Advertisment

பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிரந்தரமாக தடுத்து நிறுத்துக: மு.க ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் விலையை விண்ணைத்தொடும் அளவிற்கு மத்தியில் உள்ள பாஜக அரசு உயர்த்திக் கொண்டே போவதற்கு திமுக சார்பில் கண்டனம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய செய்திகள்: தமிழக நினைவுச் சின்னங்கள், கோயில்களை மத்திய அரசு கைப்பற்ற முயற்சி - மு.க.ஸ்டாலின்

அப்பாவி மக்களையும், அடித்தட்டு மக்களையும் வாட்டி வதைக்கும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிரந்தரமாக தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெட்ரோல், டீசல் விலையை விண்ணைத்தொடும் அளவிற்கு மத்தியில் உள்ள பாஜக அரசு உயர்த்திக் கொண்டே போவதற்கு திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 'வானளாவிய அதிகாரம் எங்களுக்கு உண்டு' என்ற நினைப்பில், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தையே நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கும் பாஜக அரசு பெட்ரோல், டீசலுக்கு 'வானளாவிய விலையேற்றம்' செய்து 'எங்கள் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கான அரசு' என்ற ரீதியில் செயல்பட்டுக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

Advertisment

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இருந்ததைவிட தற்போது கச்சா எண்ணெயின் சர்வதேச விலை ஒரு பேரலுக்கு 52 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ள நிலையில், அப்போது இருந்ததை விட 50 சதவீதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது, 'எங்கள் அரசின் நோக்கம் மக்கள் நலனே' என்று 2014-ல் நாட்டு மக்களுக்கு பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெட்ரோல் விலையை உயர்த்திய போது, இதே பாஜக செய்தித் தொடர்பாளர்கள், 'இது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதார தீவிரவாத தாக்குதல்' என்று கடுமையாக விமர்சித்தார்கள். மத்திய ராணுவ அமைச்சராக இருந்து, தற்போது கோவா முதல்வராகியிருக்கும் மனோஜ் பாரிக்கர், 'பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் மக்களிடம் மத்திய அரசு கொள்ளை அடிக்கிறது' என்று விமர்சித்தார். குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி, 'பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோல்விக்கு முதல் உதாரணம்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டினார்.

ஆனால், இன்றைக்கு தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மத்தியில் உள்ள பாஜக அரசு, மக்கள் தலையில் 'பெட்ரோல், டீசல் விலை உயர்வு' என்ற 'சுமைதாங்கி பாறாங்கல்லை' தூக்கி வைத்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 11 முறை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி, தினமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்று அனுமதித்து, இன்றைக்கு பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 73.09 ரூபாயையும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 62.02 ரூபாயும் விற்கப்படும் சூழ்நிலை உருவாகி விட்டது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட எவ்வித விலை குறைப்பும் மக்களை சென்று அடையாமல், கடந்த மூன்று வருடங்களாக ஆட்சி செய்து வருகிறது பாஜக என்பதை காணும்போது, 'விவேகமாக அரசு நிர்வாகம் செய்வதை விட, விமர்சனம் செய்வது மட்டும் எங்களுக்கு எளிமையானது' என்று பாஜக செயல்படுவதாகவே அமைந்திருக்கிறது.

அனைத்து தரப்பு மக்களையும், சிறு தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதித்து இருக்கும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபுறமிருக்க, சமையல் வாயு விலை ஏற்றத்தின் மூலம் தாய்மார்களும் மிக மோசமான பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த பெட்ரோல் விலை உயர்வில் வரி கமிஷன் மட்டுமே 70 சதவீதத்திற்கு மேல் அடங்கியிருக்கிறது என்பதிலிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை எந்தளவிற்கு குறைந்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.

விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசோ அமைதியாக மக்கள் படும் வேதனைகளை வேடிக்கைப் பார்ப்பது கொடுமையான காட்சியாக இருக்கிறது. அதேநேரத்தில், மத்திய பாஜக அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், 'பெட்ரோல் விலை உயர்வால் ஏழைகளுக்கு பாதிப்பு இல்லை. வாகனம் உள்ளவர்கள் யாரும் பட்டினி கிடப்பவர்கள் அல்ல' என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியிருப்பது, மக்களின் துயரங்களைப் பற்றி மத்தியில் உள்ள பாஜக அரசு மட்டுமல்ல, அந்த அரசின் கீழ் பணியாற்றும் அமைச்சர்களும் உணர்வதில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஆகவே, மக்களை மிக மோசமாக பாதிக்கும் தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சமையல் எரி வாயு விலை ஏற்றத்தை தடுக்கவும் உடனடியாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அப்பாவி மக்களையும், அடித்தட்டு மக்களையும் வாட்டி வதைக்கும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிரந்தரமாக தடுத்து நிறுத்த, தினசரி விலை உயர்வுக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்த கொள்கையை உடனடியாக திரும்பப் பெறவும், சர்வதேச சந்தையில் கிடைக்கும் விலைக்குறைப்பின் பயன்கள் சாதாரண மக்களுக்கு சென்றடையவும் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Bjp Mk Stalin Dmk Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment