Advertisment

உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நேர்முகத் தேர்வு விண்ணப்பம் அனுப்பிய தனியார் நிறுவனம்!

மேற்பார்வையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நேர்முகத் தேர்வு விண்ணப்பம் அனுப்பிய தனியார் நிறுவனம்!

மேற்பார்வையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளது. இதனை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்து வருகிறது.

Advertisment

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வில்லிவாக்கத்தில் வசிக்கிறார். இவரது வீட்டு முகவரிக்கு அவர் பெயர் முகவரியுடன் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு வரச்சொல்லி கடிதம் வந்துள்ளது.

திருப்பூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனம், திருச்சியில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனம், திருப்பூரில் செயல்படும் பிரபல கார் மற்றும் பஸ் நிறுவனம், கோவையில் உள்ள நிறுவனம் பெயரில் இந்த நேர்முகத் தேர்வு கடிதங்கள் வந்துள்ளன.

செப்.30, அக்.1, 3 மற்றும் 4-ம் தேதி என பல்வேறு தேதிகளில் வெவ்வேறு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறி தனித்தனியாக அழைப்பு கடிதம் வந்துள்ளது. நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள முன் பதிவுக்கட்டணமாக ரூ.250 முதல் 750 வரை வெவ்வேறு கட்டணம் கம்பெனிக்கு ஏற்றார்போல் நிர்ணயித்து கடிதம் வந்துள்ளது. இது தவிர மத்திய மாநில அரசு இலச்சினைகளுடன் பாரதிராஜா என்பவருக்கு பணி நியமன உத்தரவும் இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

இந்த கடிதத்தை படித்துப் பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விசாரித்த போது, பல தனியார் வேலைவாய்ப்பு  நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பதிவுக்கட்டணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுவருவது நீதிபதிக்கு தெரியவந்தது.

செல்போன் டேட்டாக்களை எடுத்து நீதிபதி என்று அறியாமலே இது போன்ற வேலைக்கான அழைப்பு அனுப்பப்பட்டது தொடர்பாக தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது.

நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் தலைமையில் சிறப்பு அமர்வாக விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் நேற்று மாலை இந்த வழக்கை நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோருடன் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு கடிதம் அனுப்பிய திருப்பூர், திருச்சி, கோவையில் உள்ள 5 ஆள் சேர்ப்பு நிறுவனங்களும் எதிர் மனுதாரராக இணைக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம் ஆஜராகி குறிப்பிட்ட 5 நிறுவனங்கள் குறித்து விசாரித்ததாகவும், அவர் நம்பகமான (genuine) நிறுவனங்கள்தான் என்றும், ஆனால் நீதிபதியின் பெயருக்கு அழைப்பு கடிதம் அனுப்பியது குறித்து விசாரிக்க சைபர் கிரைம் பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,

வேலை தேடி வருபவர்களையும் இளைஞர்களையும் ஏமாற்றும் நோக்குடன் இதுபோன்ற போலி தனியார் நிறுவனங்கள் செயல்படுவது, மிகப் பெரிய ஊழலாக அல்லது மோசடியாக உள்ளது. வேலைவாய்ப்புக்கான போதிய வழியை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுக்காததே இதுபோன்ற நிறுவனங்கள் செயல்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

இந்த விவகாரம் குறித்து மாநில அரசுகள் விரிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த 5 நிறுவனங்கள் மூலம் எத்தனை பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு, எவ்வளவு வசூலிக்கப்பட்டுள்ளது? எத்தனைபேர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்? மத்திய மாநில அரசுகளின் இலச்சினைகள் எப்படி திருட்டுத்தனமாக பயன்படுத்தப்படுகிறது? நாடு தழுவிய அளவிலான மிகப் பெரிய சைபர் கிரைம் மோசடிக்கான ஒருபகுதியாக இது போன்ற அழைப்பு கடிதங்கள் அனுப்பும் நிறுவனங்கள் செயல்படுகிறதா? என்பவை குறித்த விளக்கமும் அறிக்கையில் இடம்பெறவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வழக்கு முடியும் வரை ஐந்து நிறுவனங்களும் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த வழக்கு அண்ணா நகர் துணை ஆணையர் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சைபர் மற்றும் மோசடி புகார் என்பதால் இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment