Advertisment

ஓ.பி.எஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கும் தேதி: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு

"2012-ல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம், 11 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று ஓ.பி.எஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது.

author-image
WebDesk
New Update
Madras HC Justice Anand Venkatesh OPS suo motu revision petitions hearing date Tamil News

ஓ.பி.எஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை வாதங்களுக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருகிற 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

O Panneerselvam | Justice Anand Venkatesh: 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது, ​​வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.7 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது தி.மு.க ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. 

Advertisment

2012-ல் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, இந்த சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை சிவகங்கை நீதிமன்றம் விடுவித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தார். 

இதற்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதனை, கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த மார்ச் 26-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில், அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக தமக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதாக ஓ.பி.எஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட  ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அவரது மனைவி தரப்பில் மூத்த வக்கீல் சீனிவாசன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், "சட்டப் பிரிவுகளின் கீழ் மேல் விசாரணைக்கு உத்தரவிட மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது.

வழக்கு தொடர்வதற்கு ஏற்கனவே வழங்கிய அனுமதியை திரும்பப் பெற முடியும். விடுவிக்கக் கோரிய மனு மீது முடிவெடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் ஆதாரங்களை ஆய்வு செய்யத் தேவையில்லை. விடுவித்து பிறப்பிக்கப்படும் உத்தரவில் காரணங்களைத் தெரிவிக்க அவசியமும் இல்லை. சபாநாயகர், அரசு தலைமை வழக்கறிஞர், குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே வழக்கு தொடர அளித்த அனுமதியை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது.

2012-ல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம், 11 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மரணமடைந்து விட்டனர். பல சாட்சிகளும் இறந்து விட்டனர். நீண்ட காலஇடைவெளிக்குப் பின்பு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சிவகங்கை நீதிமன்ற உத்தரவில் தலையிடுவதை இந்த நீதிமன்றம் தவிர்க்க வேண்டும்" என்று வாதிட்டார். 

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை வாதங்களுக்காக விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமிமற்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிரான சூமோட்டோ வழக்குகளுடன் ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கும் விசாரணைக்கு வரவுள்ளது. 

அமைச்சர் பொன்முடி மீதான சூமோட்டோ வழக்கும் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அதனை ஜூன் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

O Panneerselvam Justice Anand Venkatesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment