தொடங்கியது பொறியியல் கலந்தாய்வு: வசதிகளில் பின்னடைவு

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வசதிகளில் குறைபாடு காணப்படுவதால் மாணவர்கள் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வசதிகளில் குறைபாடு காணப்படுவதால் மாணவர்கள் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் இரண்டு நாட்களான நேற்றும் இன்றும் தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், மொத்தம் 6,224 இடங்களுக்கு 2,083 பேர் தகுதி பெற்றுள்ளார்கள்.

தொடர்ந்து, ஜூலை 19-ம் தேதி (நாளை) மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதனையடுத்து, விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் நாள் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் போது, மாணவர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படும். ஒவ்வொரு ஆண்டும், கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கும், அவர்களுடன் வரும் பெற்றோரில் ஒருவருக்கும் சென்னைக்கு வந்து செல்ல அரசு பேருந்துகளில் இலவச பாஸ் வழங்கப்படும். மாணவர்கள், தங்களின் அழைப்பு கடிதத்தை காட்டி அரசு பேருந்துகளில் இலவசமாக சென்னை வரை பயணிக்கலாம். கலந்தாய்வு முடிந்ததும், அதே கடிதத்தை காட்டி திரும்ப செல்லலாம். அதேபோல், மாணவியர் மற்றும் அவருடன் வருவோர் தங்குவதற்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இட வசதி செய்யப்படும்.

இது மட்டுமல்லாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்லூரிகளில் உள்ள காலி இடங்கள் குறித்து அடுத்தடுத்து தெரிவிக்கப்படும். ஒவ்வொரு கலந்தாய்வு அமர்வு முடிந்த பின்னரும், அதன் விவரங்கள் பிரத்யேக இணையதளத்தில் வெளியிடப்படும். கட்-ஆஃப் மற்றும் மாணவர்களுக்கான அமர்வு நேரம் உள்ளிட்டவையும் காட்சி பலகைகள் மூலம் தெரிவிக்கப்படும். கழிவறைகளுக்கு செல்லும் வழி, உடற்தகுதி சான்றிதழ் பெறுவதற்கு செல்லும் வழி உள்ளிட்டவைகள் வழிகாட்டு பலகைகள் மூலம் தெரிவிக்கப்படும். அண்மை காலங்களாக, ஸ்டால்கள் அமைக்கப்பட்டு கல்வி கடன்கள் குறித்து வங்கி ஊழியர்கள் விளக்கம் கொடுத்து வருகிறார்கள். தவிர, வழிகாட்டுதல் கையேடும் தரப்படும். பல்கலைக்கழகம் சார்பில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களுக்கான அமர்வு நேரம் வரை காத்திருக்க கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், முதல் நாளான நேற்று இந்த வசதிகள் எதுவும் இடம் பெறவில்லை. பஸ் பாஸ் பெறுவது உள்ளிட்ட விவரங்களை கலந்தாய்வு கமிட்டி இதுவரை வெளியிடவில்லை. கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விபரங்களையும், இணையதளத்திலோ, ஊடகங்கள் மூலமோ, பொறியியல் கலந்தாய்வு கமிட்டி வெளியிடவில்லை. இதனால், மாணவர்கள் மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

“கல்லூரி மற்றும் அதிலுள்ள இடங்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும். செல்போன் ஆஃப் மூலமாகவும் அதனை தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த முறை அந்த வசதிகள் எதுவுமில்லை” என தனது அமர்வுக்காக காத்திருந்த மாணவர் ஒருவர் வேதனை தெரிவித்தார்.

இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில்,”பொதுப்பிரிவு கலந்தாய்வின் போது அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்” என்றனர். ஆனால்,”பொதுப்பிரிவு கலந்தாய்வு மாணவர்களை விட எந்த விதத்தில் தொழிற்பிரிவு மாணவர்கள் குறைவானவர்கள்” என மாணவர் ஒருவரின் பெற்றோர் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

முதல் பத்து தொழிற்பிரிவு மாணவர்களுக்கு கல்லூரி இட ஒதுக்கீட்டு கடிதங்களை வழங்கிய உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “வருகிற நாட்களில் வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். கலந்தாய்வுக்கு வரும் மாணவியர்கள் மற்றும் அவருடன் வரும் பெண் உறவினர் ஒருவருக்கு பல்கலை., வளாகத்திலேயே தங்க வசதி செய்து தரப்படும்” என்றார்.

மேலும், பொதுப்பிரிவு கலந்தாய்வில் நாளொன்றுக்கு ஒன்பது அமர்வுகள் நடைபெறும். அமர்வு ஒன்றுக்கு மாணவர்கள் 60 பேர் பங்கேற்பர். விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் நாட்களான ஜூலை 19 மற்றும் 20-ம் தேதியில் கலந்து கொள்ளாத மாணவர்கள், ஜூலை 21-ம் தேதி நடைபெறும் விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

×Close
×Close