Advertisment

”சசிகலா விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு”: சித்தராமையா

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
”சசிகலா விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு”: சித்தராமையா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அதற்கு சிறைத்துறை உயரதிகாரிக்கு சசிகலா தரப்பில் ரூபாய் 2 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும் எழுந்த புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனவும் சித்தராமையா தெரிவித்தார்.

Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்தே, சிறைத்துறை விதிகளை மீறி அவருக்கு அதிகாரிகள் சிறப்பு வசதிகள் செய்து தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, காவல் துறை ஐ.ஜி. ஆர்.கே. தத்தாவிற்கு புதன் கிழமை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தருவதற்காக சிறைத்துறை உயரதிகாரி ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்றதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதில், சிறைத்துறை டி.ஜி. சத்யநாராயணா ராவ், சசிகலாவிற்கு சிறப்பு அந்தஸ்துகள் செய்துகொடுப்பதற்காக ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்றதாக தன் உயரதிகாரி மீதே குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சசிகலா விரும்பும் உணவுகளை தயார் செய்வதற்காக, அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் சிறைத்துறை விதிமுறைகளை வளைத்து சமையலறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், உணவுப்பொருட்களை சமைத்துத் தருவதற்காக சிறையில் உள்ள பெண் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து பதிலளித்த குற்றம்சாட்டப்பட்ட சத்யநாராயணா, “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்யட்டும். இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பொறுப்பு அவற்றை எழுப்பிய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவிற்கே உள்ளது. சிறையில் சசிகலாவுக்கென தனி சமையலறை வசதி செய்து தரப்படவில்லை.”, என கூறினார்.

மேலும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சத்யநாராயணா, ரூபாவிற்கு தான் இரண்டு முறை மெமோ அனுப்பியதாகவும், அதற்கு பழிவாங்கும் முயற்சியாகவே தன் மீது இந்த குற்றச்சாட்டுகளை அவர் எழுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி. ரூபா, “சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அதுகுறித்து கர்நாடக அரசு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். எனக்கு தனிப்பட்ட முறையில் யாருடனும் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இந்த குற்றச்சாட்டை எழுப்பியிருப்பதால் எனக்கு எந்த லாபமும் இல்லை”, என கூறினார்.

சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டதாக எழுந்த புகார் குறித்து கர்நாடக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என எதிர்பார்த்த நிலையில், இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், இதுகுறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை செயலரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பர் எனவும் சித்தராமையா தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் சித்தராமையா கூறினார்.

இதனிடையே ட்விட்டரில் பதிவிட்ட சித்தராமையா, "விசாரணை முடியும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும். சிறையில் நடைபெற்றா அனைத்து முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது”, என பதிவிட்டார்.

publive-image

சசிகலா விவகாரம் தவிர பரப்பன அக்ரஹாரா சிறையில் பல்வேறு முறைகேடுகள் குறித்தும் டி.ஐ.ஜி. ரூபா தன் அறிக்கையில் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.

Bengaluru Parappana Agraharajail
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment