Advertisment

பொங்கல் 2018 : விடுமுறை கிடைத்தும் மாணவர்கள் துயரப்பட்டது ஏன் தெரியுமா?

பொங்கல் பண்டிகை விடுமுறை வாரத்தின் கடைசி நாளாக இருந்ததால் வெள்ளிக்கிழமை கொண்டாடுவதற்கு அனைத்துப் பள்ளிக் கல்லூரி நிர்வாகங்களும் திட்டமிட்டிருந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பொங்கல் 2018 : விடுமுறை கிடைத்தும் மாணவர்கள் துயரப்பட்டது ஏன் தெரியுமா?

முனைவர் கமல. செல்வராஜ்

Advertisment

ஒரு வாரத்திற்கு முன்பே வகுப்பாசிரியர் சொல்லி விட்டார் “இந்த முற நம்ம வகுப்புதான் ரெம்பச் சிறப்பாப் பொங்கல் விழாவ கொண்டாடணும், அதனால நீங்க எல்லாரும் நான் சொல்லிற மாதிரி ஒவ்வொருத்தரும் உங்க வீட்டிலிருந்து ஒவ்வொரு பொருளக் கொண்டு வரணும். சுரேஷ், பச்சரிசி…, கிறிஸ்டி, சர்க்கரை… அப்துல், கரும்பு…” என பட்டியலும் போட்டு முடித்தார்.

“எண்ணக்கி டீச்சர் பொங்கல் வைக்கிறது…” என மாணவர்களிடமிருந்து

ஒருமித்தக் குரல் எழும்ப “வரக்கூடிய சனிக்கிழம போகிப்பொங்கல், அதனால நாம வெள்ளிக்கிழமை பொங்கல் கொண்டாடலாம்” என ஆசிரியர் அறிவிக்க மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தின் உச்சத்திற்கேச் சென்று விட்டார்கள்.

நாளை வெள்ளிக்கிழமை டீச்சர் சொன்ன மாதிரி பொங்கல் விழாக் கொண்டாடுவதற்கு அனைத்து மாணவர்களும் அவரவருக்கு ஒதுக்கப்பட்டப் பொருள்களுடன் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் கரைபுரண்டோடும் உற்சாகத்துடனும் தயாராக இருந்தனர். அந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிக நேரம் மாணவர்களிடையே நீடிக்கவில்லை.

ஏனென்றால் வியாழக்கிழமை மாலை அந்த மாணவர்களின் வகுப்பாசிரியர் மிகவும் சோகம் கலந்த முகத்துடன் வகுப்பில் வந்து “நாள பள்ளி கல்லூரிகளுக்கு நம்ம அரசாங்கம் லீவு அறிவிச்சிருக்கு. அதனால நமக்குப் பொங்கல் கொண்டாடுவதற்கு முடியாம போயிட்டுது…” என அறிவிக்க, வாழ்க்கையில் விடுமுறை என்றாலே துள்ளிக் குதிக்கும் மாணவர்கள் அன்று ஏதோ சோகச் செய்தியை ஆசிரியர் அறிவித்தது போல் உணர்ந்து துயரத்தின் உச்சத்திற்கேச் சென்று விட்டனர்.

Pongal Celebration at school, Tamilnadu Government முனைவர் கமல.செல்வராஜ்

இது தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து தொடங்கி, கன்னியாகுமரி வரை ஒவ்வொருப் பள்ளி மட்டுமல்லக் கல்லூரியிலும் நடந்த எதார்த்தமானச் சம்பவம். இப்படியொரு ஏமாற்றமான சூழ்நிலைக் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்படுவதற்குக் காரணம், தமிழக அரசு வழக்கத்திற்கு மாறாக பொங்கல் பண்டிகைத் தொடங்குவதற்கு முந்தின நாளான ஜனவரி 12-ம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளி கல்லூரிகளுக்கும் திடீரென விடுமுறை அறிவித்ததாகும்.

பொங்கல் பண்டிகை விடுமுறை வாரத்தின் கடைசி நாளாக இருந்ததால் அதற்கு முந்தின நாள் வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு அனைத்துப் பள்ளிக் கல்லூரி நிர்வாகங்களும் திட்டமிட்டிருந்தனர். மட்டுமன்றி பெரும்பாலானப் பள்ளிகளில், ஆண்டு விழாக்கள் நடத்துவதற்குகூடத் திட்டமிட்டு அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்நிலையில் அரசின் இந்தத் திடீர் அறிவிப்பு அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

அரசு இந்த அதிரடி விடுமுறை அறிவிப்பு வெளியிட்டதற்குப் பல்வேறு பின்னணிக் காரணிகள் இருந்துள்ளன. அவற்றில் முக்கியமானதாக அறியப் படுவது, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்திலுள்ளப் அரசுப் போக்குவரத்துத் துறைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து பெரும்பாலும் ஸ்தம்பித்திருந்தது.

அதனால் பொதுமக்கள் கடுமையான அதிருப்தி அடைந்திருந்தனர். மட்டுமின்றி, பொங்கல் விடுமுறைக்கு தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று உறவினர்களைச் சந்திப்பதற்கும் இயலாமல் தவித்திருந்தனர். பொதுமக்களின் இந்தச் சிரமத்தைப் போக்குவதற்காக, தமிழகத்திலுள்ளப் பள்ளி கல்லூரிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் முன்கூட்டி விடுமுறை அளித்து விட்டு, தமிழகத்திலுள்ளத் தனியார் பள்ளி கல்லூரிகள் இயக்கும் வாகனங்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை வைத்து அரசுப் பேருந்துகளை இயக்குவதற்குத் திட்டமிட்டு, அதற்கான முன் ஏற்பாடுகளும் நடந்துள்ளன. அதற்காகத்தான் இந்த அதிரடி விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அதிரடி விடுமுறையினால், பள்ளி கல்லூரிகளில் பாதிக்கப் பட்டது பொங்கல் விழா மட்டுமல்ல. ஜனவரி 12 ஆம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள். இந்நாள் தேசிய இளையோர் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இத்தினத்தை முன்னிட்டு தமிழகத்திலுள்ள பெரும்பாலானப் பள்ளி கல்லூரிகளில், பல்வேறு விதமான நிகழ்வுகளும் போட்டிகளும் நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் பெரும்பாலான பள்ளிக் கல்லூரிகளில் விவேகானந்தர் ஜெயந்தி விழாவும், கருத்தரங்குகளும், போட்டிகளும் அறிவிக்கப் பட்டு அதற்கான ஆயத்தப்படுத்தல்களும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் இந்த அதிரடி விடுமுறை அறிவிப்பு தகர்த்தெறிந்து விட்டது.

இது பெரும்பாலான கல்வி நிறுவனங்களுக்கு பெரும் சிரமங்களையும் மாணவ மாணவியருக்கு மன உளச்சலையும் ஏற்படுத்தியிருக்கும். எனவே வரும் காலங்களில் இயற்கைக்கு மாறுபட்ட அதிரடி விடுமுறைகளை அரசு அறிவிக்கும் போது, அது சார்ந்து எழும் பிரச்னைகளையும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு அதிரடி விடுமுறை அறிவிப்பது அறிவுப் பூர்வமாக இருக்கும்.

(முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வர்! கட்டுரையாளர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முக ஆளுமை! பேச: 9443559841. அணுக: drkamalaru@gmail.com)

 

Pongal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment