Advertisment

'தவணை கேட்பதற்கும்’, ‘தள்ளிப்போடுங்கள் என்று கெஞ்சுவதற்கும்’ இது மானியம் அல்ல: நீட் குறித்து ஸ்டாலின்!

புற்றீசல் போல நீட் பயற்சி மையங்கள் இப்போதே உருவாகத் தொடங்கிவிட்டன. ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தும் வசதி படைத்தவர்கள்தான் அதில் பயில முடியும்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
'தவணை கேட்பதற்கும்’, ‘தள்ளிப்போடுங்கள் என்று கெஞ்சுவதற்கும்’ இது மானியம் அல்ல: நீட் குறித்து ஸ்டாலின்!

எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், நீட் தேர்விற்கு எதிராக வரும் 27-ஆம் தேதி திமுக சார்பில் நடக்கவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், "இந்த ஓராண்டுக்கு மட்டுமாவது நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்காக, தங்கள் எஜமானர்களிடம் தமிழக அமைச்சர்கள் மண்டியிட்டு ஒரு தற்காலிக தீர்வை காணுவதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். இது தமிழக சட்டப்பேரவையில் நிரந்தர தீர்வு காண நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு வெளிப்படுத்தும் உணர்வுக்கு எதிரானது ஆகும். தமிழ்நாடு கோருவது, மாநில உரிமை. நமது மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை, நமது மாநிலத்தின் நிதி ஆதாரத்தில் நடத்தும் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க மத்திய அரசு ஏன் தேர்வு நடத்த வேண்டும்? இதுதான் நாம் எழுப்பும் அடிப்படை கேள்வி. மாநில உரிமை பறிப்புக்கு எதிராகக் கொந்தளித்து எழ வேண்டிய அரசு, டெல்லி ஆட்சியாளர்களிடம் கை கட்டி, வாய் பொத்தி, கெஞ்சிக் கொண்டு இருக்கிறது. நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் இதுபோன்ற தந்திரங்களை கைவிட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

“இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வேண்டுமானால், நீ்ட்டில் இருந்து விதிவிலக்கு பெறலாம், நிரந்தரமான விலக்கு கேட்கக்கூடாது” என்று தமிழக பாஜக தலைவர் சகோதரி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். “நீட் தேர்வால் பாதிப்பு வராது, தரம் உயரும். நீட் தமிழகத்திற்கு தேவை”, என்றெல்லாம் மனம்போன போக்கில் பேசிவந்த பாஜகவினர், தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, முதல் தலைமுறையாக கல்லூரிகளில் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை இப்போதேனும் உணரத் தொடங்கியுள்ளனர் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்ற பா.ஜ.க.வின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. நீட் தேர்வே கூடாது என்பதுதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு.

'தவணை கேட்பதற்கும்’, ‘தள்ளிப்போடுங்கள் என்று கெஞ்சுவதற்கும்’, இது ஒன்றும் மத்திய அரசு தனது விருப்பம்போல் தரும் மானியம் அல்ல. நீட்டைத் திணிக்காதீர்கள் என்று நாம் கேட்பது நம் மாநில உரிமை. அடிப்படையில், நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற, ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் பாதகமானவை என்ற கோணத்தில், சமூக நீதி மற்றும் மாநில உரிமை என்ற இரு ஜீவாதார அடிப்படையில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. எனவே, தற்காலிக தீர்வு காண்பதற்கு மட்டுமே அடி பணிந்து மாநில உரிமைகளை முழுவதுமாக அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சிக்கக்கூடாது. அப்படிச் செய்வது, தமிழ்நாடு மாணவர்களுக்குச் செய்கிற நிரந்தர துரோகமாக அமைந்துவிடும். சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை நீர்த்துப் போகச் செய்து, சமூகநீதிக்கு சவக்குழி தோண்டுவதாக ஆகிவிடும்.

“நீட் தேர்வில் குளறுபடிகளே நடைபெறவில்லை”, என்று மத்திய அரசும் அதன் விசுவாசிகளும் வாதாடி வந்தார்கள். இப்போது, நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் தரப்படவில்லை என்பதை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, அடுத்த ஆண்டு முதல் இந்த குறைபாடுகள் இருக்காது என்று உறுதி அளித்துள்ளார். கடந்த ஆண்டில், ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள் தந்ததால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு என்னவிதமான இழப்பீட்டை தரப் போகிறார்கள்? ‘நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று அறிவித்துவிட்டு, ஒரே மாதிரியான கேள்வித்தாளை வழங்காத நிலையில் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதுதானே நியாயம்?

‘நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொண்டிருப்பவர்கள், டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் நிதியில் நடத்தப்படுகின்ற, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மர், பிஜிஐ (சண்டிகர்) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விதிவிலக்குத் தந்துள்ளது ஏன்? அந்த மருத்துவக் கல்லூரிகளை விட, சென்னை ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை மற்றும் சென்னை மருத்துக் கல்லூரி எந்த வகையில் தரம் குறைந்தது?

மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, ஒற்றைச் சிந்தனையைத் திணிக்கிற கொடுங்கோன்மைக்கு எதிராகத் தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளும் இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, சட்டமன்றத்தில் மாநில உரிமை காப்புக்காக ஒன்றுபட்டு நிற்கிறோம். ஆனால், அதிமுக அரசோ குறுகிய மனப்பான்மையோடு, அற்பமான அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்ள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசுக்கு அடி பணிந்து கிடக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி மாநில உரிமையை நிலை நாட்டத் தவறி வருகிறது. நீட் விஷயத்தில் எடப்பாடி அரசின் இந்த அற்பமான போக்கு தமிழ்நாட்டின் நலனுக்கு ஊறு விளைப்பது ஆகும்.

“தமிழ்நாட்டின் கல்வித்தரம் சரியல்ல”, என்ற சாரமற்ற வாதத்தை, பாஜகவினரும் அதன் அடிவருடிகளும் கூசாமல் சொல்லி வருகின்றனர். கல்வித்தரம் பற்றி பேசுவது, மாநில உரிமை பறிப்பை மறைப்பதற்குச் செய்கிற தந்திரமே தவிர வேறல்ல. இதே பாடத்திட்டத்தில் பயில்கிற மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளில் அகில இந்திய அளவில் நூற்றுக்கணக்கில் வெற்றி பெறுகிறார்கள். உலகம் முழுவதும் மருத்துவர்களாகவும், மென்பொருள் வல்லுநர்களாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். தரமில்லாத கல்வியாக இருந்திருந்தால், இந்த வாய்ப்புகள் அவர்களுக்கு வசப்பட்டிருக்குமா? எந்தவிதமான ஆதாரமும் இன்றி, ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’, என்று தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறைபாடு கொண்டது என்று சொத்தை வாதத்தை முன்வைத்து தமிழக மாணவர்களின் அறிவுத்திறனை கொச்சைப்படுத்தும் போக்கை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசின் சார்பில் பல்கலைக்கழகங்கள், மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் நிறுவப்பட்ட அளவுக்கு வேறெந்த மாநிலத்திலாவது ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை, எங்களை விமர்சிப்போர் மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் தமிழ்நாடு காட்டிய முனைப்பை வேறெந்த மாநிலம் செய்திருக்கிறது என்பதை அவர்கள் பட்டியல் இட்டு சொல்லட்டும். நீட் தேர்வு என்பது, கல்வித் தரத்தை ஒருபோதும் மேம்படுத்தப் போவது இல்லை. மாறாக, மாணவர் சேர்க்கையில் குளறுபடியையும் சமூக நீதிக்கு அநீதியையும்தான் ஏற்படுத்தப்போகிறது.

புற்றீசல் போல நீட் பயற்சி மையங்கள் இப்போதே உருவாகத் தொடங்கிவிட்டன. ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தும் வசதி படைத்தவர்கள்தான் அதில் பயில முடியும். ஏழ்மையில் வாடும் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இதுபோன்ற சிறப்புப் பயிற்சியைப் பெற முடியாத நிலையில் பாதிப்புக்கு ஆளாவார்கள். மேலும், நீட் தேர்வை ஒரு மாணவர் 3 முறை எழுதலாம். ஓராண்டில் போதிய மதிப்பெண் பெறாவிடில், அடுத்த ஆண்டு சிறப்புப் பயிற்சி பெற்று மீண்டும் எழுதலாம். இது, மறைமுகமாக - சமமற்ற தன்மையை ஏற்படுத்தும். அரசு பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பைப் படித்துவிட்டு முதல் முறையாக நீட் தேர்வு எழுதுவோரும், நீட் தேர்வுக்காகவே இரண்டு, மூன்று ஆண்டுகள் படித்து தேர்வு எழுதுவோரும் - தேர்வுகளை எழுதும்போது அது சமனற்ற நிலையை ஏற்படுத்தும். வசதியானவர்களுக்கு சாதகமான சூழல், ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாக அமைந்துவிடும்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி முறையைப் பாதுகாக்கவும், சமூக நீதி பறிபோகும் ஆபத்தை முறியடிக்கவும், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலக் கனவு சிதைந்துபோகாமல் தடுக்கப்படவும் எல்லோரும் ஓர் அணியில் திரள வேண்டும். ஜனநாயகம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்டோர், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் எண்ணம் கொண்டோர் என யாவரையும் கட்சி பேதமின்றி, நீட் எதிர்ப்பு முழக்கமிட அழைக்கிறேன்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment