டெங்கு காய்ச்சலுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை... ஐகோர்ட்டில் அரசு தகவல்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சல் சேர்க்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சல் சேர்க்கப்படாததால் தனியார் மருத்துவ மனைகளில் இலவச சிகிச்சை கிடையாது. எனவே,  முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை தொடர்பாகவும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும்,  மேலும் முதல்வரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ‘டெங்கு’  ஏன் சேர்க்கப்பட வில்லை ? என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, டெங்கு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்  அதில், எல்லா காய்ச்சலும் டெங்கு அல்ல. கொசுவால் டெங்கு பரப்பப்படுகிறது, அதனால் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள பெதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கொசுக்களை கட்டுப்படுத்த 13.95 கோடி ரூபாயில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்குவை கண்டறிய தமிழகம் முழுவதும் 125 சோதனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே அதிகம் ஆகும்.

23.50 கோடி ரூபாய் செலவில் தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு 837 இரத்த அணு பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர போதிய அளவில் மருந்துகளும், பரிசோதனை கருவிகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.  டெங்கு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். அதேபோல  களப்பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகின்றன.

இதுதவிர,  பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி  நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில்  2 ஆயிரம் கிலோ நிலவேம்பு பொடி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னையில்  இதுவரை 1.50 லட்ச மக்ககளுக்கு நிலவேம்பு  நீர் வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பத்திரிகை, ஊடகங்களில் விளம்பரம் , பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர “ஏடிஸ் கொசு” உற்பத்திக்கு வழி வகுக்கும் வகையிலான கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்காக தொகையை திருப்பி கொடுக்கும்படி மனுதாரர் கோரியுள்ளார்.

ஆனால் அவ்வாறு கொடுக்க முடியாது. ஒரு குடும்பத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு நோய் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக உள்ளதாக கூறி சிகிச்சைக்காக வரும் எவரையும் திரும்பி அனுப்பவில்லை என அதில் கூறியுள்ளார்.

×Close
×Close