Advertisment

”கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டு விட்டது”: ராமதாஸ்

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
ramadoss. PMK, Ramadoss,Karnadaka, Tamilnadu Government, Private sector job,

மருத்துவ படிப்பு சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு விட்டதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

Advertisment

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் எது நடக்கக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் அஞ்சிக் கொண்டிருந்ததோ, அது நடந்து விட்டது எனவும், இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதன் மூலம் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக்கனவு சிதைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘‘கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் சட்டவிரோத முறையில் எட்டப்படும்போது, குறிப்பாக நீட் தேர்வில் தகுதி பெற்ற சமநிலையில் உள்ள ஒரு பிரிவினருக்கு பாகுபாடு இழைக்கப்படும்போது, அவர்கள் நீதிகேட்டு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும்போது இந்த நீதிமன்றம் வாய்மூடி வேடிக்கைப் பார்க்க முடியாது’’ என்று கூறப்பட்டிருப்பதாக ராமதாஸ் தம் அறிக்கையில் தெரிவித்தார்.

”இந்த ஒதுக்கீட்டை மட்டும் தனித்துப் பார்க்கும் போது இக்கருத்து நியாயமானதுதான். ஆனால், இதை தனித்துப் பார்க்கக்கூடாது. மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வழங்கப் பட்டதால் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாக கவலைப்படும் நீதிமன்றங்கள், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளவில்லை.”, என ராமதாஸ் குறிப்பிட்டார்.

”சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அவர்களின் சமுதாய நலனுக்காக மருத்துவர்களையும், கல்வியாளர்களையும் உருவாக்க வேண்டியிருப்பதால் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களை ஒதுக்குவது உள்ளிட்ட அனைத்து விதிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் தேவையை கருத்தில் கொண்டு தனி ஒதுக்கீடு கோர தமிழக அரசுக்கு உரிமையுண்டு. இவற்றை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி 85% ஒதுக்கீட்டுக்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 15-க்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்ட நிலையில், தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் மட்டுமே வாதிட்டார். அவருக்கு உதவும் வகையில் சமூகநீதியில் அக்கறை கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் சிலரை தமிழக அரசு நியமித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக ஆட்சியாளர்கள் தவறி விட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது.”, எனவும் ராமதாஸ் கடுமையாக குற்றம்சாட்டினார்.

”கடந்த ஆண்டு தமிழக அரசின் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2,318 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன. அவற்றில் 2,279 இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்றினர். சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 16 இடங்களும், ஐ.சி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 3 இடங்களும், பிற பாடத்திட்ட மாணவர்களுக்கு 20 இடங்களும் கிடைத்தன. இந்த ஆண்டு ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படவுள்ள 3,377 இடங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு கிடைக்கும். இது கடந்த ஆண்டை விட 200 மடங்கு அதிகமாகும். அதேநேரத்தில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கடந்த ஆண்டு பெற்ற இடங்களில் 90 விழுக்காடு இடங்களை இழப்பார்கள். இது எந்த வகையில் நியாயம்?”, என ராமதாஸ் தம் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற தமிழக அரசு தவறிவிட்டது எனவும், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளிப்பதற்கு இதை ஒரு நிபந்தனையாக முன்வைத்து சாதித்திருக்கலாம் என ராமதாஸ் குறிப்பிட்டார். ஆனால், ”ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக தமிழக மாணவர் நலனை பினாமி அரசு காவு கொடுத்து விட்டது.”, என அவர் விமர்சித்தார்.

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் விலக்கு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவது அல்லது, சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி தீர்ப்பை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீட்டில் சிறந்த வழக்கறிஞர்களை அமர்த்தி வெற்றி பெறுவதன் மூலமோ மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் நலனை அரசு பாதுகாக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Chennai High Court Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment