Advertisment

மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆய்வு : நிவாரண உதவிகளை வழங்கினர்

மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் இபிஎஸ்-ஓபிஎஸ் அதிரடியாக மழைச் சேதங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். நிவாரண உதவிகளையும் அங்குள்ள மக்களுக்கு வழங்கினர்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai rain, tamilnadu government, heavy rain at tamilnadu, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, mk stalin, kolathur constituency

மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் இபிஎஸ்-ஓபிஎஸ் அதிரடியாக மழைச் சேதங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். நிவாரண உதவிகளையும் அங்குள்ள மக்களுக்கு வழங்கினர்.

Advertisment

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 3-ம் தேதி நேரில் சென்று நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, நேற்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள கொடுங்கையூர் லிங்க் கால்வாயில், ஐரோப்பாவில் உள்ள லிச்சென்ஸ்டீன் நாட்டிலிருந்து வாங்கப்பட்ட ரொபாட்டிக் எக்ஸ்கவேட்டர் இயந்திரம் மூலம் அடைப்புகளை சீர்செய்யும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் குறுக்கே உள்ள லிங்க் கால்வாய் பாலத்தின் கீழ் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை பார்வையிட்டு, அப்பாலத்தினை உயர்த்தி கட்டி, எதிர்வரும் காலங்களில் அடைப்பு இல்லாமல் எளிதாக நீர் செல்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதிக்கு சென்று இபிஎஸ்-ஸும், ஓபிஎஸ்-ஸும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டனர். கொளத்தூர் தொகுதிக்குள் பெரும்பாலும் அமைச்சர்களே செல்வதில்லை. முதல் முறையாக முதல்வரும் துணை முதல்வரும் அங்கு விசிட் அடித்ததை மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர். மு.க.ஸ்டாலின் வெளிநாடு டூரில் இருக்கும் வேளையில் அவரது தொகுதிக்குள் முதல்வரும் துணை முதல்வரும் சென்று நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை இரட்டை ஏரி சந்திப்பு அருகில் வீனஸ் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அடுத்த பருவமழைக்கு முன் இந்த பகுதியில் உள்ள நீர் 200 அடி சாலையை கடந்து செல்வதற்கு தேவையான வடிகால்வாய்களை உயர்த்தி கட்டுமாறு ஆணையிட்டார்.

பின்பு மண்டலம்-6, வார்டு 65 பகுதியில் விவேகானந்தா பிரதான சாலை, திருமலை நகரில் நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டு, முதியோர் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 200 பயனாளிகளுக்கு, ரொட்டி, பிஸ்கெட் மற்றும் பால் ஆகியவற்றை வழங்கினார்.

தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சிட்லபாக்கம் பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு, முதல்வர் ஆய்வு செய்தார். சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பாபு தெரு, ஜவஹர் தெரு, வைத்தியலிங்கம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீரினை வெளியேற்றும் பணியினையும் பார்வையிட்டார். சேலையூர் மற்றும் சிட்லப்பாக்கம் ஆகிய ஏரிகளின் உபநீர் கால்வாய்களின் மூலம் இப்பகுதிகளுக்குள் தண்ணீர் புகுவதை அறிந்து, அதற்குரிய நிரந்தர தீர்வாக, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையின் வழியாக ஒரு புதிய மழை நீர் வடிகால் அமைத்து, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த அரசு பரிசீலிக்கும் என முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.

பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட சுவாமிமலைப் பகுதிகளிலுள்ள தெருக்களை முதல்வர் எடப்பாடி பார்வையிட்டார். ஏற்கனவே அப்பகுதிகளில் 3 அடிக்கு மேல் தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு, தற்போது 1 அடிக்கும் குறைவாக குறைக்கப்பட்டிருந்ததை முதல்வர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

கீழ்க்கட்டளையில், காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் நகராட்சி, அனகாபுத்தூர் கிராமத்தில் மின்னல் தாக்கி பலியான லோகேஷ் மற்றும் கிஷோர்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு, முதல்வர் எடப்பாடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, தலா ரூபாய் 4 லட்சம் வீதம், ரூபாய் 8 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கி, ஆறுதல் கூறினார்.

முதல்வருடன் , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், சி.விஜய பாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பா.பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விஸ்வநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் சென்றனர்.

 

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment