Advertisment

முதல்வர் வேடிக்கை பார்ப்பதா? கமலுக்கு ஸ்டாலின் ஆதரவு

கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவதை முதலமைச்சர் வேடிக்கை பார்ப்பது அடாவடி செயலாகும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stalin, Kamal haasan

நடிகர் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் மிரட்டி வருவதை, முதல்வர் வேடிக்கை பார்ப்பதா என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டு வருகிறார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பிக் பாஸ்" நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பிலும் தமிழக அரசுக்கு எதிரான அவரது கருத்து எதிரொலித்தது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் உள்ளது என கமல்ஹாசன் அப்போது குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து, தமிழக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசை கட்டிக் கொண்டு கமலை விமர்சித்தும், மிரட்டியும் வருகின்றனர். கமல்ஹாசன் இதுவரை அவர் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை விளக்குவாரா? ஆய்வு செய்யட்டுமா? என அமைச்சர் எஸ்பி வேலுமணி மிரட்டல் விடுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொறுப்பு கமல்ஹாசன்தான். அதில் பெண்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருக்கின்றன. இதற்காகவே கமலை கைது செய்ய வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டம் தெரிவித்தார். தம்பிதுரை, ஜெயக்குமார் என அனைவரும் கமலை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் மிரட்டி வருவதை, முதல்வர் வேடிக்கை பார்ப்பதா என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசை ஊழல் அரசு என்று பொதுமக்கள் சொல்வதைத்தான், குடிமக்களில் ஒருவரான கமல்ஹாசனும் தெரிவித்திருக்கிறார். அதற்காக அவர் மீது வன்மம் கொண்டு குதிரை பேர பினாமி அரசின் அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பதும், மிரட்டுவதும் ஜனநாயகத்தின அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும். இப்படி பேசும் அமைச்சர்களை முதலமைச்சர் வேடிக்கை பார்ப்பது அதை விட அடாவடி செயலாகும் என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் ஆதரவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் உடனடியாக நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில்,"அன்பு சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது" என அவர் பதிவிட்டுள்ளார்.

Mk Stalin Dmk Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment