Advertisment

இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவேண்டும்: வைகோ ஆவேசம்!

வேலியே பயிரை மேய்ந்தது போல, இந்தியக் கடலோரக் காவல்படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற அளவுக்குத் துணிந்ததற்கு மத்திய அரசே காரணம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவேண்டும்: வைகோ ஆவேசம்!

இராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது, இந்திய கடலோர காவல்படையினர் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பிச்சை, ஜான்சன் ஆகிய இரு மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், "நவம்பர் 13 திங்கள் கிழமை அன்று பிற்பகல் 4 மணி அளவில், இந்தியக் கடலோரக் காவல்படையினர், இராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். அதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் என்பவருக்கு இடது கை மணிக்கட்டுக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்களை கடலோர காவல் படையினர் மேலும் லத்திக் கம்பால் அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். மீனவர்கள் தமிழில் பேசியபோது, இந்தியில் பேசுமாறு அவர்களை அடித்துள்ளனர். இன்று 14.11.2017 காலை எட்டரை மணி அளவில், மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் அவர்களிடம் நான் அலைபேசியில் தொடர்புகொண்டபோது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்தியக் கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், படகுகளின் மீது பாய்ந்த துப்பாக்கித் தோட்டாக்களின் சிதறல்களை படகுகளில் இருந்து மீனவர்கள் எடுத்து வைத்து உள்ளனர். பிற்பகல் நான்கு மணிக்கு இந்தச் சம்பவம் நடைபெற்று இருந்தும் காயப்பட்ட மீனவர்களை நள்ளிரவுக்கு மேல் இரண்டு மணிக்குத்தான் கடலோர காவல்படையினர் கரைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

ஆனால் இந்தியக் கடலோர காவல் படையினர் இந்தச் சம்பவத்தை ஒரேயடியாக மறுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும், மீனவர்களைத் தாக்கவில்லை என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறி உள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பகுதியிலும் தாக்குவதும் சுட்டுக் கொல்வதும் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெறும் அக்கிரமம் ஆகும். ஒருமுறை கூட இந்தியக் கடற்படை தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எள் அளவு நடவடிக்கையும் மேற்கொண்டது கிடையாது; இலங்கைக் கடற்படையினரை எச்சரித்ததும் கிடையாது.

தற்போது வேலியே பயிரை மேய்ந்தது போல, இந்தியக் கடலோரக் காவல்படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற அளவுக்குத் துணிந்ததற்கு, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இந்திய அரசினுடைய அலட்சியமும், இந்திய நாட்டுக் குடிமக்களான மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வு இந்திய அரசுக்கு துளியும் இல்லாததுதான் முக்கியக் காரணமாகும்.

இதுவரை இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதை இந்தியக் கடற்படை தடுக்க முயன்றது இல்லை, வேடிக்கை பார்த்தது. தற்போது இந்தியக் கடலோர காவல்படையினரே தமிழக மீனவர்களைத் தாக்கியது மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று மத்திய அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசை, குறிப்பாக பாதுகாப்பு அமைச்சகத்தை வலியுறுத்துகின்றேன்" என்று வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Mdmk Chief Vaiko
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment