முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் சகோதரர் விபத்தில் மரணம்!

முன்னாள் அமைச்சர் கோகுல் இந்திராவின் சகோதரர் கார் விபத்தில் பலியாகியுள்ளார்

முன்னாள் அமைச்சர் கோகுல் இந்திராவின் அண்ணன் தேவ பாண்டியன், சிவகங்கை அருகே ஒக்கூரில் இன்று அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

அதிமுகவில் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சராக இருந்தவர் கோகுல இந்திரா. ஆனால், சில மாதங்களிலேயே வணிக வரி தொடர்பாக அடுக்கடுக்காகப் புகார்கள் கிளம்பியது. இதனால், அமைச்சரவையில் இருந்து தூக்காமல், கோகுல இந்திராவின் துறையை மட்டும் மாற்றினார் ஜெயலலிதா. சுற்றுலாத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகும் கோகுல இந்திரா மீதான புகார் பட்டியல் நீண்டது. இதனால் 2013ம் ஆண்டு பிப்ரவரியில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது அதிருப்தியில் இருந்த கோகுல இந்திரா, நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் அதிர்ஷ்டம் அடித்தது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட அண்ணா நகர் சட்டசபைத் தொகுதியில் மட்டும் அதிமுகவுக்கு 22 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தது. இதற்கு கோகுல இந்திராவின் தேர்தல் பிரச்சாரமே முக்கிய காரணம் எனக்கூறி பாராட்டிய ஜெயலலிதா மீண்டும் அவரை கைத்தறித்துறை அமைச்சர் ஆக்கினார்.

இதைத் தொடர்ந்து, மதுரை ஆட்சியராக இருந்த சகாயத்திற்கு அவர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. பின், சகாயம் கோ-ஆப்டெக்ஸ் இயக்குனராக மாற்றப்பட்டதெல்லாம் தனிக்கதை.

கோகுல இந்திராவுக்கு அவரது அண்ணன் தேவபாண்டியன் தான் எல்லாம் என்று கூறுகிறார்கள். அவர் சொன்னதை தான் கோகுல இந்திரா செய்வார் என்று கூறப்படுகிறது.
அவருடைய காய் நகர்த்தலின் பேரில் தான் கோகுல இந்திரா அரசியல் பிரவேசம் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையியில் இருந்ததாக பேசப்படுகிறது. ராமநாதபுரம் அரண்மனை வாயில் அருகே ஆவின் பூத் வைத்திருக்கும் தேவபாண்டியன் மீது, காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் அவரின் தலையீடு அதிகமாக இருந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் கட்சி தலைமை வரை சென்றது.

இந்த நிலையில் தான் தேவபாண்டியன் இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் பலியாகியிருக்கிறார். தகவலறிந்த கோகுல இந்திரா, விமானம் மூலம் உடனடியாக மதுரை விரைந்துள்ளார். விபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

×Close
×Close