Advertisment

'நான்தான் கடவுள்' என்று கூறும் முதல்வரை தமிழ்நாடு இப்போது தான் பார்க்கிறது! - ராமதாஸ்

அகிலாண்டேஸ்வரியாகவும், கன்னிமேரியாகவும் சித்தரித்து நிர்வாகிகள் பதாகை அமைத்தால் அதை நினைத்து மனதிற்குள் மகிழ்வார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'நான்தான் கடவுள்' என்று கூறும் முதல்வரை தமிழ்நாடு இப்போது தான் பார்க்கிறது! - ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் திரையிடப்படும் சாதனை விளக்க விளம்பரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழுமலையானாக சித்தரிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முதல்- அமைச்சராக பதவியேற்ற 15 மாதங்களில் மக்களின் நலனுக்காக எதையுமே செய்யாத பழனிசாமி இப்படி விளம்பரப்படுத்திக் கொள்வது கண்டிக்கத்தக்கது.

Advertisment

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பினாமி அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைக் குறிக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவரது தோழி மற்றும் உறவினருடன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தும்படி கோருகிறார்.

யாருடைய பெயரில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கோவில் குருக்கள் கேட்கும் போது, மாற்றுத்திறனாளி பெயரில் வழிபாடு நடத்தும்படி அவரது உறவினர் கூறுகிறார்.

ஆனால், அதை இடைமறிக்கும் மாற்றுத் திறனாளி தமது பெயரில் வழிபாடு செய்ய வேண்டாம்; சுவாமி பெயருக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். எந்த சுவாமி பெயருக்கு என குருக்கள் கேட்க, "நம்ம தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அய்யா பெயருக்கு... அவர் தான் எனக்கு வேலை கொடுத்த சுவாமி" என்று அந்த மாற்றுத்திறனாளி கூறுகிறார். அடுத்த வினாடி திருப்பதி வெங்கடாஜலபதி சிலையாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோன்றி மறைகிறார்.

திரையரங்குகளில் இந்த விளம்பரத்தைப் பார்க்கும் மக்கள் நகைச்சுவையாகக் கருதி சிரிக்கிறார்கள் என்றாலும், இது ஒரு குரூரமான சிந்தனையாகும். தமிழகம் கடவுள் இல்லை என்று கூறிய முதல்வர்களைப் பார்த்திருக்கிறது.... கடவுள் உண்டு என்று கூறிய முதல்-அமைச்சர்களைப் பார்த்திருக்கிறது.... ஆனால், நான் தான் கடவுள் என்று கூறும் முதலமைச்சரை தமிழ்நாடு இப்போது தான் பார்க்கிறது.

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது தன்னை அகிலாண்டேஸ்வரியாகவும், கன்னிமேரியாகவும் சித்தரித்து அதிமுக நிர்வாகிகள் பதாகை அமைத்தால் அதை நினைத்து மனதிற்குள் மகிழ்வார்; அவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குவார். ஆனால், அதை ஒருபோதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அரசு செலவில் தம்மை கடவுளாக சித்தரித்து விளம்பரப் படம் தயாரித்து வெளியிட்டுக் கொண்டதில்லை.

முதல்-அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு மக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தினால், மக்களே ஆட்சியாளர்களை கடவுளாக கருதி வழிபடுவார்கள். சிங்கப்பூரின் லீ குவான் யூவையும், தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா, கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ, தமிழகத்தின் ஓமந்தூரார், காமராசர் ஆகியோரையும் மக்கள் கடவுளாகத் தான் கருதினர். அது தான் மக்கள் தரும் அங்கீகாரம் ஆகும். ஆனால், போட்டிகளில் வெற்றி பெற்று விருது வாங்க முடியாதவர், பாத்திரக்கடையில் கேடயம் வாங்கி பெருமைப்பட்டுக் கொள்வதைப் போலத்தான் எடப்பாடி பழனிசாமியின் செயல்கள் அமைந்துள்ளன.

தமிழகத்தில் ஒன்றரை கோடி பேர் படித்து விட்டு வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் கடைசி இடத்திற்கும் கீழே ஏதேனும் இடம் இருக்குமா? என்று தேட வேண்டிய நிலையில் தான் தமிழகம் உள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியாததால் ஆண்டு தோறும் அனிதாக்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

நிதி ஆணையத்தின் அதிகார வரம்பு மாற்றப்பட்டதால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.40,000 கோடி வருவாய்க்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆட்சியாளர்களுக்கு திறமை இல்லை.

மணல் கொள்ளையும், மது விற்பனையும் தான் இந்த ஆட்சியின் அடையாளங்களாக மாறியிருக்கின்றன. ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போல, காவிரி உரிமைக்காக தமிழ்நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தம்மை கடவுளாக காட்டிக் கொண்டிருப்பது ஆணவம் மட்டுமல்ல... அநாகரீகத்தின் உச்சமும் ஆகும். இதுபோன்ற செயல்களை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழகம் 7 லட்சம் கோடி கடன் சுமையில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்களின் வரிப்பணத்தை சுய விளம்பரத்திற்காக எடப்பாடி பழனிசாமி வீணடிப்பதை ஏற்க முடியாது. திருப்பதி ஏழுமலையானாக தம்மைக் காட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமியின் மலிவான செயல்களால், இறைவழிபாட்டில் நம்பிக்கைக் கொண்ட மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களை மட்டுமின்றி, கடவுளையும் அவமதிக்கும் வகையிலான விளம்பரப் படத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தாங்களாகவே வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர்க்க முடியாது" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment