ஓ.பன்னீர்செல்வம் - பிரதமர் மோடி சந்திப்பு ஏன்? இபிஎஸ் ஷாக்!

ஓ.பன்னீர்செல்வம்- பிரதமர் மோடி சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு விவாதம் ஆகியிருக்கிறது. இது இபிஎஸ் தரப்புக்கு ஷாக்!

ஓ.பன்னீர்செல்வம்- பிரதமர் மோடி சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு விவாதம் ஆகியிருக்கிறது. இது இபிஎஸ் தரப்புக்கு ஷாக்!

ஓ.பன்னீர்செல்வம், அதிமுக-வில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதில் இருந்து டெல்லியின் செல்லப்பிள்ளை ஆனார். ஆனால் டெல்லி அவருக்காக உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, அவரால் அதிமுக-வில் மெஜாரிட்டி நிர்வாகிகளின் ஆதரவை பெற முடியவில்லை. எனவே ‘லேட்’டாக சசிகலாவை எதிர்த்தாலும், ‘லேட்டஸ்ட்’டாக வந்த எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு டெல்லியின் ஆதரவு கிடைத்தது.

ஓ.பன்னீர்செல்வம் அரசியல் ரீதியான சில நெருக்கடிகளால், எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதே தவிர, அரசு நிர்வாகத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. நேற்றைய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் வரை ஜெயலலிதா பாணியில், ‘நான் உத்தரவிட்டேன்’ என்றுதான் எடப்பாடி பழனிசாமியின் அதிகார பூர்வ அறிக்கைகள் வருகின்றன.

அதாவது, ஆட்சி ரீதியான முடிவுகளை முதல்வர் என்ற அடிப்படையில் துணை முதல்வரின் கலந்தாலோசனை கூட இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் இயங்க முடிகிறது. ஆனால் கட்சி ரீதியாக இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் அனுமதி இல்லாமல், ஒரு கிளைச் செயலாளரைக்கூட ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்-ஸால் நீக்க முடியாது.

ஆக, அணிகள் இணைப்பு என்ற பெயரில் இபிஎஸ் விரித்த வலைக்குள் ஓபிஎஸ் சிக்கிக் கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் குமுறியபடியே இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் கடந்த 6-ம் தேதி இரட்டை இலை சின்னம் வழக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் டெல்லியில் முகாமிட்டார். ஆனால் அன்று அவர் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு செல்லவில்லை.

அன்றே பிரதமர் மோடியை சந்திக்கும் திட்டத்துடன் அவர் டெல்லி சென்றிருந்ததாகவும், ஆனால் மோடி பிஸியாக இருந்ததால் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே மீண்டும் 13-ம் தேதி இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற இருந்ததையொட்டி, பிரதமரிடம் ஓபிஎஸ் தரப்பில் ‘அப்பாய்ன்மென்ட்’ கேட்கப்பட்டது.

இந்த முறை பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’, இன்று (12-ம் தேதி) காலை 11 மணிக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையே இரட்டை இலை சின்னம் வழக்கை 16-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது. ஆனாலும் அதைவிட முக்கியமாக பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’டை கருதும் ஓபிஎஸ் தரப்பு நேற்று (11-ம் தேதி) இரவு 7.45 மணிக்கு விமானம் மூலமாக டெல்லி சென்றனர்.

ஓபிஎஸ்.ஸுடன் அவரது மாஜி அணி தளபதிகளான கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் ஆகியோரும் டெல்லி சென்றனர். டெல்லி பயண நோக்கம் குறித்து ஓபிஎஸ்.ஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘பிரதமரை சந்தித்துவிட்டு சொல்கிறேன்’ என சஸ்பென்ஸ் வைத்தார்.

துணை முதல்வராக பதவியேற்றபிறகு, மரியாதை நிமித்தமாக பிரதமரை ஓபிஎஸ் சந்திப்பதாக ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால் விவரமறிந்த அரசுத்துறை வட்டாரங்களோ, ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும்தான் என்றால், முதல்வரும் துணை முதல்வருமே கைகோர்த்தபடி டெல்லிக்கு போயிருப்பார்கள். ஏனென்றால், பிரதமரை சந்திப்பதைவிட, எடப்பாடிக்கும் வேறு பெரிய வேலைகள் இல்லை.

ஆனால் அவரோ தனது பழைய அணி தளபதிகளான முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியனுடன் டெல்லி சென்றிருப்பதுதான் இந்தப் பயணத்தின் நிஜ நோக்கத்தை வெளிப்படையாக உடைத்திருக்கிறது. அதாவது, ஆட்சி ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் தான் புறக்கணிக்கப்படுவதை பட்டியலிடவே இந்தப் பயணத்தை ஓபிஎஸ் திட்டமிட்டிருக்கிறார்’ என்கிறார்கள் அவர்கள்.

எனினும் கடைசி நேரத்தில் ஓபிஎஸ் பயணத்தில் இபிஎஸ்-ஸின் நம்பிக்கை நட்சத்திரமான மின் துறை அமைச்சர் தங்கமணி இடம் பெற்றிருக்கிறார். இபிஎஸ் தரப்பில் டெ.ல்லி விவகார ரகசியங்களை கையாள்பவர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரை சந்தித்த பிறகு ஓபிஎஸ் என்ன சொல்லப் போகிறார்? அடுத்தடுத்த நாட்களில் ஆட்சியிலும் கட்சியிலும் என்னென்ன மாற்றங்கள் உருவாகும்? என்கிற எதிர்பார்ப்பு அதிமுக முகாம்களில் எதிரொலிக்கிறது. ஒரே உறைக்குள் இரு கத்திகள், அவ்வளவு சுமூகமாக இருக்க முடியாது போலவே தெரிகிறது.

 

×Close
×Close