”வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது”: அமைச்சர் செல்லூர் ராஜூவின் அடுத்த ’பலே’ ஐடியா

வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என, அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர்.

வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என, அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர்.

பல பிரச்சனைகளுக்கு தமிழக அமைச்சர்கள் பலர் தரும் ஐடியாக்கள் மக்களுக்கு சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது. மதுரை வைகையாற்றில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க, நான்கைந்து தெர்மாகோல்களை ஒட்டி ஆற்றில் மிதக்கவிட்டு கடும் கேலிக்குள்ளாகியவர் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. இவர் ஆரம்பித்து வைத்ததை பல அமைச்சர்கள் பின்தொடர்ந்து தங்கள் ஐடியாக்களை அள்ளி தெளிக்கின்றனர். சமீபத்தில், மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால்தான் நொய்யலாற்றில் நுரை வருவதற்கு காரணம் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் சிரிப்பு காட்டியது உங்களுக்கு நினைவில் இருக்கும். இதுமட்டுமா, தன்னை போல பெருத்த உடலை பெறாமல், இளைத்த உடலை பெறுவதற்காக சைவ உணவை உட்கொள்ள வேண்டும் என சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் அமைச்சர் செல்லூர் ராஜூதான். மதுரையில் சோலை அழகுபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அவர் வியாழக்கிழமை துவங்கி வைத்தார். அதன்பின், அப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதா என ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுர்த்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாசலில் கிருமி நாசினியான சாணத்தை தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என கூறினார். மேலும், பண்டைய காலத்தில் பின்பற்றப்பட்ட சாணம் தெளிக்கும் முறையை இன்றும் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சாணம் தெளிப்பதால் வீட்டில் கிருமிகளை அண்டவிடாமல் தடுக்கலாம் எனவும் செல்லூர் ராஜூ கூறினார். மேலும், பங்களா வீடுகளில் இதனை பின்பற்ற முடியாது எனக்கூறிய அவர், கிராமப்புற வீடுகளில் இம்முறையை பின்பற்றலாம் என தெரிவித்தார்.

டெங்கு கட்டுக்கடங்காமல் பெருகி வரும் நிலையில், சாணம் தெளித்தால் டெங்குவை தடுக்கலாம் எனக்கூறியது கேலியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

×Close
×Close