Advertisment

இளைஞர் கொள்கை: வேலைவாய்ப்பை பெருக்க அரசின் செயல்திட்டம் என்ன? - ராமதாஸ்

இளைஞர் கொள்கை இரு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டு, இப்போது வெளியிடப்பட்டிருப்பதாக தெரிகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இளைஞர் கொள்கை: வேலைவாய்ப்பை பெருக்க அரசின் செயல்திட்டம் என்ன? - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் மாநில இளைஞர் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகாயத்தில் கோட்டைக் கட்டுவதைப் போன்று விண்ணை முட்டும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போதிலும், அவற்றை எட்டுவதற்கான எந்த செயல்திட்டமும் இளைஞர் கொள்கையில் இடம்பெறவில்லை. இளைஞர்களை முன்னேற்றுவதற்கான கொள்கை அவர்களை ஏமாற்றும் வகையில் அமைந்திருப்பது கண்டிக்கத்தது.

Advertisment

தமிழ்நாடு மாநில இளைஞர் கொள்கை 2018-ஆம் ஆண்டில் தான் வெளியிடப்பட்டிருக்கும் போதிலும், அது 2016-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. அதன் இலக்குகள் அனைத்தும் அடுத்த 7 ஆண்டுகளில் 2023-ஆம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், இளைஞர் கொள்கை இரு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டு, இப்போது வெளியிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. தமிழக அரசு எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம்.

2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் தனிநபர் வருமானம் மூன்று மடங்காக உயர்த்தப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் ரூ.1,53,263 ஆகும். இதை 2023 ஆம் ஆண்டில் ரூ.4,59,789 ஆக உயர்த்த வேண்டும் என்பது தான் இலக்காகும். ஒப்பீட்டளவில் பார்த்தால் இது பெரிய இலக்கல்ல. கோவா, தில்லி மாநிலங்களும், சண்டிகர் யூனியன் பிரதேசமும் இந்த இலக்கை நெருங்கி விட்டன. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவை இந்த இலக்கை எட்டிவிடும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது எட்ட முடியாத இலக்கல்ல. ஆனால், இதை எட்டுவதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் திறன் தற்போதைய அரசுக்கு இல்லை என்பதே உண்மை.

தமிழகத்தின் தனிநபர் வருமானத்தை 2023-ஆம் ஆண்டுக்குள் ரூ.4.60 லட்சமாக உயர்த்த, தனிநபர் வருமானம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.43,662 அதாவது 28.5% அதிகரிக்க வேண்டும். அதற்காக, தமிழகத்தின் வேளாண் உற்பத்தி குறைந்தபட்சம் 6% அளவுக்கு அதிகரிப்பது அவசியமாகும். ஆனால், தமிழகத்தின் வேளாண்துறை வளர்ச்சி கடந்த 2015-16 ஆம் ஆண்டில் மைனஸ் 3.60%, 2016-17ஆம் ஆண்டில் மைனஸ் 8% என எதிர்மறை வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் போக்கை மாற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளையும் பினாமி தமிழக அரசு இன்றுவரை மேற்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 80 லட்சம் இளைஞர்கள், வேலை வாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்யாமல் 70 லட்சம் இளைஞர்கள் என மொத்தம் ஒன்றரை கோடி பேர் வேலையில்லாமல் வாடுகின்றனர். அவர்களுக்கு வேலை வழங்குவதற்கான திட்டங்கள் எதுவும் மாநில இளைஞர் கொள்கையில் அறிவிக்கப்படவில்லை. மாறாக, வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காக வேளாண்மை, வாகனத் தொழிற்சாலை உள்ளிட்ட 14 தொழில்துறைகளில் கவனம் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 2001 முதல் 2011 வரையிலான பத்தாண்டுகளில் 8,67,582 பேர் விவசாயத்தை விட்டு வெளியேறி வேறு வேலைகளுக்கு சென்றுள்ளனர். 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த 6 ஆண்டுகளில் வேளாண்மை கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையில், அதன் மூலம் எத்தகைய வேலைவாய்ப்புகளை பினாமி அரசு உருவாக்கும்?

வேலைவாய்ப்புக்காக தமிழக அரசு நம்பியிருக்கும் மற்றொரு துறை வாகன உற்பத்தித் துறை ஆகும். இத்துறையில் கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி முதலீடுகளை பினாமி அரசு இழந்ததால் அந்த முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன. இவ்வாறு தமிழகத்திற்கு தானாக வந்த முதலீடுகளைக் கூட தவறவிட்ட அரசு மோட்டார் வாகனத் தொழிலை வலுப்படுத்தி வேலைவாய்ப்பைப் பெருக்கும் என்பதையெல்லாம் குழந்தைகள் கூட நம்ப மாட்டார்கள்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் 15 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் இளைஞர்கள் என்றும், இவர்களின் எண்ணிக்கை தமிழக மக்கள் தொகையில் சரிபாதி என்றும் தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. அவர்களில் 40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தினாலே தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு சுமார் 20 விழுக்காடு அதிகரிக்கக்கூடும். ஆனால், மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்காக ஊரெங்கும் மதுக்கடைகளை திறந்து இளைஞர் சமுதாயத்தை திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் சீரழித்து வருகின்றன. முளைக்கும் செடி மீது வெந்நீரை ஊற்றி விட்டு, அதை தோட்டமாக்கிக் காட்டுகிறேன் என்று கூறுவதைப் போலத் தான் இளைஞர்களை மதுவைக் கொடுத்து சீரழித்து விட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக இளைஞர் கொள்கையை வெளியிடுவதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு.

தமிழக அரசு வெளியிட்டுள்ள மாநில இளைஞர் கொள்கை யாருக்கும், எந்த பயனையும் அளிக்கப் போவதில்லை. தமிழகத்தில் மதுவை ஒழித்து வேலைவாய்ப்பைப் பெருக்குவதன் மூலம் மட்டும் தான் இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும். அதை செய்யாததன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை இருண்ட காலமாக்குவதற்கான நடவடிக்கைகளில் தான் பினாமி அரசு ஈடுபட்டுள்ளது" என்று தனது அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment