Advertisment

தமிழகத்திலுள்ள வங்கிப் பணி வாய்ப்புகள் பிற மாநிலத்தவர்க்கு செல்லும் அபாயம்: ராமதாஸ் கண்டணம்

தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பணியில் சேர வேண்டுமானால், தமிழ்ப் புலமைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்க வேண்டும்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
ramadoss, PMK, NEET Exam, Bank exam

தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பணியில் சேர வேண்டுமானால், தமிழ்ப் புலமைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுத்துறை வங்கிப் பணிகளில் சேர உள்ளூர் மொழிப் புலமைக்கான தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமல்ல என்று இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள வங்கிப் பணி வாய்ப்புகளை தமிழர்களிடமிருந்து பறித்து பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விதிமுறை மாற்றம் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். 

Advertisment

இந்தியாவிலுள்ள 19 பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள எழுத்தர்கள் பணியிடங்களை நிரப்ப, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இரு கட்ட போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கெடு வரும் 3-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தேர்வு விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த விதிகளின்படி முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளில் வெற்றி பெறும் தேர்வாளர்கள் மூன்றாவதாக உள்ளூர் அலுவல் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். ஆனால், இம்முறை உள்ளூர் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்றும் பின்னாளில் பொறுமையாக அத்தேர்வை எழுதினால் போதுமானது என்றும் பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இது இயற்கை நீதிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது. 

வங்கிப் பணியில் சேர உள்ளூர்மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்ற விதி நடைமுறையில் இருந்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் மாணவர்கள் மட்டும்தான் வங்கிப் பணிகளில் சேர முடியும் என்ற நிலை இருந்து வந்தது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் அதிக வங்கிகள் உள்ளன என்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் வங்கிப் பணிகளில் சேர்ந்து வந்தனர். ஆனால், உள்ளூர் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பால் தமிழகத்திலுள்ள வங்கிப் பணிகள் மற்ற மாநிலத்தினருக்கு திறந்துவிடப்பட்டுள்ளன. 

வங்கிப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள எழுத்தர் பணிக்கான போட்டித் தேர்வில் தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 1227 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அண்டை மாநிலங்களான கேரளத்தில் 217 பணியிடங்கள், தெலங்கானாவில் 344 பணியிடங்கள், ஆந்திரத்தில் 485 பணியிடங்கள், கர்நாடகத்தில் 554 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. குறைவான பணியிடங்கள் உள்ள இம்மாநிலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்கள் அதிக பணியிடங்கள் உள்ள தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் வங்கிப் பணி வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. 

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. தேசிய அளவிலான நீட் தேர்வை கொண்டு வந்து இந்த இடங்களை பிற மாநில மாணவர்களுக்கு தாரை வார்த்தது போன்று, வங்கிப் பணித் தேர்வு விதிகளில் மாற்றம் கொண்டு வந்து வங்கிப் பணி வாய்ப்புகளை மற்ற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க மத்திய அரசு துடிக்கிறது. தமிழக மாணவர்களுக்கு மற்றொரு வகையிலும் துரோகம் இழைக்கப்படுகிறது. 

தமிழகத்தில் நிரப்பப்படவுள்ள 1,227 பணியிடங்களில் இந்தியன் வங்கியில்தான் அதிகபட்சமாக 685 பணியிடங்கள் உள்ளன. இந்தியன் வங்கி தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டது என்பதால் அதற்கான போட்டித்தேர்வுகள் தமிழில்தான் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இப்போது அனைத்து தேர்வுகளும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதால், தமிழர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு எதிரான இச்சதியை அனுமதிக்கக்கூடாது. 

தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்கள் பணியமர்த்தப்படுவதால், அவர்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் சேவை செய்ய முடியாது. மேலும், இவர்கள் மொழி தெரியாததை காரணம் காட்டி நகர்ப்புற கிளைகளில் தங்கி விடுவார்கள் என்பதால், ஊரக கிளைகளில் போதிய ஊழியர்கள் இருக்க மாட்டார்கள்; அங்குள்ள மக்களுக்கும் சேவை கிடைக்காது. இந்த பாதிப்பும் தடுப்பட வேண்டும். 

இதற்காக தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பணியில் சேர வேண்டுமானால், தமிழ்ப் புலமைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள வங்கிப் பணிகளில் 50 விழுக்காட்டை மாநில ஒதுக்கீடாக அறிவிக்க வேண்டும். இந்த இடங்களை முழுக்க முழுக்க தமிழர்களைக் கொண்டே நிரப்பும் வகையில் வங்கிப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment