகமாக கைவிட்டிருக்கிறது. ஊரக, ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும்.

பொறியியல் படிப்புக்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்தக் காரணம் குறிப்பிடத்தக்கது.      ‘‘ பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய  (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின்படி தான் நடத்தப்படவிருந்தது. ஆனால், தங்கள் மாநிலப் பாடத்திட்டம்  மத்தியப் பாடத்திட்டத்தின் அளவுக்கு மேம்பட்டதாக இல்லை என்பதால் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் எந்த அளவுக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று அந்த மாநிலங்கள் அச்சம் தெரிவித்தன. மேலும், அனைத்து மாநிலங்களிடமும் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட்ட பிறகு தான் பொறியியல் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதனால் தான் அது ரத்து செய்யப்பட்டு விட்டது’’என்று அனில் சகஸ்ரபுத்தே கூறினார்.

பொறியியல் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்காக தொழில்நுட்பக் கல்விக்குழு தெரிவித்துள்ள  காரணங்கள் அனைத்தும் மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுக்கும் (நீட்) பொருந்தும். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் பாடத்திட்டங்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்திற்கு இணையாக இல்லை என்றும், இதனால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்து விடுவார்கள் என்பதால் தான் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சமூகநீதியில் அக்கறை உள்ள அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இதே காரணங்களின் அடிப்படையில் பொறியியல் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்துள்ள மத்திய அரசு, மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மட்டும் ரத்து செய்ய மறுப்பது ஏன்? என்பது தெரியவில்லை.

பொறியியல் படிப்பை விட, மருத்துவப் படிப்பு தான் ஊரக மாணவர்களுக்கு அவசியமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வசிக்கும் நிலையில், 33% மருத்துவர்கள் மட்டுமே கிராமங்களில் சேவை செய்கின்றனர் என்று 2014-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய சுகாதாரத் தொகுப்பு ஆய்வு முடிவுகளில் தெரியவந்திருக்கிறது.

மருத்துவத்துறையின் புனித இதழ் என்று போற்றப்படும் லான்செட் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில், இந்தியாவிலுள்ள 25,300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8% மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை என்றும்,  மருத்துவர்கள் உள்ள மருத்துவமனைகளிலும் பெரும்பாலான நாட்களில் மருத்துவர்கள் வருவதில்லை  என்பதால் கிராமப்புற மக்களுக்கு மருத்துவச் சேவை என்பது தொடர்ந்து தொடுவானமாகவே தோன்றுகிறது.

பொறியியல் படிப்புக்கு காட்டும் சலுகையை மருத்துவப் படிப்புக்கு காட்ட மத்திய அரசு மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. பொறியியல் படிப்பைப் போலவே, மருத்துவப் படிப்புக்கும் மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்படும்  வரையிலும், சி.பி.எஸ்.இ.க்கு இணையாக மாநிலப் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும் வரையிலும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Central Government Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment