Advertisment

நாள் முழுவதும் நின்றுகொண்டே உண்ணாவிரதம் : ஆகஸ்ட் 19-ல் பச்சைத் தமிழகம் புதுவகைப் போராட்டம்

சென்னையில் ஆகஸ்ட் 19-ம் தேதி பச்சைத் தமிழகம் கட்சி சார்பில் உண்ணா, உறங்கா, உட்காராப் போராட்டம் நடைபெறும் என சுப.உதயகுமாரன் கூறியிருக்கிறார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாள் முழுவதும் நின்றுகொண்டே உண்ணாவிரதம் : ஆகஸ்ட் 19-ல் பச்சைத் தமிழகம் புதுவகைப் போராட்டம்

சென்னையில் ஆகஸ்ட் 19-ம் தேதி பச்சைத் தமிழகம் கட்சி சார்பில் உண்ணா, உறங்கா, உட்காராப் போராட்டம் நடைபெறும் என சுப.உதயகுமாரன் கூறியிருக்கிறார்.

Advertisment

பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளியுமான சுப.உதயகுமாரன் கூறியிருப்பதாவது...

“கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகளைக் கட்டாதே என்று போராடினால், ஆறு அணு உலைகளைக் கட்டுகின்றன மத்திய, மாநில அரசுகள். கல்பாக்கம் அணுஉலைப் பூங்கா விரிவாக்கம், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம், கொங்கு மண்டலத்தில் கெய்ல் குழாய் பதிப்புத் திட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தடுத்து காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி எரிவாயுவும் எண்ணெயும் நிலக்கரியும் எடுக்கும் திட்டம், நெடுவாசல்-வடகாடு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டம், கதிராமங்கலம் தொடங்கி 13 மாவட்டங்களில் கண்டகண்ட ஊர்களில் எல்லாம் பெட்ரோ-கெமிக்கல் மண்டலங்கள் அமைக்கும் திட்டம் என தமிழகத்தை அழித்தொழிக்கும் ஏராளமானத் திட்டங்கள் தமிழ் மக்களின் ஒப்புதலின்றி ஒத்துழைப்பின்றி கொண்டுவரப்படுகின்றன.

இந்தக் கொடுமைகளை தட்டிக் கேட்பவர்களை பொய் வழக்குப் போட்டு கைது செய்து குண்டர் சட்டம் போட்டு வாட்டி வதைக்கிறார்கள். ஈழத் தமிழருக்கு நினைவேந்தல் நடத்திய தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் மீது குண்டர் சட்டம் போடுகிறார்கள். நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக தொடர்வண்டியில் துண்டுப்பிரசுரம் கொடுத்த தோழர் வளர்மதி மீதும் குண்டர் சட்டம், கதிராமங்கலம் பிரச்சினை தொடர்பாக கலந்துபேச முகநூல் வழியாக தோழர்களை அழைத்த தம்பி குபேரன் மீது வழக்கு, கைது நடவடிக்கை. காவிரி டெல்டா மக்களுக்காக குரல்கொடுத்து அவர்களை முன்னின்று வழி நடத்தும் பேராசிரியர் ஜெயராமன் மீதும் பொய் வழக்குகள், கைது நடவடிக்கைகள்.

அணுத்தீமை முதல் நீட் தேர்வு வரை எண்ணிறந்த பிரச்சினைகளுக்காக தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். நம் வளங்கள் சுரண்டப்படுகின்றன. வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுகின்றன. வருங்காலம் அழிக்கப்படுகிறது. நமக்காக எழுந்து நிற்க வேண்டிய, வாதாட வேண்டிய தமிழக அரசு தில்லியைக் கண்டு அஞ்சி நடுங்கி, வாக்களித்த மக்களையே காட்டிக் கொடுக்கிறது. மத்திய அரசோ நம்மை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி, மாபெரும் வஞ்சகம் செய்கிறது. கொல்லைப்புறம் வழியாக வந்து நம்மை ஆளத் துடிக்கிறது.

பல்வேறு சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சினைகளால், மத்திய-மாநில அரசுகளால் கொடுமைப்படுத்தப்படும் எட்டுக் கோடி தமிழக மக்களுக்காக, உண்ணா, உறங்கா, உட்காராப் போராட்டம் ஒன்றை ஆகஸ்ட் 19 அன்று காலை முதல் மாலை வரை சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடத்துகிறோம். பச்சைத் தமிழகம் கட்சித் தோழர்களும், பிற தோழமை இயக்கங்களின் தோழர்களும் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்காக நீதி கேட்கிறார்கள்.

தமிழர்களே, உங்கள் வீடுகளில், வீதிகளில், வேலையிடங்களில், வெளித் தளங்களில் நம் நிலைமை பற்றிப் பேசுங்கள். உள்ளூர் ஊழல் பெருச்சாளிகளோ, தில்லி எஜமானர்களோ, ஒன்றுமறியா சினிமாக்கார்களோ நம்மைக் காப்பாற்ற மாட்டார்கள். நமது தலைவர்களை நாமே உருவாக்குவோம். போராட்டத்துக்கு வாருங்கள், ஆதரவு தாருங்கள்". இவ்வாறு கூறினார்.

இந்த அறிவிப்பின்படி பச்சைத் தமிழகம் கட்சியினர் நின்றுகொண்டே உண்ணாவிரதம் மேற்கொள்ளும் புதுவகைப் போராட்டத்தை அறிமுகம் செய்கிறார்கள். பச்சைத் தமிழகம் கட்சியினர் மட்டுமின்றி, இதில் ஒருமித்த கருத்துள்ள அரசியல் கட்சியினர், தமிழர் அமைப்புகள் பலவும் பங்கேற்க இருக்கின்றன.

S P Udayakumaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment