Advertisment

காவிரி விவகாரத்தில் பிரதமரை டெல்லிக்கே சென்று சந்திக்க முடிவு! - திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பது என முடிவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவிரி விவகாரத்தில் பிரதமரை டெல்லிக்கே சென்று சந்திக்க முடிவு! - திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்குக் கூடுதல் அழுத்தம் அளிக்கும் வகையில் மேற்கொண்டு போராட்டங்கள் நடத்தத் திமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மாலை 5 மணிக்குச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

Advertisment

இந்தக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவை,

தீர்மானம் : 1

அதிமுக ஆட்சி மக்களைக் கைவிட்டுவிட்டதால், ஆளுநரிடம் எதிர்பார்ப்பு.

இந்திய உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே இழுத்தடித்துவிட்டு, தற்போது மேலும் மூன்று மாத காலம் அவகாசம் கேட்டு, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும்,அதற்குத் தேவையான அழுத்தம் கொடுக்க பயந்து,நெடிய தூக்கத்தில் மூழ்கிப் போயிருக்கும் அதிமுக அரசைக் கண்டித்தும், “காவிரி உரிமை மீட்பு பயணம்” மேற்கொள்வது என 1.4.2018 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அம்முடிவின் அடிப்படையில்  காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளையும்,மக்களையும் நேரடியாகச் சந்தித்து உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் தி.மு.க. செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிடர் கழகம், காங்கிரஸ் கட்சி,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் நடத்திய “காவிரி உரிமை மீட்புப்  பயணம்” 07.4.2018 அன்று திருச்சி முக்கொம்புவில் இருந்து முதல் பயணம் துவங்கியது. 9.4.2018 அன்று அரியலூரிலிருந்து மற்றொரு பயணம் தொடங்கி, நிறைவாக இரு கட்டப் பயணமும் கடலூர் வந்தடைந்தது.

இப்பயணத்தில் விவசாயிகள்,தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள்,தாய்மார்கள், இளைஞர்கள், மாணவர்கள், சிறு குறு வணிகர்கள் உள்ளிட்ட கட்சி சார்பற்ற அனைத்து தரப்பு மக்களும், அனைத்துக் கட்சித் தொண்டர்களும் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் பங்கேற்று, இப்பயணத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

இவ்வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இரண்டு கட்ட காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் இறுதியில் கடலூரில் மாக்கடல் போல் சங்கமித்த இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழ்நாட்டின்  உரிமைகளுக்காகப் போர்க்குரல் எழுப்பி, மே-3ஆம் தேதி வரை காத்திருக்காமல்,  உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும்,  மூன்று மாத கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவினை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் நிலவும் கொந்தளிப்பான அசாதாரண சூழ்நிலையை மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மத்திய அரசுக்கு தெளிவு படுத்திட வேண்டும் என்ற விரிவான கோரிக்கை மனுவினை அனைத்துக்  கட்சித் தலைவர்களும் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம்13.4.2018 அன்று நேரில் அளித்திருப்பதை இந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் சுட்டிக்காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு ஆளுநர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 2

மத்திய அரசுக்கு அழுத்தம் தர மாவட்டத் தலை நகரங்களில்

“மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்”.

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு  மத்திய அரசால் 19.2.2013 அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு “தீர்ப்பாணை” (டிகிரி) அந்தஸ்து கிடைத்து விடுகிறது என்று மாநிலங்களுக்கு இடையிலான 1956ஆம் ஆண்டு நதி நீர் தாவா சட்டப் பிரிவு 6 (2) மிகத் தெளிவாக கூறியிருக்கிறது. (“The decision of the Tribunal, after its publication in the Official Gazette by the Central Government shall have the same force as an order or decree of the Supreme Court”).

நடுவர்மன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாக, தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், 14.75 டி.எம்.சி. தண்ணீர் அளவை குறைத்ததுடன், அத்தீர்ப்பில் இடம் பெற்றுள்ள காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எதுவும் சொல்லாமல், பொதுப்படையாக “ஸ்கீம்” (செயல்திட்டம்) உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே, ஒரே தீர்வு என்ற வகையில்,சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

“ஸ்கீம்” என்பதற்கு விளக்கம் கேட்டு மனுதாக்கல் செய்திருக்கும் மத்திய அரசின் இந்த விருப்பு - வெறுப்பு அடிப்படையிலான, உள்நோக்கம் கொண்ட ஏமாற்று வேலைகளை எல்லாம் கண்டும் காணாமல் ஊழலைத் தொடர்ந்து செய்வதற்கு ஆட்சி அதிகாரம் மட்டும் போதும் என்று வாய்மூடி மவுனசாட்சியாக இருக்கும் அதிமுக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் பொருட்டும் - காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்தே தீர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் நோக்கிலும், அடுத்த கட்டப் போராட்டத்தைத் துவங்குவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

அதனை முன்னெடுக்க அனைத்துக் கட்சிகளின் சார்பில் வருகின்ற 23-4-2018திங்கட்கிழமை அன்று மாலை 4.00மணி முதல் 5.00 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்தை” நடத்துவது என்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

காவிரி உரிமை மீட்பு பயணம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தங்களது முழு பங்களிப்பை வழங்கியதைப் போல், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள்,தொழிலாளர்கள், மகளிர், மாணவர்கள்,இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும்,அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும், இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டுமென  இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3

பிரதமரைச் சந்திக்கத் தனி முயற்சி

இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து 22.2.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் காவிரி இறுதித் தீர்ப்பு பற்றி விவாதிக்கப்பட்டு, இறுதியில் மூன்று தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது,தமிழ்நாட்டின் பங்கிலிருந்து குறைக்கப்பட்ட 14.75டிஎம்சி காவிரி நீரைப் பெறுவதற்கு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெற்று மேல்நடவடிக்கை எடுப்பது, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவினையும் உடனடியாக அமைப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக முதலமைச்சர் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய அமைப்புகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுப்பது என்று மூன்று முக்கிய தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டும்,அத்தீர்மானங்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு இதுவரை அனுமதி பெற முடியவில்லை. அதுமட்டுமின்றி “பிரதமரிடம் அப்படி ஒரு அப்பாயின்மென்ட் முதல்வர் கேட்கவே இல்லை” என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவரும் - தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான மாண்புமிகு பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளிப்படையாகப்  பேட்டியளித்தும், அதனை இதுவரை முதலமைச்சர்  மறுக்கவோ,விளக்கமளிக்கவோ முன்வரவில்லை.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தீவிர அழுத்தம் கொடுக்கவும் - தமிழகத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் படும் இன்னல்களை நேரில் எடுத்துரைக்கவும் - அனைத்துக் கட்சித்  தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பது என்றும், அதற்குரிய நேரம் கேட்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

அதன்படி பிரதமரை நேரில் சந்திப்பிற்கான உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென, தமிழக எதிர்க் கட்சித் தலைவரும் - திராவிட முன்னேற்றக் கழகச் செயல் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Mk Stalin Cauvery Issue
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment