Advertisment

டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லை : வைகோ

டெங்குவுக்கு சிகிச்சை கொடுக்கும் வகையில் போதுமான மருத்துவ பணியாளர்கள் இல்லாத நிலை இருப்பதாக வைகோ குற்றம் சாட்டியிருக்கிறார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லை : வைகோ

டெங்குவுக்கு சிகிச்சை கொடுக்கும் வகையில் போதுமான மருத்துவ பணியாளர்கள் இல்லாத நிலை இருப்பதாக வைகோ குற்றம் சாட்டியிருக்கிறார்.

Advertisment

டெங்கு பரவியிருப்பது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உயிரைப் பறிக்கும் டெங்குக் காய்ச்சல் மற்றும் வைரஸ், மூளைக் காய்ச்சல் தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரு நாட்களில் டெங்குக் காய்ச்சலால் பல மாவட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது டெங்குக் காய்ச்சலின் தீவிரத்தைக் காட்டுகிறது.

சேலம் அரசு மருத்துவமனையில் 4 சிறுவர், சிறுமியர் உயிரிழந்துள்ளனர். நெல்லையில் 4 வயது, 3 வயது சிறுமியர் இருவர் பலியாகி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் - ஆரணியில் 3 வயது சிறுவன், வேலூர் அடுக்கம்பாளையம் அரசு மருத்துவமனையில் இறந்துள்ளான். செய்யாறு கொடநகர் பகுதியில் 3 வயது சிறுமி செங்கல்பட்டு மருத்துவமனையிலும், கலசப்பாக்கம் அருகே மேலாரணி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

புதுக்கோட்டை, தஞ்சை, மாவட்டத்தில் 4 பேரும், சேலம், தேனி மாவட்டத்தில் 5 பேரும், சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரே நாளில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பதை செய்தி ஏடுகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.

நாள்தோறும் டெங்குக் காய்ச்சலால் உயிரிழப்புகள் உயர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு இதுவரையில் டெங்கு பாதிப்பால் 27 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என தகவல் அளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் டெங்குக் காய்ச்சல் அறிகுறியுடன் ஏராளமான பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை நாடினர். தென்மேற்கு பருவ மழை தொடங்கிய பின்னர் சுத்தமான நன்னீரில் உருவாகும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் பரவியதால், டெங்குக் காய்ச்சல் தீவிரமானது.

தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் டெங்குக் காய்ச்சல் தீவிரமாகி வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் 20 ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது சுகாதாரத்துறையின் கணிப்பின் மூலம் தெரிகிறது.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வரும் நிலையில், இரத்தப் பரிசோதனைக்கான ஆய்வகம் பற்றாக்குறை, போதுமான மருத்துவம் மற்றும் செவிலியர் இல்லாமை, மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பொதுமக்கள் உடனடியாக சிகிச்சை பெற முடியாத அவல நிலை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தற்போது டெங்கு மற்றும் மூளைக் காய்ச்சல் போன்றவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்குச் சென்றிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல் ஓர் ஆண்டாக சுகாதாரப்பணிகள் தேக்கம் அடைந்து கிடப்பதும் இன்றைய நிலைமைக்குக் காரணம் என்பதை தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சுகாதாரத்துறை உள்ளிட்ட மற்ற துறைகளையும் ஒருங்கிணைத்து போர்க்கால வேகத்தில் தமிழக அரசு செயல்பட வேண்டும். அப்போதுதான் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற இயலும்.

இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.

 

Vaiko Mdmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment