Advertisment

குட்கா ஊழலை விசாரிக்கும் சிபிஐ : விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் பதவிக்கு ஆபத்தா?

குட்கா விற்பனைக்காக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் சிக்கியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu gutkha scam, CBI Raid at Tamil nadu DGP office, குட்கா ஊழல், தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் சிபிஐ சோதனை, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஐபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil nadu gutkha scam, CBI Raid at Tamil nadu DGP office, குட்கா ஊழல், தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் சிபிஐ சோதனை, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஐபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கர்

குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதால் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரின் பதவிக்கு ஆபத்தா?

Advertisment

குட்கா விற்பனையை கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் தடை செய்தார். ஆனால் தடையை மீறி அதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் துணையுடன் குட்கா விற்பனை நடைபெற்று வந்தது. குட்கா விற்பனையாளர்களின் குடோன்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு லஞ்சப் பணம் பறிமாறப்பட்டது ஆதாரபூர்வமாக தெரியவந்தது.

குட்கா விவகாரத்தை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று (ஏப்ரல் 26) தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு, குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

குட்கா விற்பனையாளர்களின் குடோன்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சென்னை மாநகர ஆணையரும் தற்போதைய டிஜிபி.யுமான டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரை குற்றம்சாட்டும் விதமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை வருமான வரித்துறை ஏற்கனவே லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் சமர்ப்பித்திருக்கிறது. அந்த ஆவணங்கள் இனி சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்.

மத்திய கலால் வரித் துறை சார்பில் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 3 ஆண்டுகளில் டெல்லியில் உற்பத்தி செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக ஹவாலா முறையில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு இது வரை 55 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரிய வருகிறது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான ஆவணங்கள் சிபிஐ.யிடம் தாக்கல் செய்யப்படும்.

வருமான வரித்துறை புலனாய்வு பிரிவின் முதன்மை இயக்குநர் சுசிபாபு வர்கீஸ் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் பங்குதாரராக உள்ள செங்குன்றம் குட்கா குடோனில் கடந்த 08.07.16 அன்று நடத்தப்பட்ட சோதனையில் தமிழகத்தில் குட்கா விற்பனைக்காக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் சிக்கியது.

எனவே இந்த குட்கா ஊழலில் தொடர்புள்ள நபர்களின் பட்டியல் தயாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 11.08.16 அன்று அப்போதைய தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு தனித்தனியாக ரகசிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.  கடந்த 01.04.16 முதல் 15.06.16 ஆகிய காலகட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜய பாஸ்கருக்கு ரூ. 56 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக மாதவராவ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 17.11.17 அன்று போயஸ் தோட்டத்தில் வி.கே.சசிகலா அறையில் வருமான வரித்துறை சார்பி்ல் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய டிஜிபி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பிய ரகசிய கடிதம், வி.கே.சசிகலா அறையில் இருந்து கைப்பற்றப்பட்டது.

குட்காவை தடையின்றி தமிழகத்தில் விற்பனை செய்ய பலருக்கும் லஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததை ‘ஹெச்.எம்’ என மாதவராவ் தனது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுபோல குட்கா சோதனை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினரிடமும் ஒப்படைத்துள்ளோம்’ என அந்த பதில் மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆவணங்கள்தான் சிபிஐ விசாரணைக்கு முக்கியமான துருப்புச் சீட்டுகள்! குறிப்பாக வருமான வரித்துறையிடம் குட்கா விற்பனையாளர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அவர்களிடம் மறுபடியும் சிபிஐ விசாரிக்கும். தேவைப்பட்டால் அவர்களை கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

குட்கா விற்பனையாளர்களின் வாக்குமூலங்கள் மற்றும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யக்கூடும். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தாலே தார்மீக ரீதியாக அவர்கள் பதவி விலகவேண்டும் என்கிற குரல்கள் எழும்.

அடுத்தக்கட்டமாக உரிய ஆதாரங்களுடன் அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், பதவி விலகவேண்டிய சட்ட நெருக்கடியும் உருவாகும். ஆனால் இதெல்லாம் எவ்வளவு வேகத்தில் இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படும்? சிபிஐ எவ்வளவு வேகமாக குற்றப்பத்திரிகை தயாரிக்கும்? உள்ளிட்ட அம்சங்களில்தான் அடங்கியிருக்கிறது.

 

Chennai High Court Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment