Advertisment

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணைய அறிவிப்பு கண்துடைப்பு நாடகம்: ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையில் ஆர்வமும், அக்கறையும் இருக்குமென்றால், மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணைய அறிவிப்பு கண்துடைப்பு நாடகம்: ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு கண்துடைப்பு நாடகமே என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்து 8 மாதங்கள் கழித்து, “அவரது மர்ம மரணம் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்படும்”, என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு ‘ஊழல் அணிகள் சங்கமம்’ ஆவதற்காக அரங்கேற்றப்பட்டுள்ள கண்துடைப்பு நாடகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல மாதங்களாக தொடர்ந்து கோரிக்கை எழுப்பிய போதும், அதற்கெல்லாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மர்ம மரணத்தின் தடயங்கள், வீடியோ காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்று அமைதி காத்தவர்கள்தான் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும், இன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 22.9.2016 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5.12.2016 அன்று மரணம் அடையும் வரை அத்தனை ரகசியங்களையும், மர்மங்களையும் மறைத்தவர்கள் இந்த இருவரும் மட்டுமல்ல- அமைச்சர்களும்தான். அதிலும் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் 11.10.2016 முதல் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் பொறுப்புகள் அனைத்தையும் கவனித்து முதலமைச்சர் பொறுப்பிலே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு 5.2.2017 அன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் வரை அமைதியாக இருந்த பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதி முன்பு 40 நிமிடங்கள் தியானம் இருந்து விட்டு திடீர் ஞானோதயம் வந்தவராக “பொறுப்பில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அம்மாவின் மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்”, என்று அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16 ஆம் தேதி முதலமைச்சராக நியமிக்கப்படும் வரை விசாரணைக்கான எந்த உத்தரவும் வெளியாகவில்லை.

அதற்கு மாறாக 6.2.2017 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை அழைத்து வந்து தமிழக அரசு மருத்துவரையும் பங்கேற்க வைத்து, “ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை”, என்பதாக விரிவான பத்திரிக்கையாளர் சந்திப்பே நடைபெற்றது. அப்போதும் முதலமைச்சராக பதவியில் நீடித்தவர் பன்னீர்செல்வம் தான். பிறகுதான் ‘தர்மயுத்தம்’ என்று புதிய அவதாரம் எடுத்து “ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்”, என்று திடீரென்று கோரிக்கை வைத்தார் பன்னீர்செல்வம்.

இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16 ஆம் தேதியிலிருந்து ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எவ்வித விசாரணைக்கும் உத்தரவிடவில்லை. விசாரணைக் கமிஷனை அமைக்கவும் முன் வரவில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வைத்தியநாதன் அவர்கள், “ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது”, என்று கூறிய பிறகும் கூட இப்படியொரு விசாரணைக் கமிஷனை அமைக்கவில்லை. மாறாக, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது”, என்று பேட்டியளித்த டாக்டர் சீதாவை ஒரு பெண் என்றும் பாராமல் கைது செய்து சிறையில் அடைத்தது எடப்பாடி பழனிசாமி அரசுதான்.

இப்படி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இந்த கோரிக்கை வைக்கப்பட்ட போதெல்லாம் “அது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது”, என்று கூறி தட்டிக் கழித்தது மட்டுமல்ல, தடயங்களை முழுவதும் மறைக்க உதவி செய்தவர்கள்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும். செப்டம்பர் 22-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 5 ஆம் தேதி வரை முதலமைச்சரின் பொறுப்புகளை கவனித்து வந்த திரு. பன்னீர்செல்வம், முக்கியத்துவம் வாய்ந்த ஐவர் குழு அமைச்சர்களாக இருந்தவர்களில் ஒருவரான திரு. எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலை குறித்த மர்மங்களை மறைத்தார்கள்.

பிறகு 5.12.2016 முதல் 16.2.2017 வரை இருவரும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை மறைத்தார்கள். 16.2.2017 முதல் இன்றுவரை ஆறு மாதங்களுக்கு மேல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மத்தை இரும்புத் திரை போட்டும், கைது நடவடிக்கைகள் எடுத்தும் முற்றிலும் மறைத்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த கூட்டணிதான் இப்போது விசாரணைக் கமிஷன் அறிவித்திருப்பதிலும் தொடருகிறது.

இந்த இரு அணிகளிலுமே, தமிழகத்தை எப்படிக் கொள்ளையடிப்பது, அரசு கஜானாவை எப்படியெல்லாம் சுரண்டுவது, மெகா ஊழல்களில் எப்படி ஈடுபடுவது போன்றவற்றை மட்டுமே கலையாக கொண்டு ஆட்சியில் இருந்தவர்கள், இருப்பவர்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. “தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ரெய்டு”, “மணல் ரெட்டி ஊழல்” “ஆர்.கே. நகர் 89 கோடி ரூபாய் ஊழல் பணம் கண்டுபிடிப்பு” “கரூர் அன்புநாதன் ரெய்டு” “அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு” “முதலமைச்சர் மீதே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை” “குதிரை பேரம் குறி்த்து விசாரிக்க ஆளுநர் உத்தரவு”, என்று ஊழல்களின் ஊற்றுக்கண்களாக இருதரப்பும் இருக்கும் நிலையில், பன்னீர்செல்வம் அணி “தர்மயுத்தம்” என்று நாடகம் போடுவதும், ஊழல் கடலில் மூழ்கி நீச்சலடித்துக் கொண்டிருக்கும் திரு எடப்பாடி பழனிசாமி அணி “ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணைக் கமிஷன்” என்பதும் தமிழக மக்களை ஏமாற்றும் வேலை மட்டுமல்ல, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை முன் வைத்து தர்மயுத்தத்தை முடித்துக் கொண்டு, இரு அணிகளும் இணைந்து, ‘சச்சரவின்றி ஊழல் அத்தியாயத்தை’ தொடங்கப் போடுகின்ற மோசடித் திட்டம் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, இந்தக் கண்துடைப்பு நாடகத்தை கைவிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையில் ஆர்வமும், அக்கறையும் இருக்குமென்றால், மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த விசாரணை முறையாக நடக்க, இந்த மர்ம மரணத்திற்கு துணை போன அல்லது கடந்த 8 மாதங்களாக அது தொடர்பான சாட்சியங்கள், தடயங்கள் மறைப்பதற்கு மனப்பூர்வமாக ஒத்துழைப்பு வழங்கிய பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அமைச்சரவையிலும் தொடர்பவர்கள் - புதிதாக இடம்பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, புதிய அமைச்சரவை ஒன்றை அமைத்து, அதன்கீழ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும், குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த மர்ம மரணம் குறித்த சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு வழிவிட்டு, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

Mk Stalin Dmk Jayalalithaa Poes Garden
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment