Advertisment

மகாபலியை போற்றும் ஓணம் பண்டிகை: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்

வருடத்துக்கு ஒருமுறை என் நாட்டு மக்களை காணும் வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும் என்று மகாபலி வேண்டுகோள் விடுத்தான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்தார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Onam, Onam 2017, kerala

ஆண்டுக்கு ஒருமுறை தன் மக்களை காண வரவேண்டும் என, வரம் வாங்கிய மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்று கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

தமிழகத்தில் தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் கொண்டாடப்படுகிறது. அதேபோல், கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை மக்கள் கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஓணம் பிறந்த வரலாறு:

புராண காலத்தில் மகாபலி சக்ரவர்த்தி மலையாள தேசத்தை ஆண்டு வந்தான். அவன் பிறப்பால் அசுர குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், தன் நாட்டு மக்களிடம் பேரன்பு காட்டினான். ஏராளமான தான, தர்மங்களை செய்தான். இதனால் மகாபலி சக்ரவர்த்தியை மக்கள் போற்றி புகழ்ந்தனர். மூவுலகையும் ஆளும் எண்ணம் மகாபலி சக்ரவர்த்தியின் மனதில் பேராசையாக எழுந்தது. தங்கள் குலகுருவான சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டான். சிவபெருமானை வேண்டி மிகப்பெரிய யாகம் நடத்த வேண்டும் என்று சுக்ராச்சாரியார் கூறினார். யாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மகாபலி மேற்கொண்டான்.

இந்நிலையில், மகாபலியின் யாகம் குறித்து கவலையடைந்த தேவர்கள், இந்திரனிடம் முறையிட்டனர். இதைக் கேட்டதும், மகாபலி இந்த யாகத்தை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டால், அசுர குலத்தை சேர்ந்த மகாபலிக்கு இந்திர பதவி கிடைத்து விடும். அதனால் மூவுலகும் பாதிக்கும் என்று இந்திரன் கலக்கமடைந்தான். உடனே, பிரம்மாவிடம் சென்று ஆலோசனை கேட்டான். இதற்கு மகாவிஷ்ணு மட்டுமே தீர்வு காண முடியும் என்று பிரம்மா கூறி, இந்திரனையும், தேவர்களையும் மகாவிஷ்ணுவிடம் அழைத்து சென்றார்.அவர்களின் மனக்குமுறல்களை கேட்ட மகாவிஷ்ணு, ‘நான் பூலோகத்தில் வாமன அவதாரம் எடுத்து, மகாபலியின் யாகத்தை தடுத்து நிறுத்துகிறேன்’ என்றார். அதன்படியே, மகாவிஷ்ணு மூன்று அடி உயரமுள்ள வாமன அவதாரம் எடுத்து, பூலோகத்தில் மகாபலி சக்ரவர்த்தி யாகம் செய்யும் இடத்துக்கு சென்றார்.

யாகசாலையின் வாசலில் மகாபலியிடம் ஏராளமானவர்கள் தானம் பெற்று கொண்டிருந்தனர். மூன்று அடி உயர வாமனர், ஒரு கையில் ஓலை குடையுடனும், மற்றொரு கையில் கமண்டலத்தையும் ஏந்தியபடி வரிசையில் நின்றார். அவரது முறை வருவதற்கு முன்பே தானம் நிறைவுற்றது. யாகசாலை வாசலில் குடை பிடித்தபடி அந்தணர் உருவில் நின்ற வாமனரைப் பார்த்ததும் மகாபலி எழுந்து வந்தான். ‘நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டான்.வாமனரும் எனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்ட மகாபலி, வாமனரின் கையில் இருந்த கமண்டல நீரை எடுத்து தானம் அளிக்க முன்வந்தான்.

வாமனரிடம் இருந்து கமண்டல நீரை எடுத்து, நிலத்தில் விட்டு மகாபலி தானமாக வழங்குவதாக கூறினான். உடனே, வாமனர் விஸ்வரூபம் எடுத்து, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந் தார். ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே’ என்று மகாபலியிடம் கேட்டார். இதை பார்த்து பரவசப்பட்ட மகாபலி, மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘மூன்றாவது அடியை என் தலைமீது வையுங்கள்’ என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலி சக்ரவர்த்தியை பாதாள உலகுக்கு அனுப்பினார்.

பாதாள உலகத்துக்கு தள்ளிய மகாவிஷ்ணுவிடம், "கடவுளே, நான் இதுவரை என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். எனவே, வருடத்துக்கு ஒருமுறை என் நாட்டு மக்களை காணும் வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும்" என்று மகாபலி வேண்டுகோள் விடுத்தான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்தருளினார்.அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளையே கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்கின்றனர். 'கானம் விற்றாவது ஓணம் உண்' என்பது கேரளா பழமொழி. அதற்கேற்ப, அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளை கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்கின்றனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, "இந்த நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்" என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் அதேபோல், இந்த ஓணம் பண்டிகை நமது சகோதரத்துவ உணர்வு, தேசிய ஒருமைப்பாடு, கடின உழைப்பு ஆகியவற்றை பலப்படுத்துவதோடு, அதன்மூலம் நம் நாட்டை எல்லாவிதத்திலும் நல்ல முறையில் வழிநடத்தி செல்லும் விதமாக அமையட்டும் என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாதி, சமய பேதமின்றி, அனைத்து தரப்பு மக்களாலும் சமத்துவத்துடன் ஒற்றுமையாக கொண்டாடப்படும் ஓணத் திருநாளில், உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் உயர்ந்து தழைக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன் என தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Kerala Onam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment