Advertisment

திருமாவளவன் தலைக்கு விலை : திமுக, இடதுசாரிகள் மவுனம் ஏன்?

திருமாவளவன் தலைக்கு விலை வைத்த விவகாரத்தில் திமுக, இடதுசாரிகள் மவுனம் காக்கின்றன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thol.thirumavalavan, hindu temple, buddhist, tiruppur, gopinath, vihara, babri masjid demolition, vck, dmk, mk stalin

திருமாவளவன் தலைக்கு விலை வைத்த விவகாரத்தில் திமுக, இடதுசாரிகள் மவுனம் காக்கின்றன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

பாபர் மசூதி இடிப்பு தினம் மற்றும் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி சென்னை பெரம்பூரில் கடந்த 6-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ‘ராமர் பிறந்த இடம் என்பதற்காக பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவது என்றால், இந்தியாவில் இருக்கிற பல இந்துக் கோவில்களும் புத்த விகார்களை இடித்துக் கட்டப்பட்டவைதான். அப்படியானால் திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சி கோவில்களை இடிக்கவேண்டும். ஒரு வாதத்திற்கு சொல்கிறேன்’ என்றார்.

இதைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோர் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்தனர். திருப்பூரை சேர்ந்தவரான இந்து மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத், ‘திருமாவளவன் தலையை கொண்டு வருகிறவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என பேட்டியளித்தார்.

இந்த விவகாரத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா முதல் நபராக திருமாவளவனுக்கு ஆதரவாக அறிக்கை விட்டார். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி விடுத்த அறிக்கையில், ‘புலி வாலை மிதிக்க வேண்டாம் என்ற சொலவடை உண்டு; அதற்குப் பதிலாக, சிறுத்தைகளின் வாலை மிதிக்க ஆசைப்படாதீர் என்று எச்சரிக்கிறோம்!’ என கூறியிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்த அறிக்கையில், ‘அண்ணன் திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் என்ற ஒரு கட்சியின் தலைவரல்ல.. வீரத்திற்கும் அறத்திற்கும் எடுத்துக்காட்டாய் திகழும் ஒப்பற்ற தமிழினத்தின் தலைவர்களின் ஒருவர்.. அவர் தலைக்கு விலை வைக்கும் விளையாட்டை எல்லாம் இங்கே வைத்துக்கொள்ளக்கூடாது. தமிழகத்தை வன்முறை களமாக மாற்ற முனையும் இந்துத்துவாவாதிகளின் செயலை ஜனநாயக ரீதியில் முறியடிப்போம்.!’ என கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, ‘இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் திருமாவளவனுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக.வுக்கு ஆர்.கே.நகரில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ என ஹெச்.ராஜா, தமிழிசை ஆகியோர் விமர்சனம் வைத்தனர். இந்தச் சூழலில் திருமாவளவனும், ‘நான் எந்த உள் நோக்கத்துடன் அதை கூறவில்லை. ஒப்பீடு செய்து, அப்படி இடிப்பது தவறு’ என்றுதான் கூறினேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு யார் மனதை புண்படுத்தியிருந்தாலும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என விளக்கம் கொடுத்தார்.

இந்த விவகாரத்தில் திமுக தரப்பிலிருந்து இந்துத்வ அமைப்புகளுக்கு எதிரான அறிக்கை வரும் என சிறுத்தைகள் எதிர்பார்த்தனர். ஆனார் ஆர்.கே.நகர் தேர்தல் நெருக்கத்தில் திருமா இப்படி பேசியதை மு.க.ஸ்டாலினே விரும்பவில்லை. எனவே இந்த விவகாரத்தையே கண்டு கொள்ளாமல் கடந்து சென்றது திமுக!

திமுக கண்டுகொள்ளாதது, சிறுத்தைகளுக்கு பெரிய அதிர்ச்சி இல்லை. இடதுசாரிகளும்கூட இந்த விவகாரத்தில் இந்துத்வ அமைப்புகளுக்கு எதிராக எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்களும்கூட, ‘திருமாவின் பேச்சு தேவையற்றது. அதுவும் பாபர் மசூதி இடிப்பு தின நிகழ்ச்சியில் இந்துக் கோவில்கள் இடிப்பு பற்றி பேசியிருக்க வேண்டாம்’ என்றே கருதுவதாக தோழர்கள் தரப்பில் கூறுகிறார்கள். மதிமுக உள்ளிட்ட இதர எதிர்கட்சிகளிலும் எதுவுமே திருமாவின் தலைக்கு விலை வைத்த அறிவிப்பைக்கூட கண்டிக்கவில்லை.

இது குறித்து சிறுத்தைகள் கூறுகையில், ‘திமுக தலைவர் கருணாநிதி இதைவிட மிகக் கடுமையான விமர்சனங்களை இந்து மதம் மீது வைத்திருக்கிறார். இந்து என்றால் திருடன் என்றும், ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்றும் அவர் வைத்த விமர்சனங்களில் இருந்து அவர் பின் வாங்கவும் இல்லை. ஆனால் இனி வரும் காலகட்டங்களில் தமிழகத்தில் இந்துத்வாவை எதிர்த்தே பேச முடியாத சூழல் உருவாகிறதோ? எனத் தோன்றுகிறது. திமுக மற்றும் இடதுசாரிகளின் மவுனம் அதைத்தான் உணர்த்துகிறது.’ என்கிறார்கள்.

இதற்கிடையே திருமாவின் தலைக்கு விலை வைத்த கோபிநாத் மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டது. கோபிநாத்தை போலீஸார் கைது செய்தனர்.

 

Mk Stalin Dmk Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment