Advertisment

கன மழையில் இருந்து பாதுகாக்க 109 படகுகள், 176 நிவாரண முகாம்கள் : தமிழக அரசு அறிக்கை

கனமழையில் மக்களை பாதுகாக்க 109 பாதுகாப்பு படகுகள், 176 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai rain, water logging, tamilnadu government, heavy rain in tamilnadu, life saving boats, relief camps, cm edappadi palaniswami

கனமழையில் மக்களை பாதுகாக்க 109 பாதுகாப்பு படகுகள், 176 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Advertisment

கனமழையை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு : மொத்தம் 4399 பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 578 மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள், 892 அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள், 1206 மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் மற்றும் 1723 குறைவான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஆகும். 589 பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேடுதல், மீட்பு மற்றும் வெளியேற்றம், நிவாரணம் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து துறைகளைச் சார்ந்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம், கோட்டம் மற்றும் வட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன.

23,325 முதல் நிலை மீட்பாளர்களைக் கொண்ட 4,399 முதல் நிலை மீட்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இக்குழுவில் 6,740 பெண்கள் உள்ளடங்குவர். தொகுதி, வட்டம், உட்கோட்டம் அளவிலான நடமாடும் முதல் நிலை மீட்பாளர்கள் குழு நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு மாவட்ட அளவில் முறையாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளம், வறட்சி போன்ற ஆபத்தினை குறைக்கும் நோக்கத்துடன், அணைகள், நீர்நிலைகள் மற்றும் ஆறுகளை தூர்வார தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு, மாவட்ட நிர்வாகங்களின் மூலம், விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக தங்களது நிலங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் 1.6 டி.எம்.சி நீர்சேமிப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 33,612 நீர்நிலைகளில், 5.06 கோடி கன மீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது.

22,538 நீர் நிலைகள், 12,070 கி.மீ. நீளம் கொண்ட ஆற்றுப்பாதைகள் தூர்வாரப்பட்டும், நீர்நிலைகளில் கண்டறியப்பட்ட 7,030 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் உள்ளன. 9,627 பாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. 1,37,826 சிறு பாலங்களில்உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. சமூகவிரோதிகளால் பாதிப்புகள் ஏற்படுத்தப்படும் என கருதப்படும் அணைகள் கண்டறியப்பட்டு, அவைகளை பாதுகாத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் குறைந்தது இரண்டு மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்கள் இருப்பில் வைத்திட தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஜென்செட் போன் சாதனங்களை, முதல் தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும்தேவையான மருந்துகள் விநியோகிப்பதற்கு ஏதுவாக போதுமான அளவு கையிருப்புவைத்திருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கால்நடைகள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் தேவையான மருந்துகள் தயார்நிலையில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையத்தின் முன்கணிப்புப்படி, கட்டுமரம், படகுகள் ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார்நிலையில் வைத்துக்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்காக, கடலோர பேரிடர் அபாயகுறைப்பு திட்டத்தின் கீழ் உலக வங்கியின் மூலமாக ரூ.345 கோடி செலவில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 115 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதைத்தவிர தற்காலிக நிவாரண முகாம்களும் கண்டறியப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியின் மூலம் கூவம் ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 825 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், அடையாற்றின் கரையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 4134 வீடுகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி, கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் கொடுங்கையூர் பகுதியிலுள்ள “பி” கால்வாய் ஆகியவைகள் தூர்வாரப்பட்டு, 4388.33 மெட்ரிக் டன் கழிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதைப்போன்று, கடந்த ஆறு மாதங்களாக 20 சிறு மற்றும் குறு கால்வாய்களில் 5753.95 மெட்ரிக் டன்கள் வண்டல் மண் மற்றும் கழிவுகள் எடுக்கப்பட்டு, மழைநீர் எளிதாக செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட 6 சுரங்கப்பாதைகள், மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளாகக் கண்டறியப்பட்டு, 60 உயர் அழுத்த டீசல் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றிட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள பிற மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவைகளில், வாகனங்கள் இடையூறின்றி செல்ல ஏதுவாக, 5 குதிரைத்திறன் மற்றும் 7.5 குதிரைத்திறன் கொண்ட 458 பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர, விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும், வாகன நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு, வாகனங்களுடன் கூடிய மரவெட்டும் கருவிகள் இரண்டு, பெட்ரோல்/டீசல் மூலம் இயங்கும் சிறு மரவெட்டும் கருவிகள் 160 மற்றும் 11 மின்சாரத்தின் மூலம் இயங்கும் மரவெட்டும் கருவிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தின்போது, தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாத்திட 109 பாதுகாப்பு படகுகள் தயார் நிலையிலும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏதுவாக 176 நிவாரண முகாம்கள் தயார் நிலையிலும் உள்ளன. இதைப்போன்று, ஒரே நேரத்தில் உணவு தயார்செய்திடும் வகையில் பொது உணவு தயாரிக்கும் இடங்கள், மருத்துவ உதவி செய்திடும் வகையில் நடமாடும் மருத்துவகுழுக்கள், தரமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு 50 அம்மா குடிநீர் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுப்பணித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுப்பணிகள் அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் கழிமுகப் பகுதியில் தொடர் தூர்வாரும் பணிகள் மூலம், திறந்த நிலையில் இருக்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வேலப்பாக்கம் பிரதான கால்வாய் மற்றும் அதன் கிளைக் கால்வாய்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. விசூர் மற்றும் பெரியகட்டுப்பாளையம் ஓடைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன. மணவாய்க்கால் மற்றும் பழைய கூவம் ஆறு ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. காவேரி டெல்டா பகுதிகளில் பருவகால மாற்றங்களை எதிர்கொள்ளும் திட்டம், கடைமடை நீரை ஒழுங்குபடுத்தும் கருவிகள், மறு கட்டுமான பணிகள் / நீர் ஒழுங்குபடுத்தும் கருவிகளின் பராமரிப்பு பணிகள் மற்றும் ஆற்றின் மேல் நீரோட்டத்தினை வரையறுக்கப்பட்டுள்ள அளவிற்கு மேம்படுத்த குறிப்பிட்ட தூரம் வரை அகலப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment