Advertisment

70 இடங்களில் புதிய மணல் குவாரிகள்: 'சுத்த சுயநோக்குப் பார்வையில்' எடுக்கப்பட்டுள்ள அவசர முடிவு! - ஸ்டாலின்

குதிரை பேர அரசு, புதிய மணல் குவாரிகளை திறப்பதில் திடீர் ஆர்வம் காட்டுவது முழுக்க முழுக்க முறைகேடுகளுக்கும் ஊழலுக்குமே வழிவகுக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
70 இடங்களில் புதிய மணல் குவாரிகள்: 'சுத்த சுயநோக்குப் பார்வையில்' எடுக்கப்பட்டுள்ள அவசர முடிவு! - ஸ்டாலின்

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் எழுபது மணல் குவாரிகளைப் புதிதாய் திறக்க 'குதிரை பேர' அதிமுக அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கிராவல் மண் காண்டிராக்ட் ரகசியமாக விடப்பட்டு, அத்துமீறி ஆங்காங்கே கிராவல் மண்ணை அள்ளி அரசுக்குப் பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

Advertisment

மாநிலத்தில் உள்ள முக்கிய பகுதிகளான காவிரி டெல்டா, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட இயற்கை வளங்களை எல்லாம் விதிகளுக்கு மாறாக சூறையாடிய அதிமுக அரசின் மணல் கொள்ளை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தற்போது பொதுப்பணித்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தங்கு தடையின்றி மணல் கொள்ளை ஏகபோகமாக நடைபெற்று, சேகர் ரெட்டி என்ற ‘மணல் மாஃபியா’ உருவான கதை இன்றைக்கு சிபிஐ வரை சென்றிருக்கிறது.

தமிழகம் முழுவதும் இருந்த 35-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூலம் இயற்கை வளங்களை ‘மணல் மாபியாக்கள்’ சூறையாடி, நிலத்தடி நீருக்குக் கேடு விளைவித்து வருவதை எதிர்த்து விவசாயிகளும், கிராம மக்களும் சளிக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பல்வேறு இடங்களில் உள்ள குவாரிகளில் பொதுப்பணித்துறையின் விதிமுறைகளுக்கு மாறாக மணல் படுபாதாளம் வரை தோண்டியெடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், மணல் குவாரிகளுக்கு நீதிமன்றங்களும் தடை விதித்துள்ளன.

மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ‘ராஜேஷ் லக்கானி கமிட்டி’ ஒரு விசாரணை அறிக்கையே கொடுத்து, அதுவும் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த 2008 ஆம் ஆண்டு, செயற்கை மணல் (M-Sand) பயன்படுத்துவதற்கு கழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும், அதை அதிமுக அரசு அப்படியே கிடப்பில் போட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் கடந்த 5.5.2017 அன்று “மணல் குவாரிகளில் தமிழக அரசே மணல் விற்பனை நிலையம் அமைத்து விற்பனை செய்யும்”, என்று திரு. எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த காலகட்டத்தில் எத்தனை மணல் குவாரிகளில் மணல் விற்பனை மையத்தை அரசு நடத்தியது? அவற்றில் எவ்வளவு மணல் விற்கப்பட்டது? அரசே மணல் விற்பனை மையத்தை நடத்திய நேரத்தில் மணல் விலை ஏன் செயற்கையாக ஏற்றப்பட்டது? போன்ற பொதுநலன் சார்ந்த கேள்விகளுக்கு எல்லாம் இதுவரை பதிலில்லை.

அதுமட்டுமின்றி, மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் (M.Sand) தயாரிக்க விண்ணப்பித்த கம்பெனிகளுக்கு அனுமதி வழங்குவதில் ‘குதிரை பேர’ அரசு தாமதம் செய்தது ஏன்? தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்கள் பறிபோவதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் விற்பனையை அனுமதிக்க ‘குதிரை பேர’ அரசு மறுப்பது ஏன்? என்ற கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை.

அரசு ஏற்கனவே உருவாக்குவதாகக் கூறிய மணல் விற்பனை நிலையம் முழு வீச்சில் செயல்படாமல் வேண்டுமென்றே முடக்கப்பட்டு, செயற்கை மணல் பயன்படுத்துவதற்கும் போதிய ஊக்கமளிக்காமல், வெளிநாட்டு மணலையும் விற்கவிடாமல், ஒரு செயற்கையான விலை ஏற்றத்திற்கு வித்திட்டுள்ள ‘குதிரை பேர’ அரசு இப்போது மணல் விலையை கட்டுப்படுத்த, 70 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்திருப்பது நிச்சயமாக ‘தொலை நோக்குப் பார்வை’யில் மக்களின் சிரமங்களை போக்குவதற்காக எடுத்த நடவடிக்கை அல்ல என்பதும் இது முழுக்க முழுக்க ‘சுத்த சுயநோக்குப் பார்வையில்’ எடுக்கப்பட்டுள்ள அவசர முடிவு என்றும் தெளிவாகிறது.

தமிழகத்தைச் சிறிது சிறிதாகப் பாலைவனமாக்க முயற்சிக்கும் இந்த அறிவிப்பு, விவசாயத்திற்கான நீர் ஆதாரங்களை முழுவதும் சீர்குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

அதிலும் குறிப்பாக கட்டுமானத் தொழில்களை முடக்கும் விதத்தில் மணல் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கிய குதிரை பேர அரசு ‘கிராவல் மண்’ எடுக்க அனுமதி வழங்கிய கையோடு, 70 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை எடுத்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சேகர் ரெட்டி போல் மணல் மாபியாக்கள் ஆதிக்கம் செலுத்தவும், மாமூல் ராஜ்யம் தங்குதடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காகவும் ‘மணல் திருட்டு ஒழிப்பு’, ‘விலையேற்றத்தைத் தடுக்க நடவடிக்கை’ என்று கண் துடைப்பு நாடகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரங்கேற்றி இருக்கிறார்.

ஏற்கனவே மணல் குவாரிகளில் வேளாண் பொறியியல் துறையில் உள்ள பொக்லைன் இயந்திரங்களைக்கூட பயன்படுத்தாமல், தனியார் பொக்லைன் இயந்திரங்களை விட்டு இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு, காவிரி டெல்டா பகுதிகள், பாலாறு பகுதிகள், தாமிரபரணி பகுதிகள் எல்லாம் பாழாகும் வகையில் மணல் தோண்டி எடுக்கப்பட்டதை இந்த அதிமுக அரசு தாராளமாக அனுமதித்தது. அதே போன்றதொரு இயற்கை வள மோசடிக்கு இந்த 70 மணல் குவாரிகளை பயன்படுத்தி, சுற்றுப்புறச் சூழலுக்கும், விவசாயத்திற்கும் கேடு விளைவிக்கும் செயலில் இந்த ‘குதிரை பேர’ அரசு ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே, தரக்கட்டுப்பாட்டுக்குப் பொருத்தமான வகையில் செயற்கை மணல் (M-Sand) பயன்படுத்துவதை தீவிரமாக ஊக்கப்படுத்துவதிலும், அந்த மணல் தயாரிப்பில் ஈடுபட விரும்பும் ‘எம்.சேன்ட்’ தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அனுமதி அளிப்பதிலும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் விற்பனைக்கும் அனுமதி வழங்குவதிலும் ஆர்வம் காட்ட மறுக்கும் குதிரை பேர அரசு, புதிய மணல் குவாரிகளை திறப்பதில் திடீர் ஆர்வம் காட்டுவது முழுக்க முழுக்க முறைகேடுகளுக்கும் ஊழலுக்குமே வழிவகுக்கும். அதுமட்டுமின்றி சுற்றுப் புறச்சூழலுக்கும், விவசாயத்திற்கும், குடிநீர் பிரச்சினைக்கும் பேராபத்தாக முடியும்.

தமிழக நலன் கருதி புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை ‘குதிரை பேர’ அதிமுக அரசு கைவிட வேண்டும். அப்படி கைவிடத் தவறினால், புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்படும் இடங்களில் ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்" என்று தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்,

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment