Advertisment

ஜெ. கொண்டு வந்த சட்டம் என்னாச்சு?  கலெக்டர்கள், எஸ்.பி.க்களுக்கு முதல்வர் அவசர உத்தரவு

கந்துவட்டிக்கு ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கலெக்டர்கள், எஸ்.பி.க்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu money lenders act, tamilnadu government, cm edappadi palaniswami, cm edappadi palaniswami order to all collectors and sp's, apply the money lending act

கந்துவட்டி கொடுமைக்கு ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கலெக்டர்கள், எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருக்கிறார்.

Advertisment

திருநெல்வேலி கலெக்டர் அலுவலத்தில் கடந்த திங்கட்கிழமை மனுநீதிநாள் முகாம் நடந்தபோது, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கந்து வட்டிக் கொடுமைதான் இதற்கு காரணம் என தெரியவந்தது. எனவே மாநிலம் முழுவதும் கந்து வட்டிக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமிவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக சில சமயங்களில் தனியாரிடம் பணம் கடன் வாங்குகின்றனர். இதனைப் பயன்படுத்தி கடன் கொடுத்தவர்கள் கடன் வாங்கியவர்களை சட்டத்திற்கு புறம்பாக அதிக வட்டி கேட்டு வற்புறுத்துகின்றனர்.

இத்தகைய அதிக வட்டி வசூலிக்கும் தனியாரிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக புரட்சித் தலைவி அம்மா 2003-ம் ஆண்டு “தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003” என்ற சட்டத்தை கொண்டு வந்தார். இந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

இந்தச் சட்டத்தின் மூலம் மக்களிடமிருந்து அதிக வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வட்டிக்கு பணம் பெற்றவர்கள், தாங்கள் பெற்ற தொகையை நீதிமன்றத்தின் மூலம் செலுத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதீத வட்டி வசூல் செய்பவர்கள் தங்களிடம் பணம் பெற்றவர்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கைப்பற்றியிருந்தால், அதனை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்கச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று, அதீத வட்டி வசூல் செய்பவர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற பல அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

அம்மாவின் ஆசியுடன் செயல்படும் இந்த அரசும் அதீத வட்டி வசூல் செய்பவர்களிடமிருந்து பொது மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மாவினால் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003-ன் அடிப்படையில் அதீத வட்டி சம்பந்தமாக மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்கும்படி நான் மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

எனவே பாதிக்கப்பட்ட பொது மக்கள் எந்தவிதமான அச்சத்திற்கும் ஆளாகாமல், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை அதிகாரிகளையும் அணுகி, தக்க நிவாரணம் பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment