Advertisment

நீட் தேர்வு; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வைக்கும் மூன்று கேள்வி?

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீட் தேர்வு; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வைக்கும் மூன்று கேள்வி?

மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

வருமான வரிச் சோதனைகள், அமலாக்கப் பிரிவு விசாரணை மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு பெற சொந்த கட்சியினருக்கே லஞ்சம் கொடுத்த விவகாரம் என நான்கு திக்குகளிலும் நெருக்கடியை எதிர்கொண்டு, எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும் இந்த அரசு என்ற கேள்விகளுக்கு மத்தியில், ஓர் இடைக்கால அரசை நடத்திக் கொண்டிருக்கிற திரு. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு, பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டின் நலன்களை மத்திய அரசிடம் அடகு வைத்துக் கொண்டிருக்கிறது.

‘ஒரே நாடு, ஒரே தேர்வு’, என்ற வல்லாதிக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் திணிக்கப்படும் நீட் தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது, மாநில உரிமைகளுக்கு எதிரானது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இந்தத் தேர்வை ஏற்றுக்கொண்டால் பல்லாயிரக்கணக்கான ஏழை, கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்று தி.மு.கழகம் சார்பில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். எங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ள அரசு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகைசெய்யும் சட்ட மசோதாவை தமிழக சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியது. தான் அனுப்பிய தீர்மானத்தை சட்டமாக்குவதற்கு மத்திய அரசிடம் வாதாடி, உரிமையை நிலைநாட்டத் தவறிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசு, தனது துரோகத்தை மறைப்பதற்காக, குறுக்குவழியைக் கையாண்டு திசைதிருப்பும் முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறது.

நீ்ட் மதிப்பெண்களின் அடிப்படையில், 85 சதவீத எம்.பி.பி.எஸ்., இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், எஞ்சிய 15 சதவீத இடங்கள் ஏனைய பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அரசாணை மாணவர்கள் நலனை எந்தவகையிலும் பாதுகாக்கப் போவது இல்லை. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கப்போவது இல்லை.

ஏனென்றால், ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முன்னணி இடங்களைப் பெற்ற மாணவர்கள் பலரும், நீட் தேர்வில் மிகக் குறைவான மதிப்பெண்களை எடுத்துள்ளனர். அவர்கள் படிக்காத பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதும், கேள்வித்தாள்களில் இருந்த முரண்பாடுகளும் இந்தக் குழப்பங்களுக்குக் காரணங்கள். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு இருக்காது என்று கடந்த ஆண்டு முதலே, தவறான வாக்குறுதியை திரும்பத் திரும்ப தெரிவித்த அதிமுக ஆட்சியாளர்கள்தான், தமிழக மாணவர்கள் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளுக்குத் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

இந்த நிலையில், பிளஸ் டூ மதிப்பெண்களை முற்றாக ஒதுக்கிவிட்டு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் செய்யப்படும் மிகப்பெரிய அநீதியாகும். நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றிவிட்டு, அதே நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கிறோம், மாநில நலனைப் பாதுகாக்கப் போகிறோம் என்று தமிழக அரசு தரும் விளக்கம் கேலிக்கூத்தானது, முரண்பாடானது.

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு தரும், அதிமுகவின் மூன்று கோஷ்டிகளும், நீட் சட்டத்தை ஏற்றுக் கொண்டால் தான் ஆதரவு என நிபந்தனை விதித்திருக்க வேண்டும். அதை செய்வதற்கான அரசியல் துணிவு, அதிமுகவின் எந்த கோஷ்டிக்கும் இல்லை. தமிழ்நாட்டின் உரிமையை டெல்லி ஆட்சியாளர்களின் கால்களில் அடகு வைத்துவிட்டு, டெல்லிக்கு தாளம் போடுவதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஆகவே, இதுகுறித்த என்னுடைய 3 கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் கூற வேண்டும்.

1. நீட் மசோதாவுக்கு இசைவு தந்தால்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு என்று அதிமுக சார்பில் நிபந்தனை விதிக்காதது ஏன்? நீட் மசோதாவை குடியரசுத் தலைவரின் இசைவுக்காக இதுவரை அனுப்பி வைக்காத மத்திய அரசைக் கண்டிக்காமல் வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன்?

2. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில், 10 சதவீதத்துக்குக் குறைவான அளவிலான மாணவர்களே சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவை சேர்ந்தவர்கள். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிரிவினருக்கு 15 சதவீத இடங்கள் எந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன?

3. பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்று, சாதனைப் படைத்த மாணவர்கள் கூட, நீட் தேர்வில் சொற்பமான மதிப்பெண்களைப் பெற்றுள்ள நிலையில், அந்த மாணவர்களுக்குக் கிடைக்கப்போகும் பரிகாரம் என்ன? மாநிலப் பாடத்திட்டத்தில் மிக அதிக மதிப்பெண் எடுத்தவர்களை வஞ்சித்து வி்ட்டு, தமிழக மாணவர்களின் நலனை இந்த அரசாணை எவ்வாறு பாதுகாக்கப் போகிறது? தமிழக அரசின் இந்த அரசு ஆணையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அனுமதிக்கும் என்பதற்கான உத்தரவாதம் என்ன?

ஆகவே, தமிழக அரசின் இந்தப் புதிய அறிவிப்பு கடைசி நேரத்தில் செய்யப்படும் அலங்கோலமான, அரைகுறையான ஏற்பாடு. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெறுவதற்கு, போர்க்கால நடவடிக்கையை எடுப்பதும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடத்துவதும்தான் ஒரே தீர்வு. இதைத் தவிர்த்துவிட்டு, திசைதிருப்பும் செயல்களில் ஈடுபடுவது, தமிழக மாணவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மக்களுக்கும் இழைக்கிற அநீதி. அதிமுக அரசின் தோல்வியை மறைக்க செய்யப்படும் இந்த அரசியல் மோசடி, மேலும் பல குழப்பங்களுக்கு வழி வகுக்குமே தவிர, நிரந்தரமான தீர்வைத் தராது. பரிதவித்துக் கொண்டு இருக்கின்ற மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தவறான செயல்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டாம் என இந்த அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

Bjp Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment