ஜெயலலிதா கைரேகை: மதுசூதனின் கடிதத்தின் பேரில் வேட்புமனு ஏற்கப்பட்டது: தேர்தல் ஆணைய அதிகாரி ஐகோர்ட்டில் விளக்கம்

ஜெயலலிதாவின் கைரேகையை ஏற்றுகொள்ள வேண்டும் என கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில்தான் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வேட்பு மனுவில் பதியப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகையை ஏற்றுகொள்ள வேண்டும் என கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில்தான் வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டது என இந்திய தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த தேர்தல் வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போசை அங்கீகரித்தும், இரட்டை இலை சின்னத்தையும் அங்கீகரித்து வேட்புமனு மற்றும் சின்னத்துக்கான படிவத்தில் ஜெயலலிதாவின் இடதுகை பெருவிரல் ரேகையை பதிவு செய்துள்ளார். அதை  சென்னை அரசு பொது மருத்துவமனை பேராசிரியர் மருத்துவர் பாலாஜி சான்றளித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த தேர்தல் வழக்கில் இந்த ஆவணம் மிக முக்கியமானது என்பதால், இதுதொடர்பான ஆவணங்களுடன் மாநில சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிடக் கோரி ஏ.கே.போஸை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன் சார்பில்  கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிநேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதனையடுத்து இந்த வழக்கில் ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்டது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் நேற்று நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று (12-ம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது . தேர்தல் ஆணைய செயலாளர் வில்பிரட் நேரில் ஆஜரானார். அப்போது வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது, மேலும் அந்த கடிதத்துடன் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை இணைக்கப்பட வில்லை என சாட்சியம் அளித்தார். மேலும் கடிதத்தை அனுப்ப மதுசூதனனுக்கு ஜெயலலிதா அதிகாரம் கொடுத்தாரா என்பது தெரியுமா ? என்ற நீதிபதியின் கேள்விக்கு இல்லை என கூறினார். 

இதனையடுத்து இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கைரேகையை அங்கீகரித்த மருத்துவர் பாலாஜியை வரும் 27 ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கை தள்ளி  வைத்தார்.

×Close
×Close